Monday, 4 July 2011

வயதா ஒரு தடை?Part 2

ஸாண்டர்ஸின் எழுபதாவது வயதில் யூ.எஸ். கானடா ஆகிய நாடுகளில் மட்டுமே நானூறு விற்பனை நிலையங்கள் இருந்தன.  ஏற்கனவே யூ.எஸ்ஸின் கெண்டக்கி மாநிலத்தின் சமையலைப் பிரபலப்படுத்தியதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர், ஸாண்டர்ஸைக் கௌரவ கர்னலாக்கி சிறப்பித்திருந்தார்.  இதிலிருந்துதான் கர்னல் ஸண்டர்ஸ் என்ற பெயரும் Chicken Colonel என்ற சிறப்புப் பெயரும் பிரபலமாகின.  அந்த பெயரில் விளங்கிய கர்னலின் வரலாறு ஒரு மாபெரும் வெற்றித் தொடர்கதையாகி விட்டது.

நான்கே ஆண்டுகளில் நான்கு கோடி டாலரை வியாபாரம் எட்டிவிட்டது.  அவர் இறக்கும்வரை கடுமையாக உழைத்தார். காலை 5-00 மணிக்கே எழுந்துவிடுவார். ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றுவார். நெளிவான வெந்நிற நரை முடி, சிறிய மீசை, குறுந்தாடி, வெள்ளை நிறத்திலுள்ள முழு ஸ¥ட், கறு நிறத்து போ-ட்டை. மெட்டல் ரிம் போட்ட வட்டவடிவமான கண்ணாடி. இந்த உருவம் இன்றளவுக்கும் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் நிலவுகிறது.

அந்த வயதிலும் அவர் ஆண்டுதோறும் லட்சம் மைலுக்கு மேல் பிரயாணம் செய்தார்.  1968-ஆம் ஆண்டில் தம்முடைய நிறுவனத்தை அவர் இருபது லட்சம் டாலருக்கு விற்றார்.  ஆனாலும் கேஎ·ப்ஸீயின் தொடர்பை அறுத்துக்கொள்ளவில்லை. அதன் மார்க்கெட்டிங்கில் அவர் செயல்பட்டார்.

புதிய உரிமையாளர்கள் அந்த ஓராண்டில் விளம்பரத்துக்கு மட்டுமே எழுபது லட்சம் டாலர் செலவிட்டனர்.  அந்த ஆண்டின் முடிவில் விற்பனை எழுபது கோடியைத் தாண்டியது.

கர்னல் ஸாண்டர்ஸ¤க்குப் பல விருதுகள் கிடைத்தன.  உலகின் இரண்டாம் நம்பர் ஸேலெப்ரிட்டி - உலகிலேயே இரண்டாவது மிகப் பிரபலமான மனிதர் என்ற சிறப்பைப் பெற்றார்.  1977-இல் யூஎஸ் காங்கிரஸ் கமிட்டியில் 'முதுமை அடைவதை'ப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

தர நிர்ணயத்தைப் பற்றிக் கர்னல் கூறியது: "இந்த உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, கெண்ட்டக்கிச் சிக்கன், நான் ஆரம்பத்தில் என் கையால் சமைத்ததைப் போன்றே அமையவேண்டும்".

அந்தக் கோழிப் பொரியலின் ரெஸிப்பி இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் கேஎ·ப்ஸீ அசலைப் போன்றே வேறு சிக்கன்களைச் சமைக்க முடியவில்லை.

கேஎ·ப்ஸீ நிறுவனம் பல கைகள் மாறிவிட்டது.  2006-ஆம் ஆண்டில் மட்டும் நூறு கோடி தட்டுகள் கேஎ·ப்ஸீ சிக்கன் விற்கப் பட்டிருக்கிறது.

உழைப்பைப் பற்றி கர்னல் ஸாண்டர்ஸ் - "உழைப்பு யாரையும் கெடுத்தது கிடையாது. தேய்மானம் அடைந்து கெடுவதை விட, பெரும்பாலோர் துருப்பிடித்தே கெட்டு விடுகிறார்கள். நான் துருப் பிடித்துப் போகவே மாட்டேன்".

தம் அறுபத்தாறாவது வயதில் போண்டியாகி ஓட்டாண்டியாகி, எழுபதாவது வயதில் மீண்டும் எழுந்து நின்ற கர்னல் ஸாண்டர்ஸின் வாழ்க்கை நல்லதோர் எடுத்துக்காட்டு.

ஜோதிடத்தில் ஒன்றைச் சொல்வார்கள்.
அதன் பெயர்.....
'விருத்தாப்பிய யோகம்'.

வயதா ஒரு தடை? Part 1

கீழ்க்கண்ட கட்டுரை முதன்முதலில் என்னால் 1994-இல் எழுதப்பட்டது.

மோட்டிவேஷனல் ஆசாமி ஒருவர் நடத்திய ஓர் இதழில் அதை வெளியிடுவதற்குக் கேட்டார். அதன் பின்னர் இந்தக் கட்டுரை மேலும் சில இதழ்களில் வந்தது. அவரவர்களாகவே எடுத்துப் போட்டுக்கொண்டார்கள்.  சில ஆண்டுகள் கழித்தும்கூட நினைக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிற கட்டுரை இது.

வயது ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டாலேயே தமிழர்கள் கிழத்தன்மை எய்திவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை மாறிவிடுகிறது. அவர்கள் இன்னின்னதைச் செய்யலாம்; இன்னின்னதைச் செய்யக்கூடாது; இன்னின்னதைப் பார்க்கலாம்; இன்னின்னிதைப் பார்க்கக்கூடது; இன்னின்னிதைச் சிந்திக்கலாம்; இன்னின்னதைச் சிந்திக்கக்கூடாது; இப்படி இப்படி நடக்கலாம், இப்படி இப்படி நடக்கக்கூடாது. அதைச் சாப்பிடக்கூடாது. அங்கு போகக்கூடாது. அதை ரசிக்கக் கூடாது....... இப்படியெல்லாம் பலவிதமான மனத்தடைகளை அவர்களின்மீது திணித்து விடுகிறார்கள்.  ஆகையினால் வாழ்க்கையின்மீதுள்ள ரசனையும் பிடிப்பும் குறைந்துவிடுகிறது.  இலட்சியங்களைக்கூட மறந்துவிடுகிறார்கள்.  புதிய லட்சியங்களை ஏற்படுத்திக்கொள்வதில்லை. அதனால் ஒருவகை நிராசையும் விரக்தியும் ஏற்பட்டுவிடும். முதுமையும் நோயும் தளர்ச்சியும் அவர்களுக்கு விரைவாக தோன்றி விடும்.  ஆனால் மேலைநாடுகளில் சற்று வித்தியாசமான போக்கைப் பார்க்கலாம்.

"Life starts after fifty" - ஐம்பது வயதுக்கு மேல்தான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக விளங்கிய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கொஞ்சம் விசேஷமானவர். KFC என்ற மூன்றெழுத்து உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கக்கூடும். கெண்டக்கி ·ப்ரைட் சிக்கன் Kentucky Fried Chicken எனப்படும் பொரித்த கோழியை அந்த மூன்றெழுத்துக்கள் குறிக்கும்.  கேயெ·ப்ஸீ என்பது தனியார் வர்த்தகத்துறையில் வெற்றியைக் குறிக்கும் ஒரு தத்துவம் என்றே கூறலாம். அந்த வெற்றித் தத்துவத்தின் சின்னமாக விளங்குவது ஓர் உருவம்.  அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

உயரமும் பருமனும் கூடிய வயசாளி; முற்றிலும் நரைத்த நெளிவான தலை மயிர். வெண்மையான மீசையுடன்கூடிய குறுந்தாடி. வெண்ணிற ஆடை. இந்த வெண்வண்ண மயத்துக்கு மாறுபாடாக விளங்கும் ஒரே ஒரு சங்கதி - அவர் அணிந்திருக்கும் கறுப்பு நிற போ-ட்டைதான்(Bow tie).  அந்த உருவம்தான் 'சிக்கன் கர்னல்' என்று குறிப்பிடப்படும் கர்னல் ஹார்லண்ட் ஸாண்டர்ஸ் (Colonel Harland Sanders) கர்னல் ஸாண்டர்ஸைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் தமிழர்களுக்கு உண்டு.

யூ.எஸ்ஸின் இண்டியானா மாநிலத்தில் 1890-இல் ஸாண்டர்ஸ் பிறந்தார். ஆறு வயதில் தந்தையை இழந்தார். மூன்று குழந்தைகளில் அவர்தான் மூத்தவர். ஆகவே தன் தாய் வேலைக்குச் சென்றிருந்த சமயத்திலெல்லாம் அவரே சமையல் செய்வது, தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வது போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். எட்டு வயதாகும்போது அந்த நாளைய அமெரிக்காவின் பிரபல உணவு வகைகளைச் சமைக்கும் அளவுக்குத் திறமை பெற்றார்.

அவருடைய தாய் மறுமணம் புரிந்துகொண்டதால், தம்முடைய பன்னிரெண்டாம் வயதில் விவசாயக் கூலியாளாக வேற்றிடம் சென்றார். பிறகு டிராம் வண்டியின் கண்டக்டராக வேலை செய்தார். (டிராம் வண்டி என்பது சாலையில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் குழிவான தண்டவாளத்தில் ஓடும் வண்டி. மேலே போடப்பட்டிருக்கும் மின்சாரக் கம்பிகளின்மீது பட்டு ஓடும் சிறு சக்கரங்களைக் கொண்ட கம்பங்கள் டிராம் வண்டிக்கு வேண்டிய மின் சக்தியைக்கொடுக்கும். தோற்றத்தில் பஸ் மாதிரி இருக்கும்).

பிறகு கியூபா நாட்டில் ராணுவ வீரராகப் பணி புரிந்தார்.  அப்போதெல்லாம் கியூபாவில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடந்துவந்தது. அமெரிக்கர்கள் அந்த நாட்டுப் படையில் சேரமுடிந்தது.  அதைத் தொடர்ந்து முப்பத்தெட்டு ஆண்டுகளின் ரயில்வே ·பயர்மேன், இன்ஷ¥ரன்ஸ் ஏஜெண்ட், கப்பல் ஏஜெண்ட், விளக்கு உற்பத்தியாளர், டயர் வியாபாரி, பெட்ரோல் ஸ்டேஷன் வேலையாள் போன்ற வேலைகளில் இருந்து பார்த்தார்.

அவருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. தம்முடைய வாடிக்கையாளர்களுக்காக சிற்றுண்டி தயாரித்துக் கொடுப்பார்.  அவருக்குச் சமையல் வேலை என்பது கைவந்த கலை.  அப்போதுதான் கோழிப் பொரியலைச் செய்ய ஆரம்பித்தார். இதன் ரெஸிப்பி எனப்படும் செய்யும் முறை அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

பொரித்த கோழியைச் சூடாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவேண்டும்.  விரைவாகவும் தயாரிக்கவேண்டும்.  ப்ரெஷர் குக்கரைப் பயன்படுத்தி, எட்டே நிமிடங்களில் ருசி குன்றாமல் பொரித்தார்.  அந்தப் பொரியலுக்கு விசேடமான மாவுக் கலவை யொன்றைப் பயன்படுத்தினார்.  அவருடைய தயாரிப்பைக் 'கெண்டக்கி ·ப்ரைட் சிக்கன்' என்று அழைத்தார்.

தம்முடைய உணவகத்தை ஸாண்டர்ஸ் க·பே என்று அழைத்தார். அது படிப்படியாக வளர்ச்சியுற்று, நூற்றைம்பது நாற்காலிகளையுடைய லட்சக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள நிறுவனமாக விளங்கியது.  1939-ஆம் ஆண்டில் அவருடைய ஸாண்டர்ஸ் க·பே நெருப்பில் எரிந்துபோயிற்று.  விரைவில் அதை மீண்டும் கட்டி வியாபாரத்தைத் தொடர்ந்தார்.  ஆனால் 1955-ஆம் ஆண்டு, அந்தப் பக்கத்தில் போடப்பட்ட பெருஞ்சாலைகளினால் ஸாண்டர்ஸின் வியாபாரம் வீழ்ச்சியுற்று, ஸாண்டர்ஸ் பெருங்கடனில் மூழ்கினார்.  ஓட்டல் ஏலத்தில் கைவிட்டுப் போயிற்று.
அறுபத்தாறு வயது!
கையில் ஒன்றுமே இல்லை.
சமூக நலன் இலாகாவிலிருந்து உதவித் தொகை பெறலானார்.

சிந்தித்தார்.
சிந்தனையில் கோழி கூவியது.

தம்முடைய பழைய காரில் ப்ரெஷர் குக்கரை வைத்துக்கொண்டு, கோழிப்பொரியல் மசாலாத் தூளையும் எடுத்துக்கொண்டு ஓட்டல் ஓட்டலாகச் சென்றார்.  பெரிய ஓட்டல் நிர்வாகிகளுக்கும் வேலையாட்களுக்கும் கோழிப் பொரியலைச் செய்து கொடுத்தார்.

"இது உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடைய மசாலாத் தூளை உங்களுக்கு விற்கிறேன். கோழியைப் பொரிக்கும் முறையையும் சொல்லித் தருகிறேன். நீங்கள் விற்கும் ஒவ்வொரு கோழிக்கும் நான்கு காசு வீதம் எனக்குக் கொடுத்துவிடுங்கள்", என்றார்.

இவ்வாறு தொடங்கியதுதான் KFC என்னும் Kentucky Fried Chicken.