ஐந்துக்கும் ஆறுக்கும் அப்பாலும் அப்பாலுக்கு அப்பாலும் -#1
ஐம்புல அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆறாவது அறிவு இருக்கிறது. தமிழ் மரபில் 'ஆறறிவு படைத்த மனிதன்' என்றும் 'ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள்' என்றும் சொல்வதுண்டு அல்லவா.
மேற்கத்திய மரபுப்படி, அவர்கள் ஐம்புல அறிவைக் கணக்கில் கொண்டு அந்த ஐம்புலன்களால் உணரப்பட முடியாத அறிவை-உணர்வை ஆறாவது அறிவு என்று கொள்கிறார்கள். Sixth Sense என்று அதைக் குறிப்பிடுவார்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவை-உணர்வை அவர்கள் Extra-Sensory Perception என்று சொல்வார்கள். இதையே சுருக்கி ESP என்பார்கள்.
நம்முடைய மரபுப்படி எடுத்துக்கொண்டோமானால் ஆறாவது அறிவுக்கும் அப்பாற்பட்ட
அறிவுகளும் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதை நன்கு அறிந்தவர்கள்......
ஐம்புலன்களின் செயல்பாட்டை மிகவும் குறைத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் Feed-back முதலியவற்றில் மிக மிக அடிப்படையான, மிக அதிகத் தேவையானவற்றை மட்டும் உணர்ந்துகொண்டு, அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றபடிக்கு மற்ற எல்லா ஐம்புலத் தகவல்களையெல்லாம் தடுத்துவிடுவார்கள்.
"ஐம்புலக் கதவை அடைப்பது" என்ற ஔவையார் வாக்கைத் தேவையான அளவுக்கு மட்டும் பின்பற்றி, அந்தக் கதவை அரைக்குறையாகச் சார்த்திக் கொள்வார்கள்.
இந்த நிலையில் அந்த அதீத அறிவு வேலைசெய்யும். ஐம்புலக் குறிக்கீடு குறைவான நிலையில் அது சிறப்பாக வேலை செய்யும்.
செங்கல்களை அடுக்கிவைத்துக்கொண்டு, அவற்றை ஒரே குத்தில் உடைக்கப்போகும் அந்த டைக்குவாண்டோ வீரனின் மனநிலையையும் கண்கள் முதலிய அவயவங்களையும் கவனித்திருக்கிறீர்களா.
ஹை ஜம்ப் விளையாட்டன் ஓடிப்போய் குதிப்பதற்கு முன்னால் தூரத்தையும் குறுக்குக் கம்பையும் பார்த்தவாறு இருப்பான். பின்னர் குறுக்குக் கம்பத்தை மட்டும் பார்ப்பான். அதன் பின்னர் மெதுவாக உடலை முன்புறமாகச் சாய்த்து நின்று அதன்பின் குதித்துக் குதித்து ஓடி, உயரத்தைத் தாண்டுவான்.
இவர்களெல்லாம் கண் சிமிட்டுவது இல்லை.
டைகர் வூட்ஸ் என்பவர் ஒரு கோல்·ப் வீரர். எனக்கு மிகவும் பிடித்த ஆள். பெயர் ராசி. ஆகவே இன்னும் அதிகமாகப் பிடிக்கும்.
அவர் கோல்·ப் விளையாட்டில் அந்தக் கடைசி - அதாவது winning தட்டைத் தட்டப் போகும்போது நீண்ட நேரம் ஏதோ ஓர் ஒடுக்கத்தில் இருப்பார். கண்கள் திறந்தவாறு இருக்கும். கண்களைச் சிமிட்டவோ அசைக்கவோ மாட்டார். மூச்சு விடுகிறாரா என்பதைக்கூட அறியமுடியாது. மிக மிக மெதுவாகத் தோள்பட்டை, கைகள், மேல் உடம்பு மட்டும் லேசாக அசைந்து, அப்படியே லேசாகத் தட்டுவார்.
பந்து குழிக்குள் செல்லும்.
அப்படித்தான் சொல்லவேண்டும்.
ஏதோ ஒரு மானசீகக் கட்டளையை மேற்கொண்டு கோல்·ப் பந்து அப்படியே உருண்டு சென்று குழிக்குள் விழுந்து கட்டளையை நிறைவேற்றும்.
இந்த மாதிரியான Subliminal நிலை தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும்.
அஷ்டாங்க யோகத்தில் தாரணை என்றொன்றுண்டு.
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டூடே வெளியுறத் தானோக்கிக்
காணக்கண் கேளாச்செவி என்றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியதுவாமே
அந்த அளவுக்குப் போகமட்டுமே அது பயனாவதில்லை.
கோல்·ப் அடிக்கவும் பயன்படுத்தலாம்.
எல்லாம் ஒன்றுதான்.
Its All A Matter Of Application.
$$$$$$$$$$$$$$$$$$$$