Thursday, 2 June 2011

மூன்று வடிகட்டிகள்

தமிழில் 'கற்றலை'ப் பற்றிய சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது. 
நல்ல மாணவர்கள் யார், கெட்ட மாணவர்களை யார் என்பதை வகைப்படுத்தியிருக்கிறார்கள். நன்னூல் என்னும் இலக்கண நூலில் இந்த விஷயம் உண்டு.  மாணவர்களை வடிகட்டியாக உருவகப்படுத்துவார்கள்.   

நல்லதை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல்.  நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டுமே வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல்.  கெட்டதை வடிகட்டி எடுத்து எறிந்துவிட்டு நல்லதை மட்டும் வைத்துக்கொள்ளுதல்.  இப்படி ஒரு 'வடிகட்டி தத்துவம்' இருந்தது.

ஸாக்ரட்டெஸ் 'மூன்று வடிகட்டி' முறை ஒன்றை வைத்திருந்தார்.  ஸாக்ரட்டெஸ் பற்றிய ஒரு சம்பவம். 

அவருக்குத் தெரிந்த ஓர் ஆசாமி அவரிடம் ஒரு நாள் வந்தான். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தான்.  "உங்கள் நண்பரைப் பற்றி நான் சிறிது நேரத்துக்கு முன்னர் ஒரு விஷயம் கேள்விப் பட்டேன், தெரியுமா?"

"கொஞ்சம் நிறுத்து. நீ சொல்லும் அந்த விஷயத்தை நான் எடுத்துக்கொள்ளுமுன்னர் அதனை மூன்று வடிக்கட்டிகளால் வடிகட்டிப் பார்க்கவேண்டும்".

"அப்படியா"

ஆம். முதலாவது வடிகட்டி. அதுதான் 'உண்மை' என்பது. நீ என் நண்பனைப் பற்றிச் சொல்லப்போவது முற்றிலும் உண்மை என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?"  "இல்லை. போகிற போக்கில் காற்றுவாக்கில் பராபரியாகக் கேள்விப்பட்டதுதான்."  "ரொம்பச் சரி. அந்த விஷயம் உண்மைதானா என்பது உனக்குத் தெரியாது. அடுத்த வடிகட்டி......என் நண்பனைப் பற்றி நல்லவிஷயமாக ஏதும் சொல்லப்போகிறாயா?"  "இல்லை. அதற்கு நேர்மாறானது".

"அப்படியா. என் நண்பனைப் பற்றி ஏதோ கெட்டதாகக் கூறவருகிறாய். ஆனால் அது உண்மையா என்பது உனக்கு நிச்சயமில்லை. பரவாயில்லை. மூன்றாவது வடிகட்டி....'பயன்'.   நீ சொல்லப்போவது எந்தவகையிலாவது பயனுள்ளதா?  "இல்லை. அப்படியொன்றும் இல்லை".

சாக்ரட்டெஸ் சொன்னார்:
நீ என்னிடம் சொல்லவந்தது உண்மையும் இல்லை; நல்லதும் இல்லை. பயனுள்ளதும் இல்லை. அப்படியானால் அதனை ஏன் என்னிடம் சொல்கிறாய்?"






2 comments:

  1. வள்ளுவப் பெருந்தகை முன்னாடியே சொல்லிவிட்டாரே:
    “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”
    அதற்க்கு ஏற்ற வழி வகை இவை.
    நன்றி
    ராஜாராமன்.

    ReplyDelete
  2. உங்களுடைய Chronology ரொம்பவும் உதைக்கிறது.

    எப்படியோ கருணாநிதிச் சோழப் பெருமகனாரும் அவருடைய குருமஹாசன்னிதானங்களும் திருவள்ளுவரை கிமு 40க்குத் தள்ளிவிட்டார்கள்.

    அப்படியும் பார்த்தாலும்கூட ஸாக்ரட்டீஸ் இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் போய்விடுகிறார்.

    ஆகவே வள்ளுவர் 'முன்னாலேயே சொல்லிவிட்டார்' என்று சொல்வது தவறு. ரொம்பவும் பிற்பட்ட காலத்தில்தான் சொல்லியிருக்கிறார்,

    ReplyDelete