அன்பர்களே,
அகத்தியம் ஆரம்பித்த புதிதில் - 1999 ஆண்டின் சித்திரை மாதத்தில் அன்பர் சுமன் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், பட்டர் செங்கோல் வாங்கும் சடங்கு முதலியவற்றைப் பற்றி எழுதி, மேல்விபரம் கேட்டிருந்தார். அதற்காக 'நாயக்கர் கட்டளை' என்ற பெயரில் ஒரு தொடரை எழுதினேன்.
சிதறிக்கிடந்த மடல்களில் பெரும்பான்மையானவற்றைத் தேடி எடுத்துத் தொகுத்துள்ளேன். ஏதோ...மீனாட்சியம்மனுக்கு நான் செய்யும் ஒரு கைங்கர்யமாக இருக்கட்டும்.
இதற்கு முன்னர் prelude ஒன்றைச்சொல்லியே ஆகவேண்டும்.
மதுரையை ஆண்ட பாண்டியர்களை வீழ்த்தி மாலிக் க·பூர், குஸ்ரவ் கான், முகம்மது துக்லக் ஆகியோர் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினார்கள். அவர்களில் துக்லக், தன்னுடைய தளபதியான ஷரீ·ப் அஹ்ஸனை மதுரையில் கவர்னராக நியமித்து, தமிழகத்தை ம'ஆபர் என்ற பெயரில் தன்னுடைய பேரரசின் இஇருபத்தாறாவது மண்டலமாக நிறுவிக்கொண்டான்.
அஹ்ஸன் சமயம் பார்த்து, மதுரையை தனி நாடாகப் பிரகடனம் செய்துகொண்டான். ஜலாலுத்தீன் அஹ்ஸன் ஷா என்று சுல்தானாகப் பட்டம் சூட்டிக்கொண்டு, தன்னுடைய பெயரால் பொன், வெள்ளி நாணயங்கள் வெளியிட்டுக் கொண்டு ஆட்சிபுரிய ஆரம்பித்தான். (அதற்காக அவருடைய மகனும் பெரிய அறிஞருமான ஷரீ·ப் இஇப்ராஹீம் கொடுமையான முறையில் துக்லக்கால் பழிவாங்கப்பட்டார் (அது வேறு ஒரு கதை). அஹ்ஸன் ஷாவைத் தொடர்ந்து நாற்பத்தெட்டு ஆண்டுகளில் ஏழு சுல்த்தானியர் ஆண்டனர்.
கடைசி சுல்த்தான் சிக்கந்தர் ஷாவை, கர்நாடகத்தில் புதிதாகத் தோன்றியிருந்த விஜயநகர் அரசின் இஇளவரசர் குமார கம்பணஉடையார் போரில் தோற்கடித்தார். கடைசியில் திருப்பரங்குன்றம் மலைமீது கம்பணருக்கும் சிக்கந்தருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட வாட்போரில் (duel)சிக்கந்தர் ஷா இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
மதுரை விஜயநகரத்து ராயர்களின்கீழ் வந்தது. அவர்கள் நாட்டை சிறுசிறு பிரிவுகளாக ஆக்கி "அமரநாயக்கர்" என்ற படைத்தலைவர்களிடம் கொடுத்தனர். மதுரை தஞ்சைபோன்ற இடங்களில் பெருந்தலைவர் யாராவது இருப்பர். மதுரையைப் பழைய பாண்டியர்களில் ஒருவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வரவில்லை. தமிழ் மன்னர்களிடையே ஒற்றுமையில்லாததால் ஏற்பட்ட குழப்பங்களைச் சரிக்கட்டி நியாயமான மன்னர் வகையறாவிடம் நாட்டை ஒப்படிக்கச் சொல்லி அப்போது விஜயநகரத்தின் போரசராக இருந்த கிருஷ்ணதேவ ராயர் ஆணையிட்டார். ஆணையை மேற்கொண்டு அவருடைய மஹாமண்டலேஸ்வரராகிய நாகம நாயக்கர் பெரும்படையுடன் மதுரைக்குச் சென்றார். ஆனால் தமிழ் மன்னர்களிடம் நாட்டை ஒப்படைக்கவில்லை. தாமே வைத்துக்கொண்டார். அவரைத் தோற்கடித்து, பிடித்துவருமாறு ராயர் உத்தரவின்பேரில் நாகமரின் மகன் விஸ்வநாத நாயக்கர் புறப்பட்டு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட போரில் நாகமரை விஸ்வநாதர் வென்றார். நாகமர் பின்னால் ராயரால் மன்னிக்கப்பட்டு மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். விஸ்வநாத நாயக்கர் தம்முடைய அமைச்சராகிய தளவாய் அரியநாத முதலியாருடன் மதுரையை ராயரின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தார். விசுவநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் ஆளுனராக மதுரையில் நியமனம் பெற்றபோது, மதுரைநாட்டில் பல நிர்வாக சீரமைப்புகள் செய்தார். அவரா செய்தார்? அவருடைய தளவாய் அரியநாதமுதலியார் செய்தார்.
அதன்பின்னர் மதுரைநாடு இன்னும் விரிவாக்கம்பெற்று, கிட்டத்தட்ட தனியாட்சி அரசுபோல் விளங்கியது. அப்போது மதுரையே அந்த நாயக்கமன்னர்களின் தலைநகராக விளங்கியது.
மதுரை மீனாட்சியம்மன் குமாரகம்பணனிடம் ஒரு வாளைத் தந்ததாக "மதுராவிஜயம்" சொல்கிறது. மதுரையை ஆண்ட நாயக்கர்கள், மதுரையின் நாயகியாகிய மீனாட்சியம்மனின் பிரதிநிதிகளாகவே தங்களைக் கருதிக்கொண்டு, மதுரையை ஆட்சி புரிவது மரபாக விளங்கியது. ஒவ்வோர் ஆண்டும் மீனாட்சியம்மனின் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது, அப்போது பட்டத்திலிருக்கும் நாயக்கர், தான் ஏற்றிருக்கும் பிரதிநிதித்துவத்திற்கு அடையாளமாக அம்மனிடம் செங்கோலை வாங்குவது வழக்கம்.
மதுரையே தொடர்ந்து ஐந்து நாயக்கர்களின் தலைநகராக இருந்தது. ஆறாவதாக ஆண்ட முத்துவீரப்பநாயக்கர் மதுரைநாட்டிற்கு கோல்கொண்டா, பீஜாப்பூர், மைசூர், தஞ்சை ஆகிய அரசுகளால் ஏற்பட்ட மிரட்டலைச் சமாளிக்கும் பொருட்டு தலைநகரை திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.
ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலைநாயக்கர், முதலில் திருச்சியில்தான் வசித்தார். திருமலைநாயக்கருக்கு முன்னாலும் அறுவர் நாயக்கர்; பின்னாலும் அறுவர் நாயக்கர். ஆனால் "நாயக்கர் வம்சம்" என்றாலேயே நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர்தான். கம்பராமாயணத்தில் குகன் ராமனைப் பார்த்துச் சொல்கிறானாமே, " நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்".
ஏழாண்டுகள் திருச்சியில் வாழ்ந்தார். ஏழாம் ஆண்டு , மண்டைச்சளி என்னும் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
அக்காலத்து மருத்துவமுறைகளோ பயனும் அளிக்கவில்லை. ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் எல்லாம் நேர்ந்து கொண்டும், ஒன்றும் ஆகவில்லை. 1634 A.D. ஆண்டின் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது மரபுப்படி செங்கோல் வாங்குவதற்காக, தன்னுடைய கடுமையான நோயையும் தாங்கிக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டார். நோய் கடுமையாகியதால், மதுரைக்கு நேரே செல்லாமல் திண்டுக்கல்லில் தங்கினார்.
அன்று இஇரவு, நாயக்கரின் கனவில், சொக்கன் வழக்கம்போல "எல்லாம் வல்ல சித்தர்" வடிவில் தோன்றி, " திருமலை! பாண்டிப்பதியே பழம்பதி. அங்கேயே நிலையாகத் தங்கிவிடு. மீனாட்சி சுந்தரேசுவரருக்கு வழிபாடுகள் செய்து, திருவிழாக்கள் நடத்து. உன்னுடைய நோய் நீங்கும். இந்த திருநீற்றை வாயில் போட்டு, உடலிலும் தடவு" என்று கட்டளையிட்டார். காலை எழுந்தவுடன் அவருடைய பரிவாரங்களிடம் சொல்லி, மதுரையிலேயே தங்கி, ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணியும் திருவாபரணமும் பண்ணிவைப்பதாக சத்தியம் பண்ணினார். பிறகு அவர் பல்விளக்கி, முகம்கழுவி, மூக்கைச் சிந்தியபோது மண்டைச்சளி கொத்தாகக் கழன்று விழுந்தது. சொக்கநாதப்பெருமானின் பேரருளாலேயே தம்முடைய நோய் பரிபூரணமாகத் தீர்ந்தது என்று நாயக்கர் மனமாற நம்பினார். பிறகு நேராக மதுரைக்குச் சென்று, கோயிலை அடைந்து சொக்கனையும் அங்கையற்கண்ணியையும் வழிபட்டார்.
இதுதான் Prelude............
No comments:
Post a Comment