Wednesday, 7 December 2011

PEPPE! PEPPE!

     
பெப்பே, பெப்பே, பே, பே!!!


        பேயாராய்ச்சி என்னும் துறையில் பெயராராய்ச்சி என்னும் பேராய்ச்சி செய்தபோது, 'பெப் பெப் பெப் பே' என்ற ஒலிக்கோர்வை வந்தது. அது ஒரு       பழைய கதையை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
       இந்தக் கதை ஒரு பழம் மரபுவழிக்கதை(Traditional story).அகத்தியத்தில் இந்த மாதிரி மரபுவழிக்கதைகள் செவிவழிக்கதைகள் ஆகியவற்றை அவ்வப்போது சொல்வது உண்டு. அகத்தியப் பழைய ஆவணங்களில் தேடினால் பல ரசமான கதைகள் கிடைக்கும்.


        லோன்நாதன் என்ற பெயர் கொண்டதொரு ஆசாமி ஒரு பெரும் கடனாளியாக  இருந்தான். அக்கடனை எப்படிச் சமாளிப்பது என்றே அவனுக்குப் புரியவில்லை.
        அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவன். அவனிடமும் அந்த ஆசாமி கடன் வாங்கியிருந்தான்.
        ஒருநாள், அந்த நண்பனிடம் லோன்நாதன் தன்னுடைய கடன் நிலைமையைச் சொல்லி அழுது, எப்படி மீள்வது என்ற யோசனையைக்
கேட்டான்.
நண்பன் சொன்னான்:
"நான் ஒரு அயனான வழியைச்சொல்லித் தருகிறேன். இதன்மூலம் எல்லாருடைய கடனுக்கும் நீ டேக்காக் கொடுத்துவிடலாம். ஆனால் ஒன்று.
எனக்குத் தரவேண்டியதை மட்டும் நீ தந்துவிடவேண்டும். சரிதானே?"


     லோன்நாதன்: "சரி. உன்னுடையதைக் கொடுத்துவிடுகிறேன். வழியைச் சொல்லு".


நண்பன்: "இன்றிலிருந்து நீ வீட்டிலேயே இருந்து கொண்டு விடு. மழங்க மழங்க முழி. எதையும் கண்டுகொள்ளக்கூடாது. யார் எது கேட்டாலும் 'பே பே; பே பே' என்றே சொல்லவேண்டும்".


      அதன்படி, லோன்நாதன் வீட்டுக்குள் இருந்து கொண்டு வெறித்த பார்வையோடு இருந்தான். யார் வந்து என்ன கேட்டாலும் 'பே பே' என்று
சொன்னான். கடன் தொல்லையால் லோன்நாதனுக்குச் சித்தபிரமை பிடித்து விட்டது என்று கடன்காரர்கள் எல்லாரும் நம்பினர். ஆகவே கடனை இனி வசூலிக்கமுடியாது என்று முடிவுகட்டி, கடனுக்குத் தண்ணி தெளித்துவிட்டனர்.


       சில நாட்கள் கழித்து நண்பன் லோன்நாதனின் வீட்டுக்குச் சென்றான்.
அவனைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக, "பார்த்தாயா உன்னுடைய கடனெல்லாம் ஒழிந்து போயிற்று." என்றான்.
       லோன்நாதன் ஒன்றும் சொல்லவில்லை. நண்பன் தொடர்ந்து பேசினான்.
       லோன்நாதன் எதற்குமே பதில் சொல்லவில்லை.
       கடைசியில் நண்பன், "என்னப்பா என்னுடைய கடனை இப்போது நீ தீர்த்து விடலாம்தானே?" என்றான்.
        லோன்நாதன் மழங்க மழங்க விழித்தான் தன் முன்னால் எதையும் குறித்துப் பார்க்காமல், வெறித்துப் பார்க்கலானான்.
       லோன்நாதனிடமிருந்து கடைசியாக பதில் வந்தது:



       "பே பே; பே பே!"

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$