இடைக்காடர் சித்தரும் நவக்கிரகங்களும்
நம்முடைய வினைகள் - கர்மாக்கள் ஆகிய பிராரத்தம் சஞ்சிதம் ஆகாமியம் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் பலன் அமையும். அந்தப் பலனைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அவை நின்றுகாட்டும்.
பரிகாரங்கள் செய்வதால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாற்றங்களைச் செய்யலாம்.
இரண்டு மூன்று கதைகள் இருக்கின்றன. உங்களின் பொருட்டு சொல்கிறேன்.
இடைக்காடர் என்றொரு சித்தர். அவர் ஜோதிடத்திலும் வல்லவர்.
அவருடைய கணிப்பின்மூலம் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று கண்டறிந்தார். ஆகவே பால் கொடுக்கும் எருமையொன்றை வைத்துக் கொண்டார். வரகரிசி என்னும் தானியத்தை மாட்டுச்
சாணத்துடன் சேர்த்து, ஆயிரக்கணக்கில் எரு வரட்டி தட்டி, காயவைத்துக்கொண்டார்.
வரகு வைக்கோலையும் வைத்து பிரம்மாண்டமான கூடமொன்றைத் தயாரித்துக்கொண்டார். ஒரு முருங்கை மரத்தையும் வைத்துக்கொண்டார்.
பஞ்சம் வந்தது.
எருமைக்கு வரகு வைக்கோலைப் போட்டார். அது எருமையாதலால் உண்டது. எரு வரட்டியில் உள்ள வரகரிசியை உதிர்த்து அதனைத் தாம் உண்டார். எருமையின் பாலை அருந்திவந்தார். அது தொடர்ந்து பால் கொடுக்கும் வகையில் அதற்கு ஏற்ற மூலிகைகள் - காயவைத்துப் பக்குவம் செய்யப்பட்ட மூலிகைகளைக் கொடுத்துவந்தார்.
முருங்கைக் கீரையையும் பக்குவப்படுத்தி உண்டுவந்தார். முருங்கை மரத்துக்கு எருமையின் சாணமும் கழிவு நீரும் கிடைத்து வந்தன.
ஹாயாக வரகு வைக்கோல் பரணுக்குக்கீழே படுத்துக்கொண்டார்.
இப்படியே சில மாதங்கள் கழிந்தன.
விண்ணில் உள்ள கிரகங்கள் கீழே பார்த்தன.
எங்கும் பஞ்சம்.
ஆனால் இடைக்காடரின் பர்ணசாலையில்மட்டும் வளம் விளங்கியது.
கிரகங்களுக்கு ஆச்சச்சரியம். ஆம். ஆச்சச்சரியம்தான். ஆச்சர்யம் அளவு கடக்கும்போது அது ஆச்சச்சர்யம் ஆகும்.
தில்மூலநாயனாரின் சரடேஸ்வர தீபிகையில் 420-ஆம் சூத்திரத்தில் இதன் இலக்கணத்தைக் காணலாம்.
"யென்னடாயிது...? இந்தப் பாண்டிநாட்டுக்கு வந்த விசித்திரம்! எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பசியோடு இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டும் பசியாமலிருப்பது நமக்கென்ன லேபமா? வாருங்கள்... போய்ப் பார்ப்போம். இந்த இடைக்காடனின் கொட்டத்தை யடக்க ஒரு திட்டத்தைப் போடுவோம்", என்று கட்டபொம்மன் படத்தில் மேஜர் பானர்மேன் ஜாவர் சீதாராமன் போல் பேசிக்கொண்டு வந்தார்கள்.
இறங்கிவந்தார்கள்.
"ஆ...ர்ஹ்ஹ்ஹ்ஹ்......யிந்த வரகு வைக்கோல் கோட்டையை வைத்துக்கொண்டா மனக்கோட்டையைக் கட்டினான். யிப்போதே ராகு கேதுவை வைத்து ஒரு வழிபண்ணுகிறோம் பார்!"
இடைக்காடர் அவர்களை வரவேற்றார். அவர்களுக்குரிய மந்திரங்களில் வசிய, சம்மோஹணப் பிரயோகங்களை இணைத்து உச்சாரணை செய்து, அவர்களுக்கு எருமைப் பாலில் வரகரிசியைப் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட கிரகங்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது பார்த்து, இடைக்காடர் மிக விரைவாக ஒரு பெரிய இராசிக் கட்டத்தை வரைந்து, அந்தக் கிரகங்களை, இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எப்படி எங்கெங்கு இருப்பார்களோ அந்த மாதிரியாகக் கட்டங்களில் அடைத்துவைத்து விட்டார்.
அடுத்த வினாடி, மழைமேகங்கள் கூடி மழையைப் பெய்து, நீர் புரண்டு ஓடியது.
பஞ்சமும் நீங்கியது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$