Tuesday, 21 June 2011

யுத்த நீதி



மகாபாரதத்தில் ராஜநீதிப் பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன.
யுத்த சாத்திரம் யுத்த நீதி ஆகியவையும் நிறையாக் காணப்படும். 

ஓரிடத்தில் சொல்லப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. 
போரின்போது தற்காப்பு நிலைக்கு மன்னன் தள்ளப்படும்போது, அவன் உடனடியாக தன்னுடைய முக்கியமான கோட்டைக்குள் புகுந்துகொள்ளவேண்டும்.

காடுகளிலும் வெளிகளிலும் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு மாடுகளைப்  பாதைகளுக்கும் சாலைகளுக்கும் ஓட்டிவந்துவிடவேண்டும்.
  தன்னுடைய நாட்டைப் பாழ்படுத்திவிடவேண்டும்.

கிராமத்து மக்களையெல்லாம் நகரங்களுக்குக் குடிபெயர வைக்கவேண்டும்.  செல்வந்தர்கள் அனைவரையும் பாதுகாப்புப்படைகள் நிலையாக இருக்கும் கோட்டை நகரங்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.  எந்தப் பொருள்க¨ளையெல்லாம் அப்புறப்படுத்த முடியாதோ அவற்றையெல்லாம் எரித்து விடவேண்டும்.  புல்பூண்டு, பாலங்கள் முதலியவையும் நெருப்புக்கு இரையாகப்பட வேண்டும். நீர் வழிகள் முதலியவை அழிக்கப்படவேண்டும்.  குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளிலிருந்து நீர் வெளியேற்றப்
படவேண்டும். அவ்வாறு நீரை வெளியேற்றமுடியாத நீர்நிலைகளில் விஷத்தைக் கலக்கவேண்டும்.  கோட்டைக்கு அருகில் இருக்கும் அனைத்து காடுகளும் அழிக்கப்படவேண்டும். பெரிய மரங்களின் கிளைகள் வெட்டிவிடப்படவேண்டும்.  ஆனால் கோயில்களைச் சேர்ந்த எந்த மரத்தையும் வெட்டக்கூடாது.
கோட்டைகளில் பார்வைக்கூண்டுகளும் தகவல் சாதனங்களும் நிறுவப்படவேண்டும்.  கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளில் கூரிய ஈட்டிகள் மறைவாக நடப்பட்டு, முதலைகளும் ஏராளமாக விடப்படவேண்டும்.  கோட்டையிலிருந்து வெளியில் செல்வதற்கு ரகசிய பாதைகளும் சுரங்கங்களும்
இருக்கவேண்டும்.

எரிபொருள் நிறைய சேமித்துவைக்கப்படவேண்டும்.  பழைய கிணறுகள் தூரெடுக்கப்பட்டு, புதிய கிணறுகளும் வெட்டப்படவேண்டும்.  எல்லா நெருப்புகளையும் அணைத்துவிடவேண்டும். யாகசாலைகளில் உள்ள நெருப்பு மட்டுமே எரியவேண்டும்.  பகலில் நெருப்பு எரிப்பவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று முரசு அறிவிக்கவேண்டும்.  வண்டிக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பைத்தியங்கள், அலிகள், நாட்டியக்காரர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்படவேண்டும். ஏனெனில் அவர்களில் ஒற்றர்கள் இருக்கக்கூடும்.  தன்னுடைய ஒற்றர்களை சாலைகளிலும் வழிபாட்டுத்தலங்களிலும் மக்கள் கூடும்
ஊர்களிலும் திரியச் செய்யவேண்டும்.  ஆயுதசாலைகள், கவச அறைகள், யானை குதிரை லாயங்கள் முதலியவற்றுக்கு யாரும் அனுமதிக்கப்படக்கூடாது.  எண்ணெய், கொழுப்பு, தேன், வெண்ணெய், மருந்துகள், புல், விஷம் தோய்ந்த அம்புகள், எரிபொருள் முதலியவை நிறைய சேகரிக்கப்பட்டு சேமித்துவைக்கப்படவேண்டும்.
................................

மேலே உள்ள விஷயத்தை நோக்கும்போது பல விஷயங்கள் புலப்படுகின்றன.  அவற்றில் ஒன்று:

'Scorched Earth Policy' என்று இன்று நாம் குறிப்பிடும் உத்தி அன்றும் கடைபிடிக்கப் பட்டிருக்கிறது.
விளைநிலங்களையும் நீர் நிலைகளையும் பாழ்செய்து, பாலங்களைத் தகர்த்து சாலைகளையும் முக்கிய கட்டடங்களையும் உடைத்து, உணவுப்பண்டங்களை அழித்தல் போன்றவை அதில் அடங்கும்.

இரண்டாம் உலகயுத்தத்தில் ரஷ்யாவில் ஜெர்மன்காரர்கள் தோற்றதற்கு ரஷ்யர்கள் கடைபிடித்த Scorched Earth Policy-யும் ஒரு முக்கிய காரணம்.