Tuesday, 31 May 2011

ப்ரத்யங்கிரா வழிபாடு

சமீபத்தில் பிரத்யங்கிரா தேவி வழிபாடு பற்றிய கேள்வி வந்திருந்தது.  பிரத்யங்கிரா என்னும் தேவதை ஒருத்தி இருக்கிறாள் என்பதுகூட பல நூற்றாண்டுகளாக அதிகம் தெரியாமல் இருந்தது. தாந்திரீக முறைகளைக் கற்றவர்கள் மட்டுமே இந்த தேவியை அறிவார்கள். 

ஒட்டியம் அல்லது க்ஷுத்ர சாத்திரம், ஆபிசார பிரயோகம் எனப்படும் மாந்திரிக வகையின் பிரயோகங்களை முறியடிக்க இந்த தேவதையின் வழிபாடு பயன்படுத்தப்பட்டது. 

மிகவும் உக்கிரமான தேவதை. ஆனால் ஆற்றல் மிகுந்தவள். 

ஒரு கோயில். பிரம்மாண்டமான கோயில். மாலிக் கஃபூரின் படையாலும் பின்னால் வந்தவர்களின் படையாலும் பாழ்படுத்தப்பட்டு பெரும்பகுதி அழிக்கப்பட்ட கோயில்.  ஆனால் அங்கு ஒரு முக்கிய கர்ப்பகிரகம், முன்மண்டபம், ராஜகோபுரம் ஆகியவை மட்டும் ஏனோ விடுபட்டன. இன்னொரு கர்ப்பக்கிரகம் மறைக்கப்பட்டு, அந்த வகையில் பாதுகாக்கப் பட்டது. 

அந்த முன்மண்டபத்தில் சரபருடன் சூலினி துர்க்கையும் பிரத்தியங்கிராவும் இருக்கும் பெரிய சிற்பங்கள் இருக்கின்றன.  இன்றும் இருக்கின்றன. 

இடத்தைச் சொல்லமாட்டேன். 

அப்புறம் அதற்கும் ஒரு வேலி போட்டு, டிக்கட் விற்று, காசு வசூலிப்பார்கள்.  வீஐப்பி எவனாவது வந்தால் அவனுக்கென்று எல்லாரையும் காக்கவைப்பார்கள். விதவிதமான சடங்குகளையும் பூஜைகளையும் ஹோமங்களையும் திணித்துப் பணம் பறிப்பார்கள்.  பத்து ரூபாய், இருபத்தைந்து ரூபாய், ஐம்பது, இருநூற்றைம்பது, ஐந்நூறு, ஆயிரம் என்ற வகையில் தரிசன ரேட்டுகள் நிறுவப்படும். 

ஆகையால்......

அவர்கள் அங்கே அப்படியே இருக்கட்டும். Let us not disturb their thousand years of peace. 

இன்றும் சக்தி வழங்கிக்கொண்டு ஆற்றலுடன் இருந்துகொண்டுதான் வருகிறார்கள். 

இத்தனை நூற்றாண்டுகளாகக் கடுமையான பாதிப்புகளுக்கு, மிகவும் விஷயம் தெரிந்தவர்களால், மிக அரிதாக, பிரத்தியங்கிராவின் ஆற்றல் பிரயோகம் நடந்துவந்திருக்கிறது. 

ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது.

எதற்கெடுத்தாலும் பிரத்தியங்கிரா ஹோமம் செய்கிறார்கள். 

'கொசுவை அடிப்பதற்கு சம்மட்டியா?' என்று கேட்பார்கள். அதுபோலத்தான். அடிக்கடி எங்காவது பிரத்தியங்கிரா லட்சார்ச்சனை, மஹாஹோமம், சஹஸ்ரஹோமம், என்று விதவிதமாகச் செய்துகொண்டு வருகிறார்கள். 

'வைரி விநாசனம்' என்றால் என்ன? வைரி என்னும் விரோதி யார்?  நாம் ஒரு வியாபாரம் செய்கிறோம். இன்னொருவன் ஆரம்பிக்கும் இன்னொரு வியாபாரம் நம்மைப் பாதிக்கும். அது இயற்கைதான்.  ஆனால் நடப்பது என்ன? உடனே பிரத்தியங்கிரா ஹோமம் செய்வான்.  இந்தப் பேயாண்டிப் பூசாரி அடுத்தாற்போல அந்த இன்னொரு வியாபாரியிடம், இவன் செய்த பிரத்தியங்கிரா ஹோமத்தைப் பற்றி சொல்லிவிடுவான்.  உடனே அவனும் ஒன்றைச் செய்வான்.  அவ்வப்போது மஹா பிரத்தியங்கிரா ஹோமம் என்று நடைபெறும். இருபத்தைந்து, ஐம்பது, இருநூற்றைம்பது என்று டிக்கெட்டுகள்.  ராமன், ராவணன், வாலி, கபந்தன், தாடகை, ஹிட்லர், சர்ச்சில், வாஜ்பாயி, சோனியா என்று எல்லாரும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பார்கள்.  அனைவருக்கும் ஒரே ஹோமமாகச் செய்வான் அந்தப் பூசாரி. 

இதில் சிந்திக்கவேண்டியது ஒன்று உண்டு.  இம்மாதிரியான மந்திரங்களைக் கற்கும்போது செய்துகொள்ளும் பிரதிக்ஞை, சங்கல்ப்பம் ஆகியவை இருக்கின்றன.  அவை உடைக்கப்படுகின்றன. 

இந்த அளவுக்கு அதிகமாக பிரத்தியங்கிராவை ஏவிவிடுவதற்கு உண்டான முகாந்திரம்தான் என்ன? 

மலேசியாவில் அடிக்கடி பெரிய அளவில் நடக்கும். ரேடியோ, டீவீயெல்லாம் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து பேட்டியெல்லாம் எடுக்கும். பேப்பரில் அரைப்பக்க விளம்பரங்கள். 

இதில் என்ன வேடிக்கை என்றால், 'லோகக்ஷேமத்'துக்காகச் செய்வதாக விளம்பரப் படுத்துவார்கள்.  காதுல பூ.

பக்கத்து வீட்டுக்காரன் மூன்றாம் வீட்டுக்காரனுக்கும், எதிர்வீட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரனுக்கு எதிராகவும் பிரயோகம் செய்வது எப்படி லோக க்ஷேமத்தை ஏற்படுத்தும்? ஏற்படுத்தமுடியுமா? 

'சர்வ ஜன விநாசனம்' என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 

சமீப காலமாக பிரத்தியங்கிரா கோயிலுக்குப் படை படையாக' பஸ் பஸ்ஸாக மக்கள், கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனராம். எல்லாம் அந்த அம்மையார் மகிமை.  நான் பிரத்தியங்கிராவைச் சொல்லவில்லை.

அந்த தேவதையைப் பற்றி அறிந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதனை எதற்காக வழிபடுகிறார்கள் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.  அநியாயமான முறையில் கெடுதலையும் இடையூறையும் செய்யும் விரோதியை அழிப்பதில் தவறேயில்லை. உண்மையில் பார்க்கப்போனால் அதுதான் கிரமமும்கூட. அதனைச் செய்யவில்லையென்றால்தான் நாம் நம் கடமையிலிருந்து தவறியவர்களாக ஆகி விடுகின்றோம்.

'துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது ராஜநீதி. 

'பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்' என்பது கீதாவாசகம்.

கந்தர் ஷஷ்டி கவசத்தில் தன்னைத் தற்காத்துக்கொள்வது மட்டுமல்லாது, நமக்குக் கெடுதல் செய்யும் agency-களை முற்றிலும் அழிப்பதற்கு வேலாயுதத்தை ஏவச்செய்யும் மந்திரப்பகுதி விளங்குகிறது. 

'மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட' என்று சொல்கிறது.  அவனவன் செய்வதை செய்து கொள்ளட்டும் என்று போலியான அஹிம்ஸையைப் போதிக்கவில்லை. அதற்குண்டானதை அவனவன் அனுபவிக்கட்டும் என்று வாளாவிருக்கச் சொல்லவில்லை.

ஆனால்.......
பிரத்யங்கிரா போன்ற தேவதையர்களிடம் கொஞ்சம் பதனமாக இருக்கவேண்டியிருக்கும். Overkill என்ற சொல் அதிகம் அடிபடக்கூடியது.  சில பிரயோகங்கள் அப்படித்தான். எங்கு போய்த் தாக்கும், எப்படித் தாக்கும் என்பதைக் கட்டுப்படுத்த முடியாது.  பிரத்யங்கிராவாவது பரவாயில்லை. பக்கத்து ஊரில் ஒரு நபர். அவர் பேராக் என்னும் மாநிலத்தில் ஓரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்றை வீட்டிற்கு வெளியில் வைத்துக் கொண்டிருந்தார்.  அதுவும் சிம்ஹமுகி என்று சொல்லப்படும் அம்சத்துடன் இருக்கும் தேவதைதான். ஆனால் அது மிகவும் உக்கிரமான தேவதை. திபெத், நேப்பால், மாங்கோலியா முதலிய இடங்களில் அந்த தேவதையின் வழிபாடு உண்டு.

மலேசியாவில் க்ஷுத்ர தேவதைகளை வழிபடும் வழக்கம் மிகவும் அதிகமாகி வருகிறது.  பிரத்யங்கிரா க்ஷுத்ரதேவதையில்லை. நல்ல தேவதைதான். ஆனால் அதி உக்கிரமானவள்.  சில நேரங்களில் நாய்கள் திடீரென்று ஒட்டுமொத்தமாக ஊளையிடும். அப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தவண்ணம் மனதிற்குள் மந்திரத்தைச் சொன்னால்கூட, அந்த ஊளைகள் அடங்கிவிடும். 

ஆனால் அதற்கு அந்த மந்திரம் நம் வசப்பட்டிருக்கவேண்டும். அந்த குறிப்பிட்ட மந்திரம் நமக்கு சித்தியாகியிருக்கவேண்டும். நாம் சொன்னபடி அது பிரயோகம் ஆகவேண்டும்.  பெருவாரியாகக் காசை வாங்கிக்கொண்டு அன்றைக்கென்று மந்திரத்தைச் சொல்லிச் சொல்லி 'ஸ்வாஹா, ஸ்வாஹா' என்று கண்டதையெல்லாம் நெருப்பில் போடுவதால் என்னத்தைச் சாதிக்கமுடியும்?  எங்கும் எப்போதும் சுபிட்சத்தைத் தரும் வழிபாடுகள் இருக்கின்றன. 
அவற்றை ஏன் செய்யமாட்டாமல் இருக்கிறார்கள்?