Saturday, 28 April 2012

TE UNSEEN ILUPPAI OIL


காணா நோக்கா இலுப்பை மலேசியாவின் அஸ்ட்ரோ டீவீயில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் மிகப் பெரும்பாலனவை
தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுபவை.
 அவற்றில் உள்ளவற்றில் பெரும்பான்மையானவை மலேசியாவுக்குச் சம்பந்தமும் அறவே இல்லாதவை. மலேசியத் தமிழர்களுக்கு ஆகக்கூடியவையுமல்ல. பயனில்லாதவை.
 அடிக்கடி சமையல், ஹெல்த் சமையல், சித்தமருத்துவக் குறிப்புகள் போன்றவற்றைப் போடுவார்கள்.
 அவற்றில் பெரும்பான்மையானவை மலேசியத் தமிழர்களுக்கு Practical-ஆக இராதவை.
 "இலுப்பை எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது", என்று ஒரு முறை
சொன்னார்கள்.  இலுப்பை எண்ணெயைச் சுத்தம் செய்து, சாப்பிடக்கூடியவகையில் பக்குவம் செய்து அதைச் சமையலில் சேர்க்கச் சொன்னார்கள்.


 முதலில் இந்தக் கால மலேசியத் தமிழர்களுக்கு இலுப்பை என்றால் என்ன என்பதே தெரியாது.
 இங்கு அதைப் போன்ற பழம் ஒன்று அரிதாகக் கிடைக்கிறது. சிறியதாக இருக்கும். தென்வடல்
நெடுஞ்சாலையின்மீதுள்ள பேராக் ஆற்றுப் பாலத்தின் அருகில் உள்ள பழ அங்காடிகளில் கிடைக்கும்.
 இலுப்பை என்ற பெயரால் அறியப்படுவதில்லை.
 'சிக்கு' என்பார்கள்.
 பலருக்கு அந்தப் பழம்கூட பரிச்சயமில்லை.


 முன்பெல்லாம் - நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பு - மதுரை மருத்துவக் கல்லூரியில் சில
பாட்டுக்களைப் பாடுவோம். மெடிக்கல் காலேஜ் பஸ்ஸில் போகும்போது பாடிக்கொண்டு அட்டகாசமாகப் போவதுண்டு. அந்த பஸ்ஸே அட்டகாசமாகத்தான் இருக்கும். கருநீல வர்ணம். முன் பக்கத்தின் மேல் புறத்தில் பெயருக்குப் பதில் மண்டை ஓடு இரண்டு குறுக்கு எலும்புகளுடன் இருக்கும் படம் இருக்கும். இதை Skull And Cross Bones என்பார்கள். Pirates Of The Caribbean படத்தில் பார்த்திருப்பீர்கள்.
அந்தச் சின்னத்தைத் தாங்கிய கொடியை Jolly Roger என்பார்கள். அந்த பஸ்ஸைப் பிடிக்காத மதுரை
நகரவாசிகள் அதை 'மண்டெ ஓட்டுப் பஸ்ஸ¤" என்பார்கள்.
 அந்த பஸ்ஸில் போகும்போது - குறிப்பாக மதுரை டவுனுக்குள் போகும்போது - இந்த அட்டகாசப் பாட்டுக்கள் முழங்க நகரப் பிரவேசம், நகர்வலம் வருவோம்.
 அந்த அட்டகாசப் பாட்டுக்களில் ஒன்றில் இந்த அடிகள் வரும்......
"சின்ன மாமீ, சின்ன மாமீ - சிக்குப் பழம் தா
சிக்குப் பழம் இல்லாட்டி - உன்
சின்ன மகளத் தா....."
 சின்ன மாமியையும் அவளுடைய சின்ன மகளையும் பார்த்திருப்பார்கள். ஆனால் சிக்குப் பழத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.
 சிக்குப் பழமே சிக்கவில்லை. சிக்கெனப் பிடிக்க முடியாது.
 அப்புறம் இலுப்பைக்கு எங்கே போவது.
 இலுப்பையின் பழுத்த பழத்திலிருந்து முற்றிய கொட்டைகளை எடுத்து, அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து......, அவற்றை பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி 'இலுப்பையை வளர்ப்போம். கொட்டையைப்
பிரிப்போம். எண்ணெயை எடுப்போம். சீசாவில் அடைப்போம். இத்தாலிக்கு விற்போம்".... இவ்வாறெல்லாம் சொல்லமுடியாது.
 'என்னத்த' கன்னையா சொன்னாப்புல, "என்னத்த இலுப்பய, என்னத்தப் புடுங்கி, என்னத்த கொட்டய, என்னத்தப் பிதுக்கி, என்னத்த எண்ணெய, என்னத்த எடுத்து......."
 "வரூஊஊஊம்.... ஆனாஆஆஆ வராது...."
 இந்த எண்ணெய் மலேசியத் தமிழர்கள் கடையில் கிடைப்பதானால் அட்சயத் திருதியை தங்கத்தின் விலையாக இருக்கும். தங்கமாவது நகைக் கடையில் கிடைக்கும்.
 இந்த கண்காணாத, கிடைக்காத இலுப்பை எண்ணெயைச் சுத்தீகரம் செய்து சமையல் செய்து
சாப்பிடுவது என்பது நடக்கிற காரியமா?
 அதற்குப் பதில் ஓமேகா-3, ஓமேகா-6 எண்ணெய்கள் கொண்ட மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமே.
 அதைவிட கோஎன்ஸைம் க்யூட்டென்10 - CoEnzyme Q10 சாப்பிடலாம். இளமை திரும்பும்.
இருதயத்துக்கு நல்லது. சுறுசுறுப்பாக இருக்கும்.
 "ர்ர்ர்ர்ருக்க்கும்மணியே... பற, பற, பற" என்று பாடிக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கலாம். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$