Tuesday, 14 June 2011

நாயாக, நாய்களின் தலைவனாக நாயகன்


அரதத்த சிவாச்சாரியார் என்பவர்  மிகப் பெரிய சிவஞானி. சிவ பக்தியில் எந்நேரமும் திளைப்பவர்.  அனைத்து தத்துவ சாஸ்திரங்களும் அறிந்தவர்.  வேத ஆகமங்களிலும் மற்ற சாஸ்திரங்களிலும் அரத்தத்தர் விற்பன்னராக விளங்கியவர். அவர் சொல்லே பிரமாணமாக அக்காலத்தில் விளங்கியது. 

அவர் அங்கு ஆண்ட மன்னனுக்கு ராஜகுருவாகவும் இருந்தவர்.  அவர் சிவாச்சாரியாராக இருந்தாலும்கூட அவரை கஞ்சனூராழ்வார் என்று குறிப்பிட்டனர். கஞ்சனூர் என்பது அவருடைய சொந்த ஊர்.

தினமும் சில சிவாலயங்களுக்குசென்று சிவதரிசனம் செய்வதுடன்  சிவபூஜையும் தவறாமல் செய்வார்.  அவருடைய சிவபூஜை மிகவும் உயர்நிலையில் உள்ளது.   பஞ்சமூர்த்தபூஜை என்ற பூஜை அது. 

சிவனுக்கு ஐந்து முகங்கள் கூறப்படும். தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசான்யம், அகோரம் ஆகியவை.  ஐந்து தீர்த்தப் பாத்திரங்களில் உரிய தீர்த்தம் வைத்து அவற்றில் பஞ்சமூர்த்திகளையும் ஆவாகனம் செய்து ஜபம் செய்து ஸ்ரீ£ருத்ரம் நமகசமக பாராயணமெல்லாம் செய்து வழிபடுவார். அந்தத் தீர்த்தங்களைக் கொண்டுதான் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்.

ஒருநாள் ஐந்து பாத்திரங்களிலும் தீர்த்தம் வைத்து ஆவாஹனம் செய்து கண்களை மூடி ஜபத்தியானம் செய்துகொண்டிருந்தார். 
அந்தச் சமயத்தில் ஒரு நாய் அங்கு ஓடிவந்தது. 
அதற்கு அதிகமான தாகம். 
ஆகவே அந்தப் பாத்திரத்திலிருந்த தீர்த்தத்தை நக்கிக் குடித்துவிட்டது. 
ஜபம் முடிந்ததும் நான்கு பாத்திரத் தீர்த்தத்துடன் நாய் எச்சில் வைத்த ஐந்தாம் பாத்திரத்துத் தீர்த்தத்தையும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்துவிட்டார். 
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேதவித்களுக்கு அக்காரியம் மிகவும் ஒவ்வாத செயலாகவும் அபசாரமாகவும் பட்டது. 
இது அப்படியே ஊரெங்கும் பரவிவிட்டது. 
ஆகவே ஆசாரசீலர்கள் சிலர் அரதத்தரைச் சந்தித்து அவருடைய செயல்குறித்துக் கேட்கவந்தனர். 

அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் செயல்கள் எல்லாம் பெரும் கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியவையாகக் கருதப்பட்டன. ஜாதிப் பிரஷ்ட்டிரம் என்னும் கடுமையான தண்டனை அவற்றில் ஒன்று. ஜாதியை விட்டு ஒதுக்கிவைப்பார்கள். அந்த ஜாதியைச் சேர்ந்தவராகக் கூறிக் கொள்ளவும் முடியாது.சோறு தண்ணி கூட கொடுக்கவும் மாட்டார்கள். மற்றவர்களைக் கொடுக்க விடவும் மாட்டார்கள். உயர்குடியினர் அனைவருமே ஒதுக்கிவிடுவார்கள். ஊருக்குள் வரவும் முடியாது. 

அந்தக் காலத்தில் எந்தக் குடியினராகவும் இருந்தாலும் கட்டாயமாக ஜாதி ஏதாவது ஒன்றைச் சார்ந்தவர்களாக மக்கள் இருக்கவேண்டும். ஜாதியற்றவர்களாக இருக்கக்கூடாது. 

அந்த ஆசார வெறியர்கள் வந்த காரணத்தைத் தாமாகவே அறிந்துகொண்ட அரதத்தர் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார். 

"வேதத்ரயம் எனப்படும் மூன்று வேதங்களிலும் சிறந்ததாகக் கருதப்படுவது யஜுர்வேதம்". 
"யஜுர்வேதத்தின் நடுநாயகமாக இருப்பது ஸ்ரீருத்ரம். 
சிவரூபமாகவே உள்ளது ஸ்ரீருத்ரம். அதில் 'சுவப்ய:  சுவபதிப்யஸ்ச' என்று காணப்படுகிறது. 
'நாயாகவும் நாய்க்குத் தலைவனாகவும் இருப்பவன்' என்று அர்த்தம். அபிஷேகத்துக்குரிய தீர்த்தத்தை நக்கிய அந்த நாயை நான் அப்போது சிவனாகவேதான் கருதினேன்.  அப்போது நான் மனதில் ஸ்ரீருத்ரம் சொல்லிக்கொண்டிருந்தேன்.  நான் சொல்லும் ஸ்ரீருத்ரம் சொல்லளவில்தானா அல்லது மனத்தளவிலுமா என்று சிவனே சோதனை செய்கிறான் என்றே நம்பினேன்".

அவருடைய விளக்கத்தைக் கேட்டு அனைவரும் சமாதானம் அடைந்தனர். அதன் பின்னர் அந்த ஊர்களில் உள்ளவர்கள் தங்களின் மேலில் நாய் உரசிவிட்டால் அதனை அனாசாரமாக நினைப்பதில்லை. 

வடுகா, பைரவா, சட்டநாதா!