அஞ்சூரு, எட்டு வட்டகை, பதினெட்டுப்பட்டி
தமிழர்களிடையே ஊர், நாடு, பட்டி, கிராமம், புறம், மங்கலம் ,
பாடி, குடி, போன்ற சொற்கள் மக்கள் இருக்கும் குடியிருப்புகளைக் குறிக்கும் சொற்கள். அவற்றைக் குழுமங்களாகத் தொகுத்து வைத்திருப்பார்கள். வரி, உறவுமுறை, குடிமான ஒப்பந்தங்கள் போன்ற அடிப்படையில் அந்தக் குடியிருப்புகள் இணைக்கப்பட்டு தொகுக்கப் பட்டிருக்கும். 'இரட்டபாடி ஏழாயிரம்' என்ற பிரதேசம் ஒன்றை ராஜராஜசோழர் படையெடுத்துக் கைப்பற்றியதாக வரலாறு சொல்லும். 'ஏழாயிரம்' என்பது அத்தனை tax-units ஆக விளங்கியிருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட குடியினர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கிராமங்களை இணைத்துக்கொண்டு வசித்துவருவார்கள். உதாரணமாக மேலூ¡ர் கள்ளர்கள், தங்களுக்கு உரியனவாக பதினெட்டு நாடுகளைச் சொல்வார்கள். நாட்டுக் கோட்டை நகரத்தார், ஒன்பது கோயில்கள் - தொண்ணூற்றாறு ஊர்களைச் சொல்வார்கள்.
பண்டைக்காலத்தில் பதினெண்விஷயத்தார், அஞ்சுவண்ணத்தார்,
ஆயிரத்தைந்நூற்றுவர் என்றெல்லாம் பல கூழுமங்களும் கூட்டத்தினரும் இருந்தனர்.
பிரான்மலையார்கள் தங்கள் ஊரும் இன்னும் நான்கு ஊர்களும் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளார்கள். இதனை 'அஞ்சூரு பஞ்சாயத்து' என்று சொல்வார்கள். 'இந்தமாதிரி ஒரு அநியாயத்த இந்த அஞ்சூருலயும் பாக்கமுடியுமா?' என்று அங்கலாய்ப்பது ஒரு வழக்கம்.
பழங்காலத்தில் தேசம் என்பதை மண்டலங்களாகப் பிரித்திருந்தார்கள் மண்டலங்களை வளநாடுகளாகவும், நாடுகளாகவும் பிரித்தார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்களைக் கொண்டது நாடு.
இப்போது நாம் குறிப்பிடும் ஊர் போன்றத்தல்ல பழங்காலத்து ஊர்.
அதற்கு உட்கிடையாகப் பல சிற்றூர்களும் கிராமங்களும் பட்டிகளும்
குரிச்சிகளும் சேரிகளும் இருக்கும்.
இதுபோலவே சிங்கம்புணரியும் ஒரு கூட்டணி வைத்திருக்கிறது.
'அஞ்சுமங்கலம்' அல்லது 'அஞ்சலநாடு' என்று பெயர். ஒவ்வொரு மங்கலத்துக்கும் பத்துப் பதினைந்து ஊர்களும் கிராமங்களும் பட்டிகளும் உட்பட்டு இருக்கும். அவ்வாறு ஐந்து மங்கலங்கள் இருக்கின்றன . கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், சதுர்வேதமங்கலம், வேளமங்கலம், (இன்னும் ஒரு மங்கலம் மறந்துவிட்டது) என்று அவற்றுக்குப் பெயர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பஞ்சாயத்து
விளங்கும். இதனை 'நாட்டுப் பஞ்சாயத்து' என்பார்கள். ஐந்து மங்கலங்களுக்கும் சேர்த்து ஒரு மெயினான நாட்டுப் பஞ்சாயத்து விளங்கும். நாட்டுத் தலைமைத்துவத்தில் 'நாட்டு ஆண்மைக் காரர்கள்' விளங்குவார்கள். ஏதாவது பொது இடங்களில் அவர்கள்தாம் தலைப்பாகைக் கட்டிக்கொள்வார்கள். தனக்கே இல்லாத அதிகாரத்தை யாராவது எடுத்துக்கொண்டுவிட்டால், 'எவண்டா ஒனக்குத் தலப்பா கட்டியூட்டான்? பெரிசா வந்து விசாரணை பண்ண வந்துட்டான்!' என்று சொல்கிறார்கள் அல்லவா?
ஒரு ஊருக்கு மட்டும் உள்ளதை 'ஊர்ப் பஞ்சாயத்து' என்பார்கள்.
உறவின்முறையினிடையே உள்ளதை 'உறவுமுறைப் பஞ்சாயத்து' என்பார்கள்.
இந்த மாதிரி உள்ளதுதான் அந்த 'பதினெட்டுப்பட்டி', 'எட்டுவட்டகை',
'பதினெட்டுப்பாளையம்' எல்லாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$