Friday, 18 November 2011

ENAKKENNA

எனக்கென்ன?


        எப்போதோ படித்த கதை........
  'என்னக்கென்ன?'


  ஒரு வெள்ளைக்கார விவசாயியின் விவசாயப்பண்ணையில் நடந்த கதை. 
  அங்கு ஒரு சுண்டெலி இருந்தது.
ஒருநாள் பண்ணைவீட்டின் சமையற்கட்டில் ஓர் எலி இடுக்கியைப் பார்த்துவிட்டது. 
"ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் அது ஓடிப்போய் அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் முறையிட்டது. அது எலியின் நெருங்கிய சகா.
"சமையற்கட்டில் ஒரு எலி இடுக்கி இருக்கிறது. சமையற்கட்டில் ஒரு எலி இடுக்கி இருக்கிறது. சமையற்கட்டில் ஒரு எலி இடுக்கி இருக்கிறது".
கோழி அதைக் கேட்டுவிட்டு, "அது எனக்காக வைக்கப்பட்டதல்ல. எனக்கென்ன?" என்றது. 
சுண்டெலி அங்கிருந்த பன்றியிடம் முறையிட்டது. 
"சரிதான். எனக்கென்ன?" என்று சொல்லிவிட்டுப் பன்றி போய்விட்டது. அதுவும் ஒரு 
நண்பன்தான்.
பண்ணையின் காளை மாடுதான் அங்கிருந்த பிராணிகளில் பெரியது. அதனிடம் சென்று அழுதது. 
காளை மாடோ,"நீ அதில் விழாமல் இருக்க உனக்காக வேண்டுமானால் பிரார்த்திக்கிறேன். மற்றபடி அதனால் எனக்கென்ன?" சென்று சொல்லிவிட்டது.
அன்று இரவு தூங்காமல் சுண்டெலி அழுதுகொண்டும் பயந்துகொண்டும் தன் வளையில் பதுங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று படீரென்று ஒரு சப்தம். இடுக்கியில் ஏதோ விழுந்துவிட்டது. 
அடுத்த நாள் காலை சமையற்கட்டிற்குள் சென்ற விவசாயியின் மனைவி எலி இடுக்கியைப் 
பார்க்கச் சென்றாள். ஆனால் அதில் மாட்டியிருந்தது, ஒரு பாம்பு. வால் மட்டுமே மாட்டிக்
கொண்டிருந்ததால் வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. 
விவசாயியின் மனைவி அருகில் வரவும் அவளுடைய காலில் ஒரு போடு போட்டுவிட்டது. 
விவசாயி தன்னுடைய மனைவியைப் பாம்பு கடித்துவிட்டதை அறிந்து முதல் உதவி செய்தான். வைத்தியரிடமும் காட்டி மாற்று மருந்தைக் கொடுத்தனர். 
வீட்டில் விவசாயியின் மனைவி ரொம்பவும் பலவீனமாகப் படுத்திருந்தாள். 
பக்கத்துப் பண்ணைக் கிழவி சில வேர்களையும் மூலிகைகளையும் கொண்டுவந்தாள். 
கோழியைப் பிடித்து வெட்டி, அதை சூப் வைத்தாள். மூலிகைகளை அதில் போட்டு வேகவைத்து விவசாயி மனைவிக்குக் கொடுத்தாள். 
அவளைப் பார்க்க இஷ்டமித்திர பந்துக்கள் எனப்படும் சுற்றமும் நட்பும் வந்தார்கள். வெளியூர் ஆட்களும் அங்கு வந்து தங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவேண்டியிருந்தது. 
ஆகவே பன்றியை அடித்தார்கள். பிரட்டல், வறுவல், அது, இது என்று ஆக்கி வைத்துக்கொண்டு எல்லாரும் சாப்பிட்டார்கள். 
விவசாயி தன்னுடைய மனைவி நலமாக ஆகவேண்டும் என்று வேண்டுதல் செய்துகொண்டான். 
சீக்கிரமே மனைவி நலமாகினாள். 
ஆகவே ஊரையே கூட்டி அழைத்து ஒரு பெரிய நன்றி காட்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவர்களுடைய வழக்கம் அது.
காளை மாட்டை அடித்தார்கள். அதுதான் அந்த வந்தனை செய்யும் விருந்தின் முக்கிய அயிட்டம். 
இது அத்தனையையும் தன்னுடைய வளையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது அந்தச் சிறிய சுண்டெலி.
விதி!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$