முதியவர் ஒருவர், பல ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டிருந்தார்.
பரிசே விழுந்ததில்லை. "சரி, இது போதும். இதற்குமேல் வாங்கும் வழக்கத்தை நிறுத்திவிடுவோம்", என்று உறுதிசெய்துகொண்டு, ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டார். வீடு திரும்பும்போது நெஞ்சு வலி. ஹார்ட் அட்டாக்!
மருத்துவமனையில் சீசீயூவில் வைத்து தீவிர வைத்தியம் செய்தார்கள். பிழைத்துகொண்டார். அடுத்தநாள் அவருக்கு ஜேக்பாட் விழுந்தது. பரிசுப்பணத்தை வாங்க வேண்டும். ஆனால் இதை எப்படிச்சொல்வது? அதிர்ச்சியில் இருதயம் நின்றுவிட்டால்? ஆகவே உறவினர்கள் அவருடைய டாக்டரிடம் சென்றார்கள். அவரையே விட்டு பக்குவமாகச் சொல்லச்சொன்னார்கள்.
பேஷண்ட்டிடம் டாக்டர் சென்றார்.
"ஹலோ! எப்பிடி இருக்கீங்க மிஸ்டர் சோணாசலம்?"
"ஒங்க புண்ணியத்துலயும் கடவுள் கிருபையாலும் பொழச்சுக்கிட்டேன், டாக்டர்".
கொஞ்சம் பரிசோதனை; குசலங்கள்; மருத்துவ ஆலோசனை.
"அதுசரி. மிஸ்டர் சோணாசலம்? நல்லா பொழச்சுட்டீங்க. இனிமேல ரொம்ப நாளு நீங்க ருப்பீங்க. சந்தோஷமா இருக்கோணும். அதுக்கு ஏத்தாப்புல ஒங்களுக்கு ஜேக்பாட் விழுந்தா என்ன செய்வீங்களாம்?
"டாக்குட்டரய்யா, இப்ப நான் உசிரோட இருக்கேன்னாக்க அது ஒங்கனாலதான், டாக்டர். வாநாள் பூரா லாட்டிரி லாட்டிரின்னுட்டு பணத்தத் தொரத்திக்கிட்டே கழிச்சுப்புட்டேன். யிப்ப உசிரு பொழச்சு வந்ததுக்கப்புறந்தான் வாழ்க்கையில பணத்த விட முக்கியமா இருக்குறது எவ்வுளவோ இருக்குன்னு தெரிந்சுது. கையி காலு சொகத்தோட, கெடச்சத தின்னுக்கிட்டு, மூச்சு விட்டுக்கிட்டு திருப்தியா இருந்தாவே பெரிசு; வெந்ததத் திண்ணு, திண்ணயில தூங்கி விதி வந்தாச் சாவம்னுட்டு எங்க அப்பத்தாக் கெழவி சிங்கம்பிடாரியா அடிக்கடி சொல்லுவான்னுட்டு சொல்லுவாஹ. எனக்குத்தான் அதெல்லாம் இது நால வரெய்க்கும் தெரியாம போச்சு. இப்பத்தான் எது உம்மையில நெறவு, எது கொறவு எதுன்னு தெரிஞ்சுச்சு. டாக்குட்டரய்யா அதுபோதும். எனக்கெதுக்கு லாட்டிரியும் கீட்டிரியும். அப்புடி ஜாக்குப்பாட்டு கீக்குபாட்டுன்னு உசிரோட இருக்கும்போதே கடோசி கடோசியா விளுந்துச்சுன்னாக்க, அத அப்பிடியே வாங்கி என்னோட உசிரக்காத்த ஒங்களுக்கே குடுத்துருவேன், டாக்குட்டரய்யா".
டாக்டர் கீழே சரிந்தார்.
டாக்டருக்கு ஹார்ட் அட்டாக்!