தங்கபஸ்பம் பற்றி.......
சிலநாட்களுக்கு முன்னர் 'தங்கபஸ்பம்' என்னும் மருந்துப்பொருள் பற்றி எழுதியிருந்தேன். இது குறித்து சிலர் நையாண்டியாகக் கேள்விகள் எழுப்பி, நையாண்டியான கருத்துக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக எம்ஜீயார் சம்பந்தமான விஷயங்கள். போதாததற்கு வைரமுத்துவின் 'படையப்பா' பாட்டு.
'தங்க பஸ்பம்' என்பது ஒரு முக்கியமான மருந்து. இது தமிழர்களிடையே புழக்கத்தில் இருந்தது. 'தெரிந்த பெயர், தெரியாத விஷயம்' என்று சொல்வார்கள்.
ஆகவே இதைப் பற்றி என்னிடம் இருந்த சில நூல்கள், நான் கேள்விப்பட்ட விஷயங்கள் முதலியவற்றை வைத்து சுருக்கமாகத் 'தங்கபஸ்பத்தை' எழுதி வெளியிட்டேன்.
இதன் தொடர்பாகக் காயகல்பம், Rejuvenation, Longevity, அதிபலம், அதிவேகம்,
அதிபோகம், அதிபுத்தி, புலன்களின் தீட்சண்யம் போன்றவற்றைப் பற்றிய கேள்விகள், டிஸ்ஷன் போன்றவை இருந்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்.
நான்தான் அந்தக் கட்டுரையின் முடிவிலேயே, 'சரியான முறை இல்லாமல் போனால் 'ஹோகயா' என்று எழுதிவிட்டேனே.
தங்கபஸ்பம் மட்டுமில்லை..... எந்த மருந்துமே - உங்கள் Aspirin-இலிருந்து Zopiclone வரைக்கும் எல்லாவற்றுக்குமே டாக்ஸிஸிட்டி உண்டு.
ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு படம். 'மிஸ் மாலினி'. ஹீரோயின் புஷ்பலதா. அவருடைய வேலைக்காரி சுந்தரிபாய்.
சுந்தரிபாய் ஒரு பாட்டுப் பாடுவார்......
"பலே ஜோர்... பலே ஜோர்.... பட்டனவாசம் நான் பாத்துப்பிட்டேன் பாத்துப்பிட்டேன், பணத்துக்கு நாசம்"
என்ற பாட்டு.
அதில் வரும் அடிகள்,
"தலவலிக்கொரு மாத்திரெ, தடுமனுக்கொரு மாத்திரெ
தவறிப்போயி போட்டுக்கிட்டா தர்மலோக யாத்திரெ"
என்று இருக்கும்.
இதேதான் எல்லா மருந்துக்கும். அமுதம்கூட விஷமாகும்.
தங்க பஸ்பம் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள் தங்கபஸ்பத்தைப் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர். தங்க பஸ்பத்தால் கெடுதல் மட்டுமே உண்டு என்றிருந்தால் இத்தனை ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி வந்திருப்பார்களா?
அரசர்களில் பலர் தங்கபஸ்பம் சாப்பிட்டவர்கள்தாம். அவர்களுக்கு அந்த மருந்து ஊறு செய்திருந்தால், அதைக் கொடுத்த வைத்தியர்களைத் தோலை உரித்திருப்பார்கள், அல்லது போனால் போகட்டும் என்று கழுவில் ஏற்றியிருப்பார்கள். தங்கபஸ்பம் என்னும் உருப்படியே இண்டியன் ·பார்மக்கோப்பியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கும். அதற்குப் பதில் 'விஷ சாஸ்திர சிந்தாமணி'யில் இடம் பெற்றிருக்கும். அந்தக் காலத்தில் Slow Poison வகையறாவுக்கு மிகவும் கிராக்கி இருந்தது.
நையாண்டி செய்யலாம். நானேகூட நையாண்டியை ஒரு கலையாகவே வளர்த்து வைத்திருக்கிறேன். நையாண்டி கெட்டிக்காரத்தனமாக இருக்கவேண்டும். அசட்டுத்தனமாக இருக்கக்கூடாது.
அந்தக் காலத்தில் Court Jester என்னும் விதூஷகர்களை அரச சபையில் வைத்திருந்தார்கள். அவர்கள் பல கோமாளித்தனங்கள், நையாண்டிகள் செய்வார்கள்.
கொஞ்சம் தப்பினால் போச்சு.
"Off with his head!!!"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$