Thursday, 23 June 2011

ஆமையும் கோழியும்

நான் வேலை செய்த இடங்களில் கிலந்தான் என்னும் ஸ்டேட்டும் ஒன்று. 1977 கடைசியில் அங்கு சென்றேன். அந்த ஸ்டேட்டின் தலைநகரம் கோத்தா பாரு எனப்படுவது. 1977-இல் தும்ப்பாட் என்னும் இடத்திற்கு முதல் சுகாதார அதிகாரியாகச் சென்றேன். அங்கு பெரிய வீடுகள் அப்போது கிடையாது. மிகவும் பின் தங்கிப்போன இடம்.  'கம்ப்போங்' என்பது கிராமத்தைக் குறிக்கும் சொல். மலாய்க்காரர்கள் வசிக்கும் கிராமங்களில் வீடுகள் பலகைகளால் ஆனவை. தரையில் மரத்தூண்கள் ஊன்றப்பட்டு அதன்மேல் கட்டப்படிருக்கும். தரையிலிருந்து படிக்கட்டில் ஏறி வீட்டுக்குள் செல்லவேண்டும். ஐந்து அல்லது ஆறடி உயரத்தில் வீடு இருக்கும்.

இந்த மாதிரி வீட்டில்தான் தும்ப்பாட்டில் வசித்தேன். 

அதுவும் ஆற்றங்கரையின்மேலுள்ள வீடு. முதலைகள், ராட்சத உடும்புகள், பாம்புகள் போன்றவற்றிடமிருந்து பாதுகாப்புக்காக தரையிலிருந்து ஏழெட்டு அடி உயரத்துக்கு மேலே வீடு இருந்தது. 

கிலந்தான் ஸ்டேட்டில் தமிழர்கள் உண்டு. அவர்களுக்கென வெகு சில கோயில்கள் இருந்தன. அவற்றில் ஒன்று தும்ப்பாட்டில் இருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில்.  ஒரு காலத்தில் ட·ப் டிவலப்மெண்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் கிலந்தானிலுள்ள காடுகளை அழித்து அங்கு ஏராளமாக ரப்பர் எஸ்டேட்டுகளை ஏற்படுத்தியது. அந்தக் கம்பெனிக்காகவே பிரத்தியேகமாக ரயில்பாதை போட்டார்கள். அந்த ரயில்பாதையின் கடைசி ஸ்டேஷன் தும்ப்பாட்தான். ஒரு காலத்தில் ரயில்வேயில் தமிழர்கள் ஏராளமானோர் வேலை பார்த்தனர். ஆகவே தும்ப்பாட்டில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அவர்கள் அந்த முத்துமாரியம்மன் கோயிலைக் கட்டிக்கொண்டனர். ஆனால் பின்னால் குடிபெயர்ந்துபோய்விட்டனர். ஆறேழு குடும்பங்கள். அவ்வளவுதான். 

கோத்தாபாரு ஆட்கள் அந்தக் கோயிலை நடத்திவந்தனர். கோத்தாபாரு நகரத்தில் அப்போதெல்லாம் கோயில் கிடையாது. ஆகவே தும்பாட்டுக்குத்தான் அத்தனை பேரும் வருவார்கள். 

கோத்தாபாரு நகரத்தில் நல்ல நிலையில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து குடியேறிய தமிழர்கள். ஆகவே கோயில் பெருமளவுக்கு அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 

அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களுக்கென்று பழமொழிகள், மொழிவழக்குகள், பேச்சுமுறை, உச்சரிப்பு.....இத்யாதி.  அலாதியாக இருக்கும். சிகரெட் பிடிப்பதைக்கூட அவர்கள் சுத்தத் தமிழில் சொல்வார்கள்.  வித்தியாசமாக இருக்கும். 

நவரெட்னம் (அதென்னவோ அவர்களெல்லாம் 'ரத்தினம்' என்பதை 'ரெட்னம்' என்றுதான் உச்சரித்தார்கள்) என்பவர் நிறைய பழமொழிகள், கதைகள் சொல்வார். முப்பதாண்டுகளுக்கு முன்பே அவர் எழுபதை ஒட்டிய வயதுடையவராக இருந்தார். 
அவர் ஒருமுறை சிங்கம் என்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்த கதையை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். 

"இந்த ஆமெ இருக்கு கண்டியோ......அது ஆயிரம் முட்டைகளப் போட்டுப்போட்டு அதுபாட்டுக்கு மூச்சுப்பேச்சில்லாமெ போய்க்கொண்டேயிருக்கும். இந்த கோஓஓஒழி....அது ஒட்ரே ஒட்ரு முட்டைய போட்டுப் போட்டு ஊரெல்லாங்கூட்டி வச்சு 'கொக்கொக்கோ....கொக்கொக்கோ' எண்டு கூவி அழைக்குமா....பாத்தியோ!"

யதார்த்தம்.