Wednesday, 27 July 2011

பாலிற்கோர் புரட்சி

ஒரு காலத்தில் நான் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும், என்னுடைய வீட்டிலும் பல  கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏராளமான கேள்விகள் கேட்கப்படும்.  ஒரு முறை ஒரு கலந்துரையாடலின்போது இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

>அபிஷேகத்துக்கு Milkmaid Tin பாலை பயன்படுத்தலாமா ?

அதற்கு அப்போது நான் சொன்ன பதில் - 

>கறந்த பாலை பயன் படுத்துவது ஒரு சம்பிரதாயம். மாற்றமுடியாத விதி அல்ல. பாக்கட் பாலை பயன்படுத்தலாமா, கொழுப்பு குறைக்கப்பட்ட/நீக்கப்பட்ட பாலை பயன்படுத்தலாமா, ஒட்டகப் பால் பரவாயில்லயா என்பதெல்லாம் விதண்டா வாதம்.  இன்னும் விரிவாகச் சொல்கிறேன். 

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நான் மலாயாவின் கீழக்குப் பகுதியில் உள்ள கிலந்தான் என்னும் மாநிலத்தில் வேலை செய்தபோது அங்கிருந்த மூன்றே கோயில்களில் ஒன்றாகிய தும்ப்பாட் மாரியம்மன் கோயிலில் செயற்குழுவில் கொஞ்சகாலம் இருந்தேன்.  அந்தக் கோயிலில் அபிஷேகம் செய்யும்போதெல்லாம் கோத்தாபாருவில் இருந்த சீக்கியன் ஒருவனிடம் பசும்பால் வாங்கி ஊற்றுவது வழக்கம். வேறு வழியில்லை. ஏனெனில் அவனிடம் மட்டுமே பசு மாடுகள் இருந்தன. அவனிடம் இருந்தவையோ மூன்று மாடுகளே. ஆனால் தைப்பூசத்தின்போது நூற்றுக்கணக்கான பால்குடங்களுக்கு அவன் பால் சப்லை செய்வான்.  அவன் என்ன, "கோமாதா எங்கள் குலமாதா" என்று காமதேனுவா வைத்திருக்கிறான்...., உலகத்துக்கே கரந்துகொடுக்க.

சிறிது மாட்டின் பாலுடன் நிறைய மாட்டின் பால் கலப்பான். <மா + டின் + பால் = மாட்டின் பால்> 

இதற்கு ஒரு வழி சொன்னேன். 

பேக்கெட் பால் என்றொரு பால் இருக்கிறது. அட்டை டப்பாக்களில் அதுவரும். இதில் இருப்பது நல்ல பசும்பால். நியூஸீலந்த் பசு.  அதனை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தலாம் என்று சொன்னேன். அப்போது அதற்குப் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.  நான் பேசும் பொது நிகழ்ச்சிகளில் இந்தக் கருத்தை வலியுறுத்தினேன்.  "கண்ட கண்ட மாவைக் கலந்து கொடுப்பதையெல்லாம் பால் என்று எடுத்துக்கொண்டு அபிஷேகம் செய்கிறீர்கள். அதைவிட அசல் பசும்பால்; ஆனால் கோத்தாவில்(அட்டை டப்பி) அடைத்தது எவ்வளவோ மேல்", என்றேன்.

அதற்கு ஆட்சேபங்கள் இருந்தன.

"சிங்கு செய்யிறத நாம பாத்துக்கிட்டா இருக்கோம்?"
"நம்ம கண்ணுக்குத் தெரியாம செய்யிறதுல நமக்குப் பங்கில்லை. அதுனால பாவமும் இல்லை" .
"வெள்ளைக்காரப் பசுவாச்சுங்களே? தீட்டு இல்லீங்களா?"
இப்படியெல்லாம் மடத்தனமாக ஆட்சேபம் தெரிவித்தவாறு இருந்தார்கள். 
ஆனால் நாளடைவில் இந்த Cantankerous, recalcitrant ஆசாமிகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு டச் லேடி பேக்கெட் பாலையே பக்தர்கள் கொண்டுவர ஆரம்பித்தனர். குருக்களிடம் விளக்கிச் சொன்னபோது அவரும் ஏற்றுக்கொண்டார்.  கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய ஆரம்பித்தார்கள்.  இப்போது மலேசியாவில் எங்கெங்கும் இந்தப் பால்தான் அபிஷேகத்துக்குப்  பயன்படுகிறது.

அதிலேயே susu segar என்றொரு வகையும் கிடைக்கும். Fresh Cow's Milk. இத்தனை நாட்களுக்குள்ளாகப் பயன்படுத்தவேண்டும் என்று லேபுலில் ஒட்டியிருப்பார்கள். அது அசல் பசும்பால். மூன்று நாட்களுக்குட்பட்டது. 

இதெல்லாம் குவாலா ப்ராங் மஜீது சொன்னதுபோல, "மனம் கொண்டது மார்ர்ர்க்கம்". அவ்வளவுதான். <அவர் அப்படித்தான் அழுத்திச்சொல்வார்.>

பகவத் கீதையில் 'பலம், புஷ்பம், பத்ரம், தோயம்' ஆகியவற்றில் எது கிடைக்கிறதோ, அதனை மனப்பூர்வமாக 'எனக்கு' அர்ப்பணம் செய்யச்சொல்லியிருக்கிறார்.  பழம், மலர், இலை, தண்ணீர் ஆகியவை. 

திருமந்திரத்தில், 

'யாவர்க்கும் ஆம் இறைவர்க்கோர் பச்சிலை' என்று சொல்கிறார். 

இப்போது எங்கு பார்த்தாலும் மலேசியாவில் அபிஷேகத்துக்குக்காக டன் கணக்கில் பேக்கெட் பால் பயன்படுத்தப் படுகிறது.  அதற்கெல்லாம் மூலம் நான் 1977-ஆம் ஆண்டு கெலாந்தான் மாநிலத்துத் தும்ப்பாட் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் ஏற்படுத்திய புரட்சிதான்.

தேவையா.... தேவையில்லையா?

இக்காலத்தில் வெளிவரும் புத்தகங்கள் பலவற்றில் புலவர்கள் எழுதிய பல பாடல்கள் இருப்பதில்லை.

ஏன்?

ஒவ்வாக்கருதுக்கள் என்பது ஒரு காரணம். 

இன்னொன்று இடக்கராகப் பாடப்படும் பாடல்கள். இடக்கர் என்றால் விரசமாக அல்லது விரசத்தை மறைவாக வைத்துப் பாடப்படும் பாடல்கள். 

காளமேகத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் அந்த அறுபத்துநான்கு தண்டிகைப் புலவர்களுடன் நிகழ்த்திய எமகண்டப் போட்டியின்போது பாடிய அத்தனைப் பாடல்களும் அச்சிடப்படவில்லை.  இப்போது நாம் 'கொச்சை'யாகவும் 'கெட்டவார்த்தை'களாகவும் கருதும் சொற்கள் இருப்பதால்தான்.  இவை மறைந்துவிடும். 

இவற்றை வெளிப்படுத்துவதா இல்லையா? 

அல்லது அப்படியே விட்டுவிடுவோமா?
இளைய தலைமுறையிடம் கேட்கலாம். ஆனால் இணையத்தில் இப்போது பேர் போட்டுக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் நோக்குகள் priorities எல்லாமே வேறு. அது நன்கு தெரிகிறது. அவர்களும் இப்போது இணையத்தில் trend-setters. ஆகவே அவர்கள் தங்களின் நோக்குகள் நோக்கங்கள் பார்வைகள் குறிக்கோள்கள் முதலியவற்றின் அடிப்படையில் கருத்துச்சொல்வார்கள். அல்லது ஏதாவது திட்டுவார்கள்:-)

எதற்கு வம்பு:-)

'இதெல்லாம் என்னத்துக்கு?' என்று சுலபமாகச் சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப் பார்த்தால் இணையத்தில் இன்று பேசப்படும் பல விஷயங்கள்தான் என்னத்துக்கு?

உரைவீச்சு, ஹைக்கூ, சிறுகதைகள் எல்லாமே 'என்னத்துக்கு' ஆகிவிடும். சில இதழிகள் போடும் விஷயங்களும் 'என்னத்துக்கு' ஆகிவிடும்.  சில உன்னத குறிக்கோள்களுடன் ஆரம்பித்த சில திட்டங்களும் 'என்னத்துக்கு' ஆகிவிடும். இல்லையா?

நான் அவற்றையெல்லாம் அப்படியெல்லாம் 'என்னத்துக்கு' என்று நினைத்ததேயில்லை.

அதது அவரவருக்கு
அதது அததற்கு
அவரவர் அங்கங்கே

ஆனால் நிசப்தமாக, மௌனமாக இருக்கும் மிகப் பெரிய இளைஞர் கூட்டமும் இணையத்தில் இருக்கிறது.   22 வயதிலிருந்து 28க்குள் இருக்கும் இளைஞர்கள் ஏராளமானோர் இணையத்தில் இருக்கின்றனர்.  எதிர்காலம் அவர்களுடையது. எதிர்காலத்தில் என்னென்னவெல்லாம் இருக்கவேண்டும் என்பது அவர்களின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. 

எங்களைப் பொறுத்தவரைக்கும்.........

நாங்கள் காளமேகப் புலவர் பாடல்கள், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது, பயோதரப் பத்து எல்லாவற்றையும் நன்றாகவே ரசித்தோம். இன்னும் பசுமையாக அவை எங்கள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போதும் அந்தப் பாடல்கள் ஏற்படுத்தும் கிளுகிளுப்பைச் சொற்களில் அடக்கிவிட முடியாது.