Thursday, 15 September 2011

BRAHMA CONFUSION


பிரம்ம குழப்பம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே வாரத்தில் எனக்கு இரண்டு அழைப்பிதழ்கள் வந்திருந்தன.
ஒன்று, வீடு குடிபுகு விழா.
இன்னொன்று திருமணம்.


வீடு குடிபுகுதல் மலேசியா நேரம் 5-00 மணிக்கு. திருமணம் அடுத்த மாத ஆரம்பத்தில். 4-00 am - 5-00 am. அதைக் காலை என்று சொல்வதா என்னவென்று சொல்வது, தெரியவில்லை. உஷத் காலம் என்று சொல்லலாம் என்று பார்த்தாலும், ஒரு குரல் கேட்கிறது.
"எலேய்...யின்னாபா டபாய்க்கிறெ. மூவாயிரம் வருசமா ஆளப் பத்தின நியூஸ் ஒன்னுமில்லையே' இன்னதும் 'வேத காலத்தோட ஆளு அபேஸ்'னு நெனச்சுக்கினேல நீ? ஓம்பாட்டுக்கு சரடா வுடுறே? நானு எப்பப்பா அந்த நேரத்துல வந்திருக்கேன்?" என்ற கேள்விக்குரல் கேட்கிறது.
"யார்ராது?" என்று பார்த்தால் நம்ம 'உஷை'.
சூரியன் எழுமுன்னர் நிலவும் நேரம். வேத காலத்தில் ஒரு தேவதையாக வழிபடப்பட்டிருக்கிறாள். வேண்டுமென்றால் பின்னிரவு வேளை என்றும் சொல்லலாம்.
உஷத் காலத்துக்கும் முந்தின நேரம்.
மலேசியாவில் லோக்கல் நேரப்படி சராசரி காலை 7-20க்குத்தான் சூரியன் உதிக்கும். ஏனெனில் கிழக்கு மலேசியாவை அனுசரித்து நேரத்தை அட்ஜஸ்ட் செய்துவைத்திருக்கிறார்கள். மஹாராஜராஜஸ்ரீ மஹாகுலோப்ஜாமூன் மாஹாதீர முஹம்மதுவாகிய பழைய பிரதமர் கட்டளையிட்டுள்ளார் அல்லவா?
கட்டபொம்மன் படத்தில் வரும் பானர்மேன் ஜாவர் சீதாராமன் சொன்ன மாதிரி, "கிழக்கே உதிக்கிறதே சூரியன்..... அது எங்களைக் கேட்டுத்தான் எழும்.....  விழும்..." என்பதுபோல.

மலேசியாவில் ஜோதிடர் என்று தங்களையே கூறிக்கொண்டு பணம் பண்ணும் பேர்வழிகள் அனேகருக்கு ஜோதிடம் தெரியாது. பூசாரிகளும் சோசியம் பார்ப்பதாகச் சொல்லிக்கொள்வார்கள்.
அவர்களுக்கு நல்ல நேரம் பார்க்கவும் தெரியாது.
பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் சுபமுகூர்த்தத்தில் திருமணத்தைச் செய்வதற்கு தோது இருக்காது. ஆகவே வசதியான நாளில் வசதியான நேரமாகக் கேட்பார்கள். ஜோதிடருக்குத் தெரிந்த குறுக்குவழி, 'ப்ரம்ம முகூர்த்தம்'தான்.
'ப்ரம்ம முகூர்த்தம்'?
சூரியன் உதிப்பதற்கு முன்னால் நிலவும் அந்த ஒன்றரை மணி நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். தோஷமில்லாத வேளைகளில் பிரம்மமுகூர்த்தமும் ஒன்று.
'முகூர்த்தம்'?
'மூணே முக்கால் நாழிகை' என்ற கணக்கைக் கேட்டிருக்கிறீர்களா? பழைய கதைகளையெல்லாம் படித்தால் - அதாவது 'மயில்ராவணன் கதை' மாதிரியுள்ளதையெல்லாம் படித்தால் -  அவற்றில் இது அடிக்கடி வரும். மாயம் ஜாலவித்தை கண்கட்டு வித்தையெல்லாம் மூணேமுக்கால் நாழிகைக்குத்தான் நிற்குமாம். அதன் பின்னர் அவை செயல்படாது என்று சொல்வார்கள்.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்.
அப்போ மூணே முக்கால்........ம்ம்ம்ம்ம்ம்ம்........முண்ணாங்கே பன்னண்டுக்கு ரெண்டு....மீதி ஒண்ணு.....மூவிரண்டாறு ஒண்ணும் ஏழு .......எழுவத்திரெண்டு.......இருவத்திமுக்கா, பதினஞ்சு.....நாமுக்கா மூணு. பதினஞ்சும் மூணும் பதினெட்டு...னெட்டு...னெட்டு..னெட்டு. பதினெட்டும் எழுவத்திரெண்டும்...தொண்ணூறு.......தொண்ணூறு....தொண்ணூறு.....தொண்ணுற அறுவதால வகுத்தா.....ஒண்ணர.......ஒன்றரை மணி நேரம். சரிதானுங்களா?
தோஷங்களில்லாத நேரம் பார்ப்பதற்கும் ஜோதிடத்தில் விதிகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் யார் கற்றுக்கொண்டிருப்பது?
ஏசுநாதர் சொல்லிக்கொடுத்த தம்பிரான் வணக்கத்தில் காணப் படுவதைப் போல, "இன்று எமக்குத் தரவேண்டிய அப்பத்தைத் தாருமையா", என்ற போக்கு.
கொஞ்சம் வித்தியாசம். இந்த மாதிரியான ஜோசியர்கள், பூசாரிகள் எல்லாருமே அந்தப் பிரார்த்தனையைச் சற்று மாற்றிக்கொள்வார்கள். "அப்பத்தைக் ஸ்பெஷல் அப்பமாகவும், முட்டை, கிட்டை, தேங்காய்ப் பாலெல்லாம் ஊத்தி, மத்தவனுக்கு ஞாயமாக் கெடக்கிறதையும் சேத்து எனக்கே கெடக்கிறமாதிரியும் குடுய்யா", என்று சேர்த்துக்கொள்வார்கள்.


அப்படியாப்பட்டவர்கள்தான் நேரம் குறித்துக்கொடுப்பார்கள்.


சூரியன் உதயமாகும் நேரம் பலருக்குச் சரியாகத் தெரியாது. அவர்களுக்குக்  காலை 6-00 மணிக்கு சூரியன் உதிக்கும்; உச்சிவேளை என்பது 12-00 மணி. சாயரட்சை 6-00pm. சூரியன் மறையும்.


அதேதான் நிகழ்ந்திருக்கிறது. காலை ஆறுக்கு முன்னால் உள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம் என்று எண்ணி, அவ்வாறே 5-00லிருந்து 6-00க்கு புதுமனை புகுவிழா என்று வைத்துக்கொடுத்திருக்கிறான். இன்னொருவனோ இன்னும் மேதாவி - மேல் + தாவி. இன்னும் மேலுக்கு - முன்னால் போய்விட்டான்.
ஆகவேதான் 4-00 - 5-00.


4-00 மணி என்பது ஒரு தினுசான நேரம். அப்போதுதான் பேய்க்கணங்கள் திரியும் என்பார்கள். ராட்சத வேளை என்று கருதுவார்கள்.                     அவ்வேளையில்தான் பல விபத்துக்கள், பிள்ளைப்பேற்றில் சிக்கல்கள், மாரடைப்பு, இறப்பு போன்றவை நிகழும் என்று புள்ளி விபரங்கள் கூறும்.


அது சரி.
இவர்களையெல்லாம் திருத்தமுடியாதா?


எப்படி முடியும்?
அதான் ஆப்பம்...அதுவும் முட்டை தேங்காய்ப்பாலுடன் அடுத்தவன் ஆப்பமும் சேர்த்துக் கிடைக்கிறதே!


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$