திராவிட வேதம்
கண்ணார் கடல்சூழ்
திருவேங்கடம் 3
கண்ணார் கடல்சூ ழலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல உய்த்தாய்
விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே!
இலங்கைப் பதிக்கன் றிறையாய அரக்கர்
குலங்கெட் டவர்மாளக் கொடிப்புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய
அலங்கல் துளப முடியாய்! அருளாயே!
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரா லம்இளம் தளிர்மேல் துயிலெந்தாய்
சீரார் திருவேங் கடமா மலைமேய
ஆரா அமுதே! அடியேற் கருளாயே!
உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாக
கொண்டாய்-குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங் கடம்மேய
அண்டா! அடியே னுக்கருள் புரியாயே!
தூணாய் அதனூ டரியாய் வந்துதோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திருவேங் கடமா மலைமேய
கோள்நா கணையாய்! குறிக்கொள் எனைநீயே!
மன்னா இம்மனி சப்பிற வியைநீக்கி
தன்னாக்கித் தன்னின் அருள்செய் யும் தலைவன்
மின்னார் முகில்சேர் திருவேங்கடம்மேய
என்னானை என்னப்பன் என்நெஞ்சி லுளானே
மானேய் மடநோக்கி திறத்தெதிர் வந்த
ஆனேழ் விடைசெற்ற அணிவரைத் தோளா
தேனே திருவேங் கடமா மலைமேய
கோனே என்மனம் குடிகொண் டிருந்தாயே!
சேயன், அணியன் என சிந் தையுள்நின்ற
மாயன் மணிவா ளொளிவெண் தரளங்கள்
வேய்விண் டுதிர்வேங் கடமா மலைமேய
ஆயன் அடியல்லது மற்றறியேனே!
வந்தாய்; என்மனம் புகுந்தாய்; மன்னிநின்றாய்
நந்தாத கொழுஞ் சுடரே! எங்கள் நம்பீ
சிந்தா மணியே! திருவேங் கடமேய
எந்தாய் இனியா னுன்னைஎன்றும் விடேனே!
வில்லார் மலிவேங் கடமா மலைமேய
மல்லார் திரள்தோள் மணிவண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்னமாலை
வல்லார் அவர்வா னவரா குவர்தாமே!
திருமங்கையாழ்வார்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$