இந்து சமயத்தில் ஏராளமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. சமயம் என்பதே இதனால் ஒரு சிக்கலான நெருக்கடியான கஷ்டமான விஷயமாக ஆகி விடுகிறது. இவற்றிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு, இவற்றிலேயே மனத்தை லயிக்கவிட்டுக் கொண்டு, பரபரப்பாகவும் மும்முரமாகவும் செய்வதில் சமயத்தின் மையமான விஷயத்தை மறந்து போவிடுகிறார்கள். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கக்கூடிய தூரமோ இடைவெளியோ ஏதும் இல்லை.
"உனக்கும் உன் கழுத்து நரம்புக்கும் இருப்பதைவிட நான் இன்னும் நெருக்கமாக இருக்கிறேன்", என்று இறைவன் சொல்லியிருப்பதாக இன்னொரு மதம் கூறுகிறது. அப்பர் பெருமானோ, "உள்குவார் உள்கிற்று எல்லாம் உடனிருந்து அறிதி" என்று இறைவனின் நெருக்கத்தை தாமே நேரடியாக அறிந்து உணர்ந்து சொல்லியிருக்கிறார். இத்தனை நெருக்கமான இறைவனைச் சிந்திப்பதற்கோ, அடைவதற்கோ ஏன் இவ்வளவு சிரமம் மிக்க கடினமான பாதைகள்?
சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் அகத்தியத்தில் எழுதிய மடல் ஒன்றை இங்கு முன்வைக்கவேண்டியுள்ளது.
ஹேரி ஹ¥டினீ என்பவர் ஒரு பெரிய Escape Artist.
அவரைச் சங்கிலிகளால் கட்டி, அவற்றையும் பெரிய பெரிய பூட்டுக்களால் பிணைத்து, பெரிய பெட்டகத்தில் வைத்து அடைத்து விடுவார்கள்.
குறிப்பிட்ட நிமிடங்களில் அவர் வெளியில் வந்துவிடுவார்.
ஒருமுறை யாராலுமே உடைக்கமுடியாத பெட்டகத்தை ஒரு கம்பெனி செய்தது.
அதற்கு ஒரு சவாலையும் விடுத்து பந்தயமும் கட்டியிருந்தனர். அந்தப் பெட்டகத்திலிருந்தும் அவர் வெளியில் வந்துவிட்டார்.
சில தடவைகள் இப்படிச்செய்தனர். அவரைச் சங்கிலிகளால் பிணைத்து, ஒரு பெரிய பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி, அந்தப் பெட்டகத்தையும் சங்கிலிகளால் சுற்றி, பூட்டுக்களால் பிணைத்து, கிரேன் வைத்து ஆற்றுக்குள் இறக்கிவிட்டனர். அதற்குள்ளிருந்தும்கூட ஹ¥டினி வெளியே வந்து பந்தயத்தில் ஜெயித்துக் காட்டினார்.
உள்புறமிருந்து எப்படிப்பட்ட பெட்டகத்தையும் திறந்து விடுவார். பூட்டுத் திறப்பதிலும் மன்னன்.
அப்பேற்பட்ட ஆள்.
ஒரே ஒரு முறைதான் அவரால் ஒரு பெட்டகத்தைத் திறந்துகொண்டு வெளியில் வரமுடியவில்லை.
ஏன்?
யாருக்கும் ஏதும் புரியவில்லை.
ஹ¥டினீக்கும் புரியவில்லை.
ஆராய்ச்சி பண்ணினார்கள்.
ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணியபிறகு தற்செயலாகக் கண்டுபிடித்தார்கள்.
அவசரத்தில் பெட்டகத்தைப் பூட்ட மறந்துவிட்டார்கள்.
பூட்டப்பட்ட பெட்டகத்தை மட்டுமே திறந்து பழக்கப்பட்ட ஹ¥டினீக்கு, திறந்திருந்த பெட்டகத்தைத் திறந்துகொண்டு வரமுடியவில்லை.
அதான்......
திறந்திருக்கும் வழியில் சுலபமாகச் செல்வதற்கு நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.......
ஆன்மீகத்தில்தான்.