அதிசய ஆற்றல்கள்-#1
இதே மாதிரியான பல மடல்களை அகத்தியரிலும் வருங்காலவியலிலும் எழுதியுள்ளேன்.
இன்னும் எழுதப்படவேண்டியவை நிறைய இருக்கின்றன.
இந்தத் தொடரையும் எழுதித் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.
இவற்றைத் தொகுத்து நூலாகப் போடலாம்.
படியுங்கள்.....
ஒரு மடலில் பருவநிலை பற்றிய பஞ்சாங்க விதிகள், குறிப்புகள், வராஹமிஹிரரின் ப்ருஹத் ஸம்ஹிதை முதலிய விஷயங்களைப் பற்றி தொட்டு எழுதியிருந்தேன்.
இந்த மாதிரி துறைகளைப் பற்றி எத்தனையோ நூல்கள்; அந்த நூல்களில் எத்தனையோ பாடல்கள்; அந்தப் பாடல்களில் கண்ட எத்தனையோ விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள்.....
இவற்றையெல்லாம் அப்படியே துடைத்து ஒதுக்கித் தள்ளி விட முடிய வில்லை.
ஏனெனில் அவை உண்மையாகவே வேலை செய்கின்றன.
ஏன் வேலை செய்கின்றன, எப்படி வேலை செய்கின்றன...?
இதெல்லாம் அப்பாலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.
மதுரையில் தெற்காவணிமூல வீதியில் மதுரை ஆதீனம் இருக்கிறது. அதன் வாயிலுக்கு அருகில் தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் ஒரு சிறிய குறுகிய கடை. அதில் சுத்தமான கோரம்பாய் விரித்து வைத்திருக்கப் பட்டிருக்கும். நல்ல நறுமணம் மிகுந்த ஊதுபத்திகள் எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும்.
அங்கு ஒரு தரை மேஜை. அங்கு சடாட்சரம் என்று ஒரு ஜோசியர் அமர்ந்துகொண்டு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் எப்போதுமே நான்கைந்து பேர் அமர்ந்திருப்பார்கள். சடாட்சரம் பிறருக்கு ஜோசியம் சொல்வதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருந்தே ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டுவிடுவார்கள்.
பிறப்புக் குறிப்புகளைக் கொடுத்தால் வெகு வேகமாக மனக் கணக்காகவே எல்லாவற்றையும் போட்டு ராசிச்சக்கரத்தை வரைந்து விடுவார்.
அதில் காணப்படுகின்ற விஷயங்களை அப்படியே ஆய்ந்து, பகுத்து பலன்களைச் சொல்லிவிடுவார். அந்த ஆய்வுகளுக்கும் பகுப்புகளுக்கும் கணிப்புகளுக்கும் சான்றாக அவர் பல பாடல்களைச் சொல்வார். 'கடல்மடை திறந்தன்ன' என்பார்களே, அதுபோலத்தான் அவருடைய பாடல்களும். பீறிட்டுக்கொண்டு வரும்.
அவருக்குப் பதினோராயிரம் பாடல்கள் தெரியும் என்று ஒருமுறை சொன்னார். அவை அவருக்கு மனப்பாடமாக விளங்கின.
பதினோராயிரம் பாடல்கள் என்றால் அவற்றில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள் இருந்திருக்கும்.
இந்தப் பாடல்களின் உதவியோடு அவர் துள்ளிதமாகப் பலன் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஓர் ஆள் பதினோராயிரம் பாடல்களை மனப்பாடமாக வைத்திருக்க முடியுமா?
முடியும்.
அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். வன்றொண்டர் செட்டியார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலியோர் அப்படிப்பட்டவர்கள்.
இதைப் பற்றியும் அகத்தியரில் எழுதியுள்ளேன்.
அந்தப் பாடல்கள் Input. ஏதோ சில வகைகளில் Computing பண்ணி, ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தியும் சேர்த்தும் பகுத்தும் ஆய்ந்தும் பலன்களை விரல்நுனிக்குக் கொண்டுவந்தார்.
இன்னும் இருக்கே.....?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$