Tuesday, 27 December 2011

OUTRAGING RAGE ITSELF

நன்மை தந்த கோபம்

        படித்துக்கொண்டே வரும்போது ஒரு பாடல் மனதை மிகவும் கவர்ந்தது. 


கன்னிவாடி என்னும் ஒரு ஜமீன் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு
பிறந்த சமயத்தில் அதன் ஜமீன்தாராக அப்பையசாமி துரைப்பாண்டியன் 
என்பவர் இருந்தார். 
அக்காலத்தில் பல புலவர்களை அவர் ஆதரித்தவர். 
அவருடைய ஆஸ்தானத்தில் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர் இருந்தார். கவிராயரை ஜமீன்தார் நன்றாகவே வைத்திருந்தார். 
         பல ஜமீன்தார்களைக் கூட்டுவித்து அவர் மத்தியில் 'சரபம்' 
என்னும் பட்டப்பெயர்கூட கொடுத்திருந்தார்.


ஆனாலும் பாருங்கள்.....ஒருமுறை ஜமீனுக்குக் கவியின்மீது கட்டுக் கடங்காத கோபம் ஏற்பட்டது. 


கன்னிவாடி பாளையக்காரர் மிகவும் கோபக்காரர். அதனாலேயே 
ரொம்பப்பேர் பயந்தார்கள். 
ஆனால் நம்ம கவிராயர் சாதாப்பட்ட ஆளோ சோதாப்பட்ட ஆளோ இல்லையே.
ஜமீன்தாரைத் தனியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.
அத்தனை கோபம்!
ஒருநாள் சில பெரிய மனிதர்களும் அரண்மனை அதிகாரிகளும் 
ஜமீன்தாருடன் இருக்கும்போது சரபக்கவி நேராக அந்த அவைக்குள் 
நுழைந்தார். 
அங்கிருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
'என்ன ஆகுமோ' என்று பயந்தவேளையில் ஒருவர் கேட்டார்,
"ராஜா உங்கள்மேல் கோபமாயிருக்கிறார் என்பது தெரியும்தானே? அப்படி 
இருக்கையில் ஏன் இங்கு நீர் வந்தீர்? அதுவும் அழையாமல்?"


சரபம் ஒரு சிறிய சிரிப்பை அலட்சியமாகச் சிந்தினார்.
ஒரு பாடலையே பதிலாகச்சொன்னார்....


விண்ணிற் கம்மிக் குமுறியிடி
வீழ்த்தி வெகுபேர் உயிரையிந்த
மண்ணுக்கிரையாப் பண்ணுமென்று
மழைமேகத்தை வெறுப்பதுண்டோ?
தண்ணிற் பொலியும் தடங்கன்னித்
தலத்தைப் புரக்கும் துரைப்பாண்டி!
எண்ணிப்பார்க்கில் உன் கோபமெல்லாம் 
நமக்கு இனிய யோகமரோ?


'விண்ணில் கம்மி, குமுறி, இடி விழச்செய்து பலருடைய உயிர்களைச் சேதப்படுத்துமே' என்று மழைமேகத்தை யாராவது வெறுப்பது உண்டா? அதற்கப்புறம் அந்த மேகம் உயிர் கொடுக்கும் தண்ணீரையும் வளத்தையும் உணவையும் அல்லவா வழங்கப்போகிறது? அதை யாராவது குற்றம் சொல்லமுடியுமா, என்ன?


அதுபோலத்தான். இப்போது மின்னல் மின்னி, குமுறி, இடி இடித்து, 
கோபத்தை வெளிக்காட்டும் கன்னிவாடிக் காவலா, துரைப்பாண்டீ.....
உன்னுடைய கோபமெல்லாம் எனக்கு இனிய யோகம் இல்லையோ? 


ஜமீன்தாருடைய கோபமெல்லாம் உடனேயே மாறிவிட்டது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$