திருப்பரங்குன்றத்து முருகன் சம்பந்தம்:
திருப்பரங்குன்றம் முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் ஒன்று. கடைச்சங்க காலத்திலேயே அது அவ்வாறு சிறப்புப் பெற்றுவிட்டது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் முதலாவதாக வைத்துப் பாடப்படுவது அதுதான். பழங்குறிப்புகளிலிருந்து முருகனுடைய வழிபாட்டுத்தலம், திருப்பரங்குன்றத்தின் வடபுறச்சரிவில் அடிவாரத்தில் இருந்திருக்கிறது. கடைச்சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகள் சமயத்தில் திருப்பரங்குன்றத்தின் தென் பக்கச் சரிவில் குடைவரைக் கோயில்களை இடைக்காலப் பாண்டியர்கள் கட்டினர்.
குடைவரைக் கோயில் என்றால் பாறையை அப்படியே குடைந்து அதில் சிற்ப வேலைப்பாடுகள், தூண்கள் ஆகியவற்றையும் செதுக்கி நிறுவி அமைக்கப்படும் கோயில். மேலும் கீழுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள். இப்போது கண்ணுக்குத் தெரிவது ஒன்றுதான். மேலேயுள்ளது.
கீழேயுள்ளது.....
கீழேதான் இருக்கிறது. பார்க்கமுடியாது. ஆகவே இருப்பதுவும்கூட வெளிப்படத் தெரியாது. எல்லாம் அவளுக்கே வெளிச்சம். அவற்றில், மேலேயுள்ள குடவரைக் கோயில் ஐந்து கருவறைகளைக் கொண்டிருந்தது. சிவன்,விஷ்ணு, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு அவை உரியவையாயிருந்தன. அந்த தெய்வங்களின் புடைப்புச் சிற்பங்கள் அந்த கருவறைகளில் திகழ்ந்தன. ஆனால் அவற்றுள் முருகனுக்குரிய கருவறை இல்லாமலிருந்தது. ஏனெனில் முருகனின் சன்னிதி அங்கேயில்லை. திருமலை நாயக்கர் செய்த திருப்பணிகளில் திருப்பரங்குன்றக் கோயிலும் ஒன்று. அவர் அக்கோயிலைப் பெரிதாக எடுத்துக்கட்டி, அழகு படுத்தினார். மேலேயுள்ள ஐந்து தெய்வங்களுடன் முருகனுக்கும் ஒரு சன்னிதியை ஏற்படுத்திவைத்தார். அதில் முருகனுக்கும் சிலை எடுப்பித்தார். ஆனால் அது புடைப்புச் சிற்பமல்ல.
இவ்வளையும் செய்துவிட்டு அந்த சன்னிதியில் ஒரு நல்ல இடத்தில், நல்ல தூணில், பார்க்கக்கூடிய உயரத்தில், பட்டமகிஷிகள் புடைசூழ, தன்னுடைய உருவச்சிலையையும் வைக்கச்செய்தார். மலையின் வடபுறத்தில் இருந்த முருகத்தலம் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து தென்புறத்திலிருந்த ஐந்து தெய்வங்களின் கூட்டுக்கோயில்தான் அதிகாரபூர்வமாக திருப்பரங்குன்றது முருகன் கோயிலாக மாறிவிட்டது.
மதுரை வட்டாரத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. "திருமலை நாயக்கன் திருப்பரங்குன்றத்தைத் திருப்பி வச்சான்." வடபுறத்து வழிபாட்டுத்தலம் தென்புறத்துக்கு வந்துவிட்டதல்லவா? இங்கிருந்து முருகனை மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு எழுந்தருளச்செய்துவிட்டார். ஏற்கனவே மதுரையில் இருந்த கூடல் முருகன், சோமாஸ்கந்தர் சம்பிரதாயத்துடன் இது கலந்துவிட்டது. அப்படித்தான் திருப்பரங்குன்றது சுப்பிரமணியர், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ளும் மரபு நிறுவப்பட்டது. வந்தவர் சும்மாவா வருவார்? அந்த வட்டாரத்து மக்கள் கூட்டத்தை யெல்லாம் அவர் பங்குக்குக் கூட்டிவந்தார்.
இதையெல்லாம் நாயக்கர் எப்படிச்செய்தார்?
'The Good, the Bad, and the Ugly' என்ற படத்தின் கடைசிக்காட்சியில் Clint Eastwood துப்பாக்கியை நீட்டியவாறு Eli Wallach இடம் சொல்வார்......
"In this world, there are two kinda people.
Them that carry guns; and them that dig.
You dig".
நாயக்கரிடத்திலும் துப்பாக்கி இருந்தது. பணமும் இருந்தது. இரண்டையும் செலுத்த அதிகாரமும் இருந்தது. மூன்றையும் சேர்த்து பிரயோகிக்க ஆள்பலமும் இருந்தது. அதற்கு மேல் குயுக்தியும் இருந்தது. அதற்கும் மேலாக தைரியம் இருந்தது
எல்லாவற்றையும்விட தன்னம்பிக்கை இஇருந்தது.