கந்தர் அனுபூதி என்னும் நூலில் ஐம்பத்தோரு பாடல்கள் உள்ளன. அருணகிரிநாதர் பாடிய கடைசி பாடல்கள் இவைதாம்.
ஐம்பதொன்று என்று அவர் அந்த குறிப்பிட்ட தொகையில் பாடியது ஒரு மரபை முன்னிட்டு. அத்துடன் அட்சரமாலை என்னும் கணக்கில் அந்தப் பாடல்கள் விளங்கும். சிறந்த அனுபூதிமானாகிய அப்பைய தீட்சிதர், தாம் தம்மை மறந்த உன்மத்த நிலையில் இருந்தபோது பாடிய பாடல்களும் ஐம்பத்தொன்றுதாம். அந்தப் பாடல்களுக்கு அவற்றை அப்பைய தீட்சிதர் சொல்லச் சொல்ல எழுதிய அவருடைய சீடர்கள் 'உன்மத்த பஞ்சாசத்' என்று பெயரிட்டனர்.
'மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா' என்பதும் ஒரு ரகம்.
அப்பர் பெருமானார் இயற்றிய சித்தத்தொகை திருக்குறுந்தொகை என்னும் பாடல்கள் இன்னொரு ரகம். பாம்பன் சுவாமிகள் இயற்றிய ஷண்முகக் கவசம்கூட அதே ரகம்தான்.
கந்தர் அனுபூதியிலுள்ள ஐம்பத்தோரு பாடல்களுக்கும் குறிப்பிட்ட தன்மைகள் படைத்த ஆற்றல்கள் இருக்கும். அவற்றிற்குப் பிரயோகங்கள் உண்டு.
பிற்காலத்தில் இருந்த சில சித்தர்கள் அந்தப் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் யந்திரங்கள் எழுதி அவற்றிற்குரிய ஜபவிதானத்தையும் ஏற்படுத்தினர். அவர்கள் அருளாளர்கள்.
'ஜபவிதானம் என்றால்' என்ன என்று இளைஞர்கள் கேட்பார்கள். ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஜபம் செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய நியதிகளும் சொல்லவேண்டிய மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் உண்டு. இன்னின்ன காரணங்களுக்காக இன்னாராகிய நான் இந்த மந்திரஜபத்தைச் செய்கிறேன் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக்கொண்ட பிறகு இந்தப் பகுதிவரும். ஒவ்வொரு மந்திரத்துக்கும் அதற்குரிய சந்தஸ், அதைக் கண்டறிந்த ரிஷி அந்த மந்திரத்தில் அடங்கிய ஆற்றல் போன்றவை இருக்கும்.
விரல்கள், கைகள், குறிப்பிட்ட உறுப்புகள் ஆகியவற்றை மந்திரங்களால் சுத்திகரித்து அவற்றிற்கும் ஆற்றல் மண்டலங்களை ஏற்றிக்கொள்ளவேண்டும். அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்தை மனதில் உருவகப்படுத்தி ஆவாஹணம் செய்து கொள்ளவேண்டும். அதற்கு 'மூர்த்தி த்யானம்' என்ற துதி இருக்கும். அவற்றுடன் திக்குக் கட்டு, கட்டவிழ்ப்பு போன்றவையெல்லாம் உண்டு. விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டறிந்துகொள்ளலாம். இங்கே இப்போது நான் சொல்வதை மிகவும் எளிமைப் படுத்திச்சொல்லியிருக்கிறேன். 'ஏதோ இப்படியெல்லாம் இவை இவை இருக்கின்றன; இவையெல்லாம் மந்திர ஜபத்தில் சம்பந்தப்பட்டவை' என்று அறிமுக நிலையிலாவது அறிந்துகொள்ளவேண்டாமா? அதற்காகத்தான்.
முருகனை 'குருநாதன்' என்றும் 'சிவகுரு' என்றும் 'பரமகுரு' என்றும் சொல்வது வழக்கம். மற்ற தெய்வங்களும் ஒவ்வொருவருக்கு குருவாக வந்து உபதேசமளித்திட்டாலும்கூட 'குருசாமி' என்றாலே அது முருகனைத்தான் குறிக்கிறது.
அந்த முருகனுக்குரிய குருத்துவத்தை அறிந்து உணர்ந்து, முருகனையே குருவாகக் கொண்டு வழுத்தி, குருவாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய சில பாடல்கள் கந்தர் அனுபூதியில் இருக்கின்றன.
இவற்றில் ஒரு பாடலை மட்டுமே சொல்லிச் சொல்லி ஒருவர் கண்களை இழந்த நிலையிலும் அவதானக்கலை கைவரப்பெற்றார்.
இந்த ஐந்து தவிர முருகன் உபதேசித்தது சம்பந்தமான பாடல்கள் இன்னும் சில இருக்கின்றன.
முருகன் தனிவேல் முனிநம் குருவென்
றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே!
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல் தந்துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே!
நாதா குமரா நமவென் றரனார்
ஓதாய் என ஓதியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பத சேகரனே
கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருள்ஈ குவையோ
குரவா! குமரா! குலிசாயு தக்குஞ்
சரவா சிவயோ கதயா பரனே!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!