Wednesday, 31 August 2011

OBJECTS OF ABHISHEKAM


அபிஷேகப் பொருட்கள்


தமிழில் சதக நூல்கள் என்ற வகை உண்டு. 
நூறு பாடல்களுடன் காப்புப் பாடல் ஒன்றும் கொண்ட நூல்கள். 
இவற்றில் உலகியல், வாழ்வியல் யதார்த்தவாதக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் இருக்கும். பல பாடல்கள் உள்ளத்தை உருக்கும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழுத்தி அந்த தெய்வத்திடம் சரண் அடைவது போல் பாடல்களை அமைத்திருப்பார்கள். 
சதக நூல்களில் மிகவும் பிரபலமானது குமரேச சதகம்.  
சதகநூல்களில் அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை பிரபலமானவை. 
அண்ணாமலையார் சதகம் என்றொரு நூலும் இருக்கிறது. இது அவ்வளவு 
பிரபலமானதல்ல. 


உலக நடப்பு, வாழ்வியல், யதார்த்தம், லௌகீகம், நீதி, தர்மம் ஆகியவற்றைப் பற்றி பெரும்பாலும் பேசும். 
ஆனாலும் தண்டலையார் சதகம் சற்று வித்தியாசமானவற்றைப் பேசும். 
தொண்டைமண்டல சதகம் தொண்டை மண்டலத்தைப் பற்றி பேசும். 

அபிஷேகத்தை எதெதைக் கொண்டு செய்யலாம் என்பதை அண்ணாமலையார் சதகத்தின் ஒரு பாடல் சொல்லுகிறது.


சுத்தஜலம் அபிடேகம், நல்லெண்ணெய், அரிசி, மா
தூள் மஞ்சள், நெல்லி, முள்ளி,
தூபஞ்சகவியமோடு ஆவின் நெய், பால் தயிர்,
சுவையான பஞ்சாமிருதம்,
உத்த பலா மா, கதலி மாதுளையும் எலுமிச்சை,
ஓங்கு தமரத்தை நாரத்தை
ஒண்கனிச்சுளை, குளஞ்சி, தேன், திரட்டுப்பால்,
உயர் கருப்பஞ்சாற்றுடன்
மெத்தும் இளநீர், அன்னம், வில்வநீர், தபனநீர், 
மிளிர்பொன், இரத்நோதகம்,
மென்பசுங்கர்ப்பூர நற்பன்னீர், சந்தனம்,
விளங்கு தாராபிடேகம்
அத்தநிற் கித்தகைய அபிடேக மதுபுரிந்
தருள்பெறு சைந்தராயர்
அண்ணாவினில் துதிசெய் உண்ணாமுலைக்குரிய 
அணணாமலைத் தேவனே


எளிமையான பாடல். பொருள்கூற அவசியமில்லை. 
இதை மட்டும் சொல்லலாம்.


'மிளிர்பொன்' - இதனை ஸ்வர்ணாபிஷேகம் என்று சொல்வார்கள். 
கனகாபிஷேகம் என்றும் சொல்லப்படும். சிறு பொன் நாணயங்களாகச் செய்துகொண்டு அவற்றை வைத்து அபிஷேகம் செய்வார்கள். காசுகளில் தாமரை முத்திரை இடப்பட்டிருக்கும். சங்கு சக்கரம் பொறிப்பதும் உண்டு. 
'பொற்பூ' என்றொன்று உண்டு. பொன்னாலேயே மலர்களைச் செய்து அவற்றால் அபிஷேகம் செய்வார்கள். இதனை ஸ்வர்ணபுஷ்பம் என்றும் அபிஷேகத்தை 'ஸ்வர்ணபுஷ்பாபிஷேகம்' அல்லது ஸ்வர்ணாபிஷேகம்  என்றும் சொல்வார்கள். 
பெரிய மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும்போது தாம்பூலம், பழம், மஞ்சள் போன்றவற்றுடன் பொன்னால் ஆகிய பூவையும் வைத்துக் கொடுக்கவேண்டும். 
பொற்பூ வைக்கமுடியாதபோது அதன் இடத்தில் மலர் வைப்பார்கள்.
'பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது' என்பது ஒரு பழஞ்சொல் வழக்கு. 





இந்த ஸ்வர்ணபுஷ்பம் வழங்குவது தென்கிழக்காசியாவிலும் இருந்தது. 
பண்டைய மலாயாவில் உள்ள சில பகுதிகள் தாய்லந்து பேரரசின் கீழ் இருந்தன. மலாயாவிலிருந்து ஆண்டு தோறும் அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையேனும் அன்பளிப்புகள், கப்பம் போன்றவற்றைத் தாய்லந்து மன்னருக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதனை பூஙஆ  மாஸ் Bungah Mas அல்லது Bungah Emas  என்பார்கள். பல சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பொற்பூக்கள் கொண்ட சிறிய மரத்தைப் போலவே பொன்னால் செய்து அனுப்பிவைப்பார்கள்.
      

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$