ஐந்துக்கும் அப்பால்
அன்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தறிவுகளுக்கு அப்பாற்பட்ட அறிவுகள் உள்ளன என்பதைப் பற்றி ஒரு மடல் தொடரை எழுத ஆரம்பித்தேன்.
'Beyond The Fifth' என்னும் தலைப்பு.
அதில் ஐம்புல அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆறாவது அறிவி, ஏழாவது, எட்டாவது போன்ற அறிவுகளைப் பற்றி எழுத நினைத்தேன்.
மூன்றே மடல்களுடன் அந்தத் தொடர் நின்றுபோய்விட்டது.
'ஊம்' கொட்ட ஆளில்லாமல் போய்விட்டதுதான்.
இப்போதுதானே 'ஏழாவது அறிவு' படம் வந்து இதெல்லாம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மூன்று மடல்களையும் திரட்டி, ஒருங்கிணைத்து வைத்தேன்.
முடிந்தால் இதைத் தொடரலாம்.
'கைவல்ய நவநீதம்', 'ஒழிவில் ஒடுக்கம்' போன்ற அரிய நூல்களையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்கலாம் அல்லவா?
` இப்போது படியுங்கள்........
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஐம்புல அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆறாவது அறிவு இருக்கிறது. தமிழ் மரபில் 'ஆறறிவு படைத்த மனிதன்' என்றும் 'ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள்' என்றும் சொல்வதுண்டு அல்லவா.
மேற்கத்திய மரபுப்படி, அவர்கள் ஐம்புல அறிவைக் கணக்கில் கொண்டு அந்த ஐம்புலன்களால் உணரப்பட முடியாத அறிவை-உணர்வை ஆறாவது அறிவு என்று கொள்கிறார்கள். Sixth Sense என்று அதைக் குறிப்பிடுவார்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவை-உணர்வை அவர்கள்
Extra-Sensory Perception என்று சொல்வார்கள். இதையே சுருக்கி ESP என்பார்கள்.
நம்முடைய மரபுப்படி எடுத்துக்கொண்டோமானால் ஆறாவது அறிவுக்கும் அப்பாற்பட்ட
அறிவுகளும் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதை நன்கு அறிந்தவர்கள்......
ஐம்புலன்களின் செயல்பாட்டை மிகவும் குறைத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் Feed-back முதலியவற்றில் மிக மிக அடிப்படையான, மிக அதிகத் தேவையானவற்றை மட்டும் உணர்ந்து கொண்டு, அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றபடிக்கு மற்ற எல்லா ஐம்புலத் தகவல்களையெல்லாம் தடுத்துவிடுவார்கள்.
"ஐம்புலக் கதவை அடைப்பது" என்ற ஔவையார் வாக்கைத் தேவையான அளவுக்கு மட்டும் பின்பற்றி, அந்தக் கதவை அரைக்குறையாகச் சார்த்திக் கொள்வார்கள்.
இந்த நிலையில் அந்த அதீத அறிவு வேலைசெய்யும். ஐம்புலக் குறிக்கீடு குறைவான நிலையில் அது சிறப்பாக வேலை செய்யும்.
செங்கல்களை அடுக்கிவைத்துக்கொண்டு, அவற்றை ஒரே குத்தில் உடைக்கப்போகும் அந்த டைக்குவாண்டோ வீரனின் மனநிலையையும் கண்கள் முதலிய அவயவங்களையும் கவனித்திருக்கிறீர்களா.
ஹை ஜம்ப் விளையாட்டன் ஓடிப்போய் குதிப்பதற்கு முன்னால் தூரத்தையும் குறுக்குக் கம்பையும் பார்த்தவாறு இருப்பான். பின்னர் குறுக்குக் கம்பத்தை மட்டும் பார்ப்பான். அதன் பின்னர் மெதுவாக உடலை முன்புறமாகச் சாய்த்து நின்று அதன்பின் குதித்துக் குதித்து ஓடி, உயரத்தைத் தாண்டுவான்.
இவர்களெல்லாம் கண் சிமிட்டுவது இல்லை.
டைகர் வூட்ஸ் என்பவர் ஒரு கோல்·ப் வீரர். எனக்கு மிகவும் பிடித்த ஆள். பெயர் ராசி. ஆகவே இன்னும் அதிகமாகப் பிடிக்கும்.
அவர் கோல்·ப் விளையாட்டில் அந்தக் கடைசி - அதாவது winning தட்டைத் தட்டப் போகும்போது நீண்ட நேரம் ஏதோ ஓர் ஒடுக்கத்தில் இருப்பார். கண்கள் திறந்தவாறு இருக்கும். கண்களைச் சிமிட்டவோ அசைக்கவோ மாட்டார். மூச்சு விடுகிறாரா என்பதைக்கூட அறியமுடியாது. மிக மிக மெதுவாகத் தோள்பட்டை, கைகள், மேல் உடம்பு மட்டும் லேசாக அசைந்து, அப்படியே லேசாகத் தட்டுவார்.
பந்து குழிக்குள் செல்லும்.
அப்படித்தான் சொல்லவேண்டும்.
ஏதோ ஒரு மானசீகக் கட்டளையை மேற்கொண்டு கோல்·ப் பந்து அப்படியே உருண்டு சென்று குழிக்குள் விழுந்து கட்டளையை நிறைவேற்றும்.
இந்த மாதிரியான Subliminal நிலை தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும்.
அஷ்டாங்க யோகத்தில் தாரணை என்றொன்றுண்டு.
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டூடே வெளியுறத் தானோக்கிக்
காணக்கண் கேளாச்செவி என்றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியதுவாமே
அந்த அளவுக்குப் போகமட்டுமே அது பயனாவதில்லை.
கோல்·ப் அடிக்கவும் பயன்படுத்தலாம்.
எல்லாம் ஒன்றுதான்.
Its All A Matter Of Application.
'ஸ்டார் வார்ஸ்' படம் முதன்முதலில் வந்த புதிது. ஸ்டார் வார்ஸ் வரிசையிn ஆறு படங்களில் நான்காம் நம்பர்தான் முதலில் வந்தது.
அதில் நாம் இருக்கும் அண்டமாகிய மில்க்கிவேய் MilkyWay என்னும் கேலக்ஸியில் Galaxy ஓர் அஷ்டமாசித்தி சாம்ராஜ்யம் நிறுவப்பட்டிருக்கும்.
சித்திகள் கைவரப்பெற்ற 'சித்' என்னும் சித்த வீரர்கள் ஒரு மஹா சித்தனாகிய எம்ப்பரரின் தலைமையில் இருப்பார்கள்.
ஒரு மகாவீரனின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட க்லோன்களால் ஆகிய பெரும் படைகள் அவர்களிடம் இருக்கும். பயங்கர ஆயுதங்கள். பலவகையான விமானங்கள்; பிரம்மாண்டமான பறக்கும் கப்பல்கள்.
இவர்களை எதிர்க்கக் கூடியவர்கள் ஜெடாய் எனப்படும் இன்னொரு வகை சித்தர் கூட்டம். அவர்களும் வீரர்கள்தாம். அண்டத்தில் அமைதி காப்பவர்கள் அவர்கள்.
ஒரு மாஜி ஜெடாய் மாவீரன் யாராலும் வெல்லப்பட முடியாத அளவுக்கு விளங்குவான். அவனுடைய உடலின் பெரும்பகுதி பையானிக் எனப்படும் செயற்கைப் பகுதிகளால் ஆனது.
அவன் பெயர் டார்த் வேடர்.
எம்ப்பையரின் எதிரிகளை வேட்டையாடுவது அவன் பொறுப்பு.
இந்த பிரபஞ்சமெங்கும் பரவி இருப்பது The Force எனப்படும் மகாசக்தி. அதிலேயே இரண்டு பகுதிகள். இருளும் அஞ்ஞானமும் நிறைந்த ஒரு பக்தி; பிரகாசமும் ஞானமும் நிறைந்த அருட்பகுதி இன்னொன்று. ஜெடாய் வீரர்களுக்கு அருட்சக்தியின் ஆற்றல் உண்டு. சித்கள் இருளிலிருந்து அசுர ஆற்றல்களைப் பெறுவார்கள்.
ஜெடாய்களையெல்லாம் டார்த் வேடரும் எம்ப்பரரும் அழித்துவிடுவார்கள்.
வான் கெனோபி என்பவரும் யோடா என்னும் மகாசித்தரும்தான் எஞ்சுவார்கள்.
எம்ப்பரரின் படைகள் அண்டம் முழுவதையும் பிடித்துவிட்டாலும் ஆங்காங்கு புரட்சி உலகங்கள் போராடிக்கொண்டிருந்தன.
லேயா என்னும் இளவரசிதான் அவற்றிற்குத் தலைவி.
ல்யுக் என்னும் இளைஞன் அவளுடைய தம்பி. இன்னோர் உலகத்தில் தலைமறைவாக சாதாரண விவசாயியாக வளர்க்கப்பட்டுவருவான்.
என்னென்னவோ நடந்துபோய், கெனோபியிடமும் யோடாவிடமும் சித்திகளில் பயிற்சி பெறுவான்.
ஆனால் சித்தி பெறுவதில் அவனுக்கு நம்பிக்கையும் குறைவு; முயற்சியும் ஒருமைப்பாடும் தீட்சண்யமும் இல்லை. ஆகவே தோல்வியடைந்தே வந்தான்.
டார்த் வேடருடன் நடந்த வாட்போரில் கெனோபி தன்னுடைய பூத உடலை நீத்துவிடுவார். சூட்சுமமாக சஞ்சரிக்க ஆரம்பிப்பார்.
டெத் ஸ்டார் என்னும் மிகப்பெரிய செயற்கை கிரகம் ஒன்றை டார்த் வேடர் நிறுவுவான். அது சக்தியை ஏற்படுத்தி குவிய வைத்து, பாய்ச்சி முழு முழு உலகங்களை அழிக்கும் ஆற்றல் படைத்தது.
அதற்கு ஒரு பலவீனமான இடம் உண்டு.
அதைப் புரட்சிக்காரர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
ராக்கெட் விமானங்களின் மூலம் அந்த இடத்துக்குச் சென்று, எதிரிகளின்
தாக்குதல்களிலிருந்து தப்பி, குறிப்பிட்ட ஒரு கணத்தில் குண்டு போட வேண்டும். அந்தக் குண்டு பலவீனத்தைத் தாக்கி அழித்துவிடமுடியும். ஆனால் குறி மட்டும் தவறவே கூடாது.
ஆனால் யாராலும் அதைச் செய்யமுடியாது.
எப்படியோ அவர்களின் கணிப்பும், கவனமும், குறியும் தப்பிவிடும்.
ல்யூக் மட்டுமே எஞ்சியிருக்கும்போது, கெனோபி அருவமாக அவனிடம் தன்னுடைய ஐம்புலன்களையும் ஒடுக்கிவிட்டு, மஹாசக்தியான ·பார்ஸின் மூலம் குண்டை ரிலீஸ் செய்யுமாறு சொல்வார்.
கடைசிநேரத்தில் ல்யூக் கண்களை நேராக வைத்துக்கொண்டு எதிலுமே கவனத்தைச் சிதறவிடாமல் புலன்களுக்கு அப்பால் உள்ள நிதானத்தின்மூலம் குண்டை ரிலீஸ் செய்துவிடுவான்.
அது டெத் ஸ்டார்ன் உட்புறமுள்ள வர்ம ஸ்தானத்தில் வெடித்து டெத் ஏடாரை அழித்துவிடும்.
இதும் யோகசித்திதான்.
மலேசியாவில் Cobra King என்ற பட்டத்தை வைத்திருக்கிறவர் ஒருவர் இருக்கிறார். இன்னொருவரும் இருந்தார். எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நல்ல பாம்பு, விரியன் பாம்பு முதலியவற்றை வசியப் படுத்தி அவற்றுடன் விளையாடிக் காட்டுவார்.
நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகளுடன் பலநாட்கள் ஒரே கண்ணாடிக் கூண்டில் வசித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
அவரிடம் ஒருமுறை கேட்டேன்.
அவர் தம்முடைய மன ஆற்றலால் பாம்புகளை வசியப் படுத்துவதாகச் சொன்னார்.
"அது என்ன ஹிப்னட்டிஸமா, அல்லது மெஸ்மரிஸமா?" என்று கேட்டதற்கு, "You can call what you want, Sir", என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆமோதிக்கவுமில்லை; மறுக்கவுமில்லை.
தரையில் கிடக்கும் பாம்பை உசுப்பிவிடுகிறார்.
அது தலையைத் தூக்கி ஆடுகிறது. நல்ல பாம்பாக இருந்தால் படமெடுத்து ஆடுகிறது.
அதன் லெவலுக்குக் கீழே தரையில் கைகளையும் கால்களையும் பரப்பி ஊன்றிக்கொண்டு, தரைக்கு மேல் கொஞ்ச உயரத்திலேயே படுத்த மாதிரியாக, ஆனால் தரையில் உடல் படாமல், அப்படியே இங்கும் அங்குமாய் லேசாக அசைகிறார். ஆனால் பார்வை மட்டும் பாம்பின் கண்களின்மேல். பார்வையை மட்டும் திருப்புவதேயில்லை. கண்களைச் சிமிட்டுவதுமில்லை. ஏதோ ஒரு கனவு நிலையிலிருப்பதுபோல் இருக்கிறார்.
அதன் பின் ஒரு கையை மட்டும் தூக்கி, பாம்பின் தலைக்கு நேரே பக்கவாட்டில் மிக மெதுவாக அசைக்கிறார். பாம்பு மிக லேசாக தலையை பக்கவாட்டில் அசைக்கிறது. அப்புறம் அவரும் அசையாமல் இருக்கிறார். பாம்பும் அசையாமல் இருக்கிறது. பிறகு அந்தக் கையைப் பாம்பின் தலைக்கு மேலே மெதுவாகக் கொண்டு செல்கிறார்.
பாம்பின் தலை மண்டையின் பின்புறத்தில், கழுத்துக்கு மேற்புறமாக நடுவிரலால் தொட்டு தடவுகிறார். அது அசையாமல் இருக்கிறது. அதன்பின் அதை அப்படியே எடுக்கிறார். அது பாட்டுக்கு வளைந்து நெளிந்து அவர் கையில் இருக்கிறது. சீறவில்லை.
அதை அப்படியே கிட்டத்தில் கொண்டுவந்து அதன் வாயில் முத்தமிடுகிறார்.
இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது பார்வையை மட்டும் அசைக்கவில்லை. கண்களைச் சிமிட்டவும் இல்லை. அரைக்கண்களை மூடிய பாவனையில் Intense Look என்பார்களே அது மாதிரியான ஒரு தீட்சண்யமான பார்வை.
அந்த டைகர் வூட்ஸ் பந்தைத் தட்டுமுன்னிருக்கும் நிலை; பார்வை.
பார்த்துக்கொண்டிருப்பவர்களே ஆடாது அசையாது லயித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஹிப்னட்டிஸமா, மெஸ்மரிஸமா......
அல்லது வர்மமா?
எல்லாம் கலந்த மாதிரி இருக்கிறது.
பின்னணியில் ஏதும் மந்திரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அமானுஷ்ய சக்தி என்று நாம் சொல்லும் அந்த சில சக்திகளெல்லாம் அடிப்படையில் மானுஷ்யமாக - அதாவது மனிதர்களால் மனித இச்சையால்தான் இயக்கப்படுகின்றன.
இன்னும் ஒரு கதையைச் சொல்லலாம்......
கேட்க ஆசைப்பட்டால்......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புடன்
ஜெயபாரதி