சிலநாட்களுக்கு முன்னர் பஸாருக்குச்(மார்க்கெட்டுக்கு) சென்று கோழி வாங்கவேண்டியிருந்தது. கோழி விற்கும் இடத்திற்குச் சென்றேன்.
'தவ்க்கே ஆயாம்' எனப்படும் கோழி வியாபாரியிடம் சென்று சுத்தம் செய்யப்பட்ட முழுக் கோழியாகக் கேட்டேன். குனிந்து மும்முரமாகக் கோழியைக் கூறு போட்டுக்கொண்டிருந்த தவ்க்கே கேட்டான்:
"லூ மாவ் ஆயாம் பானாய்க்கா, தாராப் பானாய் பூஞ்யாக்கா?" ("Lu mahu ayam panas-kah tidak panas-punya-kah?") "உனக்குச் சுடும் கோழி வேண்டுமா, குளிர்ந்த கோழி வேண்டுமா?"
"யென்னாடாது, ஔவையாரிடம் முருகன் 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?', என்று கேட்டதுபோலக் கேட்கிறானே? கோழியைச் சுட்டே, அதாவது வாட்டிக் கீட்டிக்கொடுக்கிறானோ, என்னம்மோ?", என்று கொஞ்சம் அசந்து போய்த் தயங்கி நின்றேன்.
அந்தப் பஸாரிலெல்லாம் கொஞ்சம்கூட தயங்கவோ தேங்கவோ கூடாது. பேரம் பேசுவதாவது....? அதெல்லாம் முடியாது. பழைய காலத்தில் மதுரை எர்ஸ்க்கின் பெரியாஸ்பத்திரி டிஸ்ப்பென்ஸரியில் மாதிரி, "தோ பாரு.... நாளுக்கு மூணு, வேளக்யி ஒண்ணு... வாயில போட்டுத் தண்ணி... ஒதுங்கு, ஒதுங்கு....." என்ற மாதிரிதான். "ஜரகண்டி ஜரகண்டி" என்று அந்த ஆயம்காரத் தவ்க்கே கூவாததுதான் பாக்கி. "வந்தியா, பாத்தியா, வெல கேட்டியா, வாங்குனியா.... போய்க்கிட்டே இரு" என்பதுகோட்பாடு.
ஜூலியஸ் ஸீஸரே வந்தாலும்கூட "Veni, Vidi, Vici" (I come, I see, I conquer) என்று அவர் சொன்னதை மாற்றி "Veni, vidi, emi"(I come, I see, I buy") என்று சொல்லிக்கொண்டு கோழியை வாங்கிக்கொண்டே ஒதுங்கிப் போய்விடவேண்டியதுதான்.
அவ்வளவு அவசரம், நெருக்கடி, கெடுபிடி.
"ஆப்பா பேஸா?"("Apa Beza?" - "என்ன பேதம்? (வித்தியாசம்)" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.
"னீ பானாய்ப் பூஞ்யா பாலூப் போத்தோங் பூஞ்யா-லோ" (Ini panas-punya bahru potong-punya-loh) என்று அடித்தொண்டையில் சத்தம் போட்டுச் சொன்னான். அப்போதைக்கு அப்போது உயிருள்ள கோழியை அறுத்து, உரித்துச் சுத்தம் செய்து கொடுக்கும்போது அத்தகைய கோழியின் உடல் சூடு இன்னும் இருக்கும்.
கொஞ்ச நேரம் ஆனபிறகு குளிர்ந்துவிடும்.
அதான் 'சூடான கோழி, குளிர்ந்த கோழி'யின் ரகசியம்.