Thursday, 2 June 2011

மெதுவாக, தொடர்ச்சியாக, ஆனால் நிச்சயமாக

ஒரு கதை. 
படிப்பதற்கு வேடிக்கையாகவும் ஹாஸ்யமாகவும் இருப்பதுபோல் தோன்றும்.  ஆனால் இதில் ஆழமான கருத்தும், நீதியும், குறியும், செயல்பாடும், விடாமுயற்சியும் பொறுமையும் மிளிர்கின்றன.

இரண்டாம் உலக யுத்ததின்போது ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சுநாடுகளை முறியடிப்பதற்காகக் அமேரிக்கா, பிரிட்டிஷ் பேரரசு. ஃபிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் கூட்டணி அமைத்திருந்தன.  'நேசநாடுகள்' என்று அந்தக் கூட்டணியை அழைத்தார்கள்  போரின் போக்கைப் பற்றி அலசுவதற்கும், போரில் வென்றபின்னர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் ஆட்சிகளை யாரைக்கொண்டு  எப்படி அமைக்கவேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுக்கொண்டிருப்பார்கள்.  கய்ரோ, தெஹரான், யால்ட்டா, பாட்ஸ்டாம் போன்ற இடங்களில் அவர்கள் நடத்திய  சந்திப்புகளும் தீர்மானங்களும் உலகின் தலைவிதியை நிர்ணயித்தவை. 

யால்ட்டா என்னும் இடத்தில் ஏற்பட்ட சந்திப்பின்போது ஒரு நாள். 

பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலும், ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அலங்காரக் குளத்தின் அருகே அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுவிலிருந்த மேஜையில் சில பானங்கள். ஸ்டாலினின் வாட்கா ஒரு கிளாஸிலும், சர்ச்சிலின் தேநீர் ஒரு கோப்பையிலும் இருந்தன. மெதுவாக தேநீரைச் சிறுகரண்டியால் சர்ச்சில் சுழற்றிக் கொண்டிருந்தார். ஏதோ சிந்தனை. ஸ்டாலின் வோட்காவாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்.    தடாகத்தில் பொன்மீன்கள்-gold fish நீந்திக்கொண்டிருந்தன. அவற்றில் ஒரு மீன் பெரிதாக இருந்தது.  அப்போது அந்தப் பக்கமாகத் தன்னுடைய சக்கரநாற்காலியில் அமேரிக்க ஜனாதிபதி ரூஸவெல்ட் வந்தார். அவருக்கு விசிறிவிட்டவாறு சீனாவின் ஜெனரலிஸ்ஸிமோ சியாங்க்காய்ஷெக் பின்னால் நின்றார். 

இருவரையும் ஒரே இடத்தில் பார்த்த ரூஸவெல்ட், "இந்தத் தடாகத்தில் அதோ ஒரு பெரிய மீன் நீந்துகிறது. அதனை வலையோ தூண்டிலோ இல்லாமல் பிடிக்கவேண்டும்; செய்யுங்கள் பார்க்கலாம்", என்றார்.

ஸ்டாலின் உடனே "டா" என்று சொல்லிவிட்டு, தன் கைத்துப்பாக்கியை எடுத்தார்.  கிளாஸில் முழுமையாக வாட்காவை ஊற்றிக்கொண்டார்.  அப்படியே 'யாம்ஸெங்' செய்தார். "அதென்னது யாம்ஸெங்?" என்று கேட்பீர்கள். சீனர்கள் ஒன்றாகச் சேர்ந்து மது குடிக்கும்போது, கிளாஸ் நிறைய மதுவை  ஊற்றிக்கொண்டு,யாம்ஸெங்" என்று கூச்சலிட்டுக் கூவிக்கொண்டு, அப்படியே கிளாஸை வாய்க்குள் கவிழ்த்துக்கொள்வார்கள்.  யாம்ஸெங் என்றால் 'அடி மேலே'. ஒன்றுமில்லை 'bottoms-up-ஐத்தான் தமிழ்ப் படுத்தினேன். 

குறிபார்த்துச் சுட்டார். "யாம்ஸெங்கின் பின்னர் எப்படி குறிபார்த்துச் சுடமுடியும்?" என்று கேட்கிறீர்கள். அட, உங்களுக்கு வேண்டுமானால் சுடமுடியாது. சிலருக்கு யாம்ஸெங் செய்தால்தான் இன்னும் நுணுக்கமாக எதையும் செய்யமுடியும்.   

ஸ்டாலினின் துப்பாக்கிக் குண்டுகள் தண்ணீரில் பட்டு deflect ஆகி எங்கோ சென்றன.  அந்தப் பொன்மீன் தண்ணீரைவிட்டுத் துள்ளி, "கெக்கெக்கே" என்று தன்னுடைய துடுப்புகளை ஒன்றாகச் சேர்த்து முன்பக்கமாகச் சேர்த்து அடித்துவிட்டு, தண்ணீருக்குள் 'பொளுக்' என்று விழுந்து மறைந்தது. தோட்டாக்கள் தீர்ந்துவிட்டன.  "ந்யெட்" என்று உறுமியவாறு, யோசனையாக ஸ்டாலின் துப்பாக்கியை வாய்க்கு நேரில் வைத்து, துப்பாக்கிக் குழாயிலிருந்து வந்துகொண்டிருந்த புகையை லேசாக ஊதினார்.  வழக்கத்திற்கு மாறாக நிறையப் புகை. ஒருமாதிரியாக வாசமடித்தது. ஒன்றுமில்லை. மீசை பொசுங்கிக்கொண்டிருந்தது.  ரொம்ப ரொம்ப யோசனையாக மீசையின் மீது துப்பாக்கி முனையை வைத்து ஊதிக்கொண்டிருந்தார் அல்லவா? அதான். அதேதான்.

அடுத்தாற்போல சர்ச்சில். 'ப்பஃப், ப்பஃப்' என்று ஆங்கிலத்தில் சுருட்டுப்புகையை இழுத்துவிட்டவாறு, மேஜையின் மீதிருந்த டீக்கோப்பையிலிருந்து அந்தச் சின்னக்கரண்டியை எடுத்தார். 

டிரவுசரின் கால்களை முழங்கால் வரைக்கும் மடக்கிவிட்டுக் கொண்டார். ஷூவையும் ஸாக்ஸையும் கழற்றினார். 

டீ கோப்பையைக் கையில் தூக்கிக்கொண்டு தடாகத்தில் இறங்கினார். 

குனிந்து ஒரு கோப்பை நிறையத் தண்ணீரை மொண்டார். எடுத்துக் கரையில் ஊற்றினார்

ஸ்டாலினின் கரிய அடர்த்தியான புருவங்கள் நெருங்கி, கண்கள் சுருங்கின. ரூஸ்வெல்ட்டும் கேள்விக்குறியுடன் பார்த்தார். 

"ஒவ்வொரு கோப்பையாக இந்தத் தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டிவிடுவேன்.  ஒரு நேரத்தில் தடாகம் காலியாகும்போது மீனைப் பிடித்துவிடுவேன். நேரம் பிடிக்கும்.  பாதகமில்லை. மெதுவாக, ஆனால் நிச்சயமாக, கட்டாயமாக, தடாகம் காலியாகும். அப்போது காரியம் நிறைவேறும். Slowly; but steadily, surely and certainly", என்றார் சர்ச்சில். 


என்ன சார்? கதை நன்றாக இருந்ததா? இந்த மாதிரி கதை சொல்லும் உத்தியை ஆங்கில இலக்கியமரபு, 'fleur sur oreille' என்று சொல்லும்.
You smell a fish, do you?
You should. It’s that gold fish in the story. 

இந்தக் கதையின் நீதி?

முன்பு ஒரு சமயம் - 2002-ஆம் ஆண்டில் - ஒரு மடலில் எழுதியிருந்தேன் -
"இணையத்தில் தமிழில் விஷயங்கள் அதிகம் போடப்படவில்லை. ஒவ்வொரு நாளும், அனுதினமும், கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது ஒரு பொருளைப்பற்றி ஒவ்வொரு வரி எழுதினாலும் போதும். நாளடைவில் இணையத்தில் தமிழில் தகவல்தளம் உருவாகிவிடும்".




மூன்று வடிகட்டிகள்

தமிழில் 'கற்றலை'ப் பற்றிய சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது. 
நல்ல மாணவர்கள் யார், கெட்ட மாணவர்களை யார் என்பதை வகைப்படுத்தியிருக்கிறார்கள். நன்னூல் என்னும் இலக்கண நூலில் இந்த விஷயம் உண்டு.  மாணவர்களை வடிகட்டியாக உருவகப்படுத்துவார்கள்.   

நல்லதை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல்.  நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டுமே வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல்.  கெட்டதை வடிகட்டி எடுத்து எறிந்துவிட்டு நல்லதை மட்டும் வைத்துக்கொள்ளுதல்.  இப்படி ஒரு 'வடிகட்டி தத்துவம்' இருந்தது.

ஸாக்ரட்டெஸ் 'மூன்று வடிகட்டி' முறை ஒன்றை வைத்திருந்தார்.  ஸாக்ரட்டெஸ் பற்றிய ஒரு சம்பவம். 

அவருக்குத் தெரிந்த ஓர் ஆசாமி அவரிடம் ஒரு நாள் வந்தான். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தான்.  "உங்கள் நண்பரைப் பற்றி நான் சிறிது நேரத்துக்கு முன்னர் ஒரு விஷயம் கேள்விப் பட்டேன், தெரியுமா?"

"கொஞ்சம் நிறுத்து. நீ சொல்லும் அந்த விஷயத்தை நான் எடுத்துக்கொள்ளுமுன்னர் அதனை மூன்று வடிக்கட்டிகளால் வடிகட்டிப் பார்க்கவேண்டும்".

"அப்படியா"

ஆம். முதலாவது வடிகட்டி. அதுதான் 'உண்மை' என்பது. நீ என் நண்பனைப் பற்றிச் சொல்லப்போவது முற்றிலும் உண்மை என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?"  "இல்லை. போகிற போக்கில் காற்றுவாக்கில் பராபரியாகக் கேள்விப்பட்டதுதான்."  "ரொம்பச் சரி. அந்த விஷயம் உண்மைதானா என்பது உனக்குத் தெரியாது. அடுத்த வடிகட்டி......என் நண்பனைப் பற்றி நல்லவிஷயமாக ஏதும் சொல்லப்போகிறாயா?"  "இல்லை. அதற்கு நேர்மாறானது".

"அப்படியா. என் நண்பனைப் பற்றி ஏதோ கெட்டதாகக் கூறவருகிறாய். ஆனால் அது உண்மையா என்பது உனக்கு நிச்சயமில்லை. பரவாயில்லை. மூன்றாவது வடிகட்டி....'பயன்'.   நீ சொல்லப்போவது எந்தவகையிலாவது பயனுள்ளதா?  "இல்லை. அப்படியொன்றும் இல்லை".

சாக்ரட்டெஸ் சொன்னார்:
நீ என்னிடம் சொல்லவந்தது உண்மையும் இல்லை; நல்லதும் இல்லை. பயனுள்ளதும் இல்லை. அப்படியானால் அதனை ஏன் என்னிடம் சொல்கிறாய்?"