திருமலை நாயக்கர் மதுரைக்கு வந்தபோது பல திருவிழாக்கள் இருந்தன; சிலவற்றிற்குஆள் சேர்வது கிடையாது. ஆண்டு முழுமையிலும் ஏதாவது திருவிழாக்கள் நடந்து கொண்டேயிருக்க ஏற்பாடு செய்தார். மதுரையில் நடந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில்சிலவற்றை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் இஇருந்தன. அதில் அவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அப்படியே உருவாக்கிக்காட்டப்படும்.
மற்ற திருவிழாக்களைவிட ஒரு மிகப்பெரிய திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். அதுதான் "The Festival among Festivals".
"La Grand Carnival".
அந்த விழாவுக்கு வழிவிடும்வகையிலும் வசதி செய்து கொடுக்கும் வகையிலும் மற்ற விழாக்களை இப்படி அப்படி மாற்றி அமைக்கலானார்.
இனித்தொடருங்கள்.......
மதுரையிலேயே குடியிருப்பதாக முடிவுசெய்து மதுரைக்கு வந்தபின்னர், நாயக்கர் தன்னுடைய முன்னோர்கள் தங்கிய அரண்மனையிலேயே தங்கி யிருந்தார். ஆனால் எதையுமே பெரிதாகவும் புதிதாகவுமே செய்ய விழையும் நாயக்கர் தனக்கென்று ஒரு பெரிய அரண்மனையைக் கட்டிக் கொண்டார். அப்படி அவர் கட்டியதுதான் திருமலைநாயக்கர் மஹால். இது ஒரு தனிக்கதை. அதைப்பற்றி ஏற்கனவே தமிழ் இணையத்தில் எழுதிருக்கிறேன். அந்த மஹாலைக் கட்டுவதற்காக தரமான மண்/மணலை வண்டியூர் என்னும் கிராமத்தின் அருகில்தோண்டி எடுத்தார்கள். இது மதுரைக்கு மிக அருகாமையில், வைகை ஆற்றின் கரையில் இருக்கிறது. இஇங்குள்ள மாரியம்மன் கோயில் மிகவும் சிறப்பும் புகழும் மிக்கது. மிகப் பெரிய அரண்மனையல்லவா? இப்போது இருப்பதே பெரிதாகத்தான் இன்னும்தோன்றுகிறது. ஆனால் இது, அந்த ஆதி மஹாலில் ஐந்தில் ஒரு பகுதிதான். மீதி நான்கு பங்கு அழிக்கப் பட்டுவிட்டது. வண்டியூரில் அதற்காக மண்தோண்டிய இஇடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவிட்டது. நாயக்கர் அந்தப் பள்ளத்தை அப்படியே அழகிய தெப்பக்குளமாக மாற்றிக்கட்டினார். அதன் நடுவில் ஓர் அழகிய மையமண்டபமும் கட்டுவித்தார். கிட்டத்தட்ட ஆயிரம் அடிகள் நீளமும் அகலமும் உடையது இந்தத் தெப்பக்குளம்.
மீண்டும் திருவிழாவுக்கு வருவோம்.
தை மாதத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத் திருவிழா கோயிலில் நடந்து வந்துகொண்டிருந்தது.
அந்தத் திருக் கல்யாணத்தை சித்திரைமாத வசந்தவிழாவுக்கு மாற்றிவிட்டார். தை மாத்திற்கு ஒன்றுமில்லாமல் போகக்கூடாதல்லவா?
ஆகவே தன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இஇதில் மீனாட்சி சுந்தரேசுவரரை ஓர் அலங்காரத் தெப்பத்தில் எழுந்தருளுவித்து, மையமண்டபத்தைச் சுற்றிலும் தெப்பத்தை , கரையில் இருக்கும் மக்கள் கூட்டம் இழுத்து வரும். இப்படி ஏற்பட்ட தெப்பத் திருவிழா தற்சமயம் இலட்சக்கணக்கில் ஆள்கூடும் திருவிழாவாகத் தனித்தன்மை பெற்றுத் திகழ்கிறது.
No comments:
Post a Comment