Wednesday, 1 June 2011

கூழுக்கு ஔவை

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்களின் உணவுப்பொருள்களைப் பற்றி அகத்தியர் மடற்குழுவில் இழையாடல் நடந்தது.

அப்போது தினைமாவைப் பற்றிப் பேசினோம். கூழைப் பற்றியும் கொஞ்சம் பேசினோம்.  அதன் தொடர்பில் ஔவைக் கூழுக்குப் பாடியது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

ஔவையுடைய சரிதத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு குறவன் தன்னுடைய இரண்டு தாரங்களுடன் வாழ்ந்துவந்தான். இருவருக்குமே குழந்தைகள் பிறக்கவில்லை. குறவனுக்குப் பெரிய குறத்தியின்மீது  பிரியம் அதிகம். அவள்மேல் இளைய குறத்திக்குப் பொறாமை. 

மூத்தாள் ஒரு பலாமரத்தை உண்டாக்கி அதைப் பேணிப் பாதுகாத்து வந்தாள். அதை ஒரு குழந்தை போலவே பாதுகாத்துக்கொண்டிருந்தாள். 

ஒருநாள் அவள் வெளியில் சென்றபோது இளையாள் அந்தப் பலாமரத்தை வெட்டிவிட்டாள். 

வீட்டிற்குத் திரும்பிவந்ததும் வெட்டிக்கிடக்கும் பலாவைக் கண்ட மூத்தாள் இடிந்து போய்விட்டாள். அவளைத் தேற்றும் வழியறியாமல் குறவன் திணறினான். மூத்தாள் உணவு உறக்கம் இல்லாமல் கவலையில் இருந்தாள். 

அப்போது ஔவையார் அங்கு வந்தார். பசியோடு இருந்த அவரை அந்தக் கவலையிலும் உபசரித்தனர். 

நிலைமையை அறிந்த ஔவையார் தம்முடைய கவித்துவத்தால் பலா மீண்டும் தழைத்து இலைகிளையுடன் பழம் பழுத்து நிற்கும்படி செய்தார். 

கூரியவாளால் குறைபட்ட கூன்பலா 
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் - சீரிய 
வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் 
பண்டு போல் நிற்கப் பணி.

இப்பாடலைப் பாடியவுடன் வெட்டிக்கிடந்த கட்டைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி மரமாய் வேரூன்றி நின்று பழத்துடன் விளங்கியது. 

இதனைக் கண்டு மகிழ்ந்த அந்தக் குறத்தி, பரிசிலாகத் தன்னிடம் இருந்த ஒரு படி தினைமாவை ஔவைக்குக் கொடுத்தாள். 

அதனைத் தம் தொங்குமூட்டையில் வைத்துக்கொண்டு ஔவை அங்கிருந்து சோழனுடைய அரசவைக்கு வந்தார். 

அப்போது அவருடைய ஜோல்னாப்பையைக் கண்ட சோழன் அதில் என்ன இருக்கிறது என்று வினவினான். 

அதற்கு பதிலிறுக்கும்வண்ணம் ஔவை,

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும் 
மூழைக்குழக்கு தினைதந்தாள் - சோழாகேள் 
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை 
ஒப்பிக்கும் என்றனுளம்.

என்று பாடினார். 

சிலம்பி என்னும் தாசிக்குப் பாடல் பெறவேண்டும் என்று ஆசை. அதனால் கம்பரிடம் தன்னைப் பாடுமாறு கேட்டுக்கொண்டாள். அவரோ எக்கச்சக்கமாகப் பொன்கேட்டார். அவள் தன்னிடமிருந்த சொத்தையெல்லாம் விற்று கம்பரிடம் பொன்னைக் கொடுதாள். ஆனால் அது அவர் கேட்ட பொன்னில் பாதியே இருந்தது. 

ஆகவே கம்பர்,

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே 
மண்ணாவதும் சோழமண்டலமே......

என்று பாதிவெண்பாவை மட்டும் பாடிக்கொடுத்தார். 

தாசி சிலம்பி கடுமையான ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்தாள். அப்போது ஔவை அங்கு வந்தார். அவருக்குக் கூழ் தந்து உபசரித்தாள். ஔவை கேட்கவே, தன் கதையைச்சொன்னாள். 
ஔவை மீதிப்பாட்டையும் பாடிப் பூர்த்திசெய்து கொடுத்தார். 

.....................................................................-
பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு. 

தன்னுடைய காலில் செம்மையான பொன்னால் ஆன சிலம்பு அணிந்துகொள்ளும் அளவுக்குச் சிலம்பி செல்வம் படைத்தவளானாள். 

இதனையொட்டி 'கம்பன் பொன்னுக்குப் பாடுவான்; ஔவை கூழுக்குப் பாடுவாள்' என்ற 
சொல்வழக்கு ஏற்பட்டது. 

அதைக் குறிக்கும் இன்னொரு பழம்பாடலும் இருக்கிறது.

காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி,
ஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி,
கூழுக்கிங்கு அவ்வையெனக் கூறு.