Tuesday, 26 November 2013

JAGGARITHTHAL

"ஜக்கரித்தல்"
டாக்டர் எஸ். ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
JayBee


               "ஜக்கரித்தல்"என்றால் என்ன?

                நான் அறிந்ததைச்சொல்கிறேன்.
            ரொம்ப காலத்துக்கு முன் - சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சொந்த ஊராகிய சிங்கம்புணரியிலும் என் தந்தையார் ஒரு ஜவுளிக்கடை வைத்திருந்தார்.
                என் தந்தையாரிடம் ஒரு தையற்காரர் இருந்தார். பெரிய ஜவுளிக்கடைகளில் - அந்தக் காலத்தில் - தொண்ணூறு  ஆண்டுகளுக்கு முன்னர் - ஜவுளிக் கடையிலேயே தையற் காரர்களை வைத்திருப்பதுண்டு. கடையின் வாசலிலேயே ஒரு பக்கமாகத் தையல் மெஷினை வைத்துக்கொண்டு தைத்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் கிட்டத்தட்ட நூற்றாண்டுக் கதை. தையல் வேலையுடன் என் தந்தையாருக்கு அவர் பாடி கார்டாகவும் இருந்தார். அவர் பெயர் ஹஸான். ஆனால் எல்லாரும் 'சோட்டா பாய்' என்றே அழைப்பர். அவர் ஓர் அலாதி கேரக்டர். அவர் ஒரு பத்தான். உருது கலந்த புஷ்ட்டுதான் பேசுவார். மோசமான புஷ்டு. ஆஃப்கானிஸ்தானிலிருந்து எவனாவது வந்தால் நிச்சயம் அவனுக்குப் புரியாது. அவர் மகன் அப்துல்லா தம்முடைய மகன்களைக் டீக்கடைக்கு ஏவும்போது கூட, "அரே...... சுந்தரம்க்கீ துக்கான்க்கே ஜாக்கோ.... தோ சாயா லேலக்ரே ஆ.....! மஞ்சி ஏக்கு... டாக்டர்க்கி ஏக்கு, ஜல்தி லேலக்ரே ஆ!" என்பார். ("அடேய்... சுந்தரம் கடைக்குப் போய் இரண்டு சாயா வாங்கிக்கொண்டு வா. எனக்கு ஒன்று(முஜே ஏக்) டாக்டருக்கு ஒன்று... வேகமாகக் கொண்டு வா!" அந்த 'டாக்டர்' நான்தான்)
                 சோட்டா பாய்க்குத் தமிழ்  கடைசிவரை சரளமாக வரவேயில்லை.  மிகுந்த கோபக்காரர். ஒரு முழத்தில் கனமான கத்திரிக்கோல் வைத்திருந்தார். ["ஏண்டா @#$%%பய மவனே! எனய இனாடா நெனஸ்கிட்டே. ஒக்@#$$  நா யாரு தெர்யுமா? சீம ஓடு இருக்ல சீம ஓடு; அத்கே ஒரப்(உரை) போட்றவண்டா நானு! ஒம்%$#@ %$#! இந்த கத்ரி கோல் ஒனால தூக முடியுமா மொதல்ல? இனா பேஸ்ஸ¤ பேஸ்ரான்!"

                என்னவோ தெரியவில்லை. தமிழில்  உள்ள கெட்ட வார்த்தைகள் மட்டும் சர்வசரளமாக அவருக்கு வந்தன. இந்த சில வரிகளுக்குள் இன்னும் சிலவற்றை சேர்த்திருப்பார். ஆனால் பெர்ய மன்ஸன், மர்வாதி பட்ட ஆத்மியெலாம் இர்குறதுனால நானே குறைத்துக்கொண்டேன். பொறுத்தருள்க. (பொறுத்தருளச் சொல்லியது, சோட்டா பாயை. காரத்தைக் குறைத்து விட்டேனல்லவா?)

                அந்தக் காலத்தில் காட்டா குஸ்தி என்றொரு வகை இருந்தது. அதில் ஆளைப் பிடித்துத் தள்ளி, மல்லாக்க வீழ்த்தி, எழமுடியாமல் அமுக்கிக் கொள்வது. இதை "முதுகில் மண் காட்டுதல்" என்று சொல்வார்கள். அதுதான் வெற்றிக்கு அடையாளமாம். இப்போது மாதிரி நாக்-அவுட்டெல்லாம் கொடுக்க மாட்டார்களாம். சுமோவில்கூட அடித்து வீழ்த்தக் காணோமே? அந்த வட்டத்தின் எல்லைக்கு அப்பால் தள்ளுவதைத் தானே வெற்றிக்கு அடையாளமாகக் கொள்கிறார்கள்.   

                அவரிடம் காட்டா குஸ்தியைப் பற்றி அவ்வப்போது கேட்பதுண்டு.
                நான் நேரில் பார்த்ததெல்லாம் தாராசிங் - கிங்காங்க் குஸ்திதானே. எங்கே காட்டா குஸ்தியெல்லாம்? நான் பிறப்பதற்கு முன்னரே அதெல்லாம் எக்ஸ்டிங்ட் ஆகியிருக்கும்.
                அவர் போட்ட காட்டாகுஸ்திகளைப் பற்றியெல்லாம் சொல்வார். அந்தக் காட்டா குஸ்திகளைவிட அவற்றிற்கு முன்னர் அவர் விடுக்கும் சவால், முஸ்தீபூ, அந்தக் குஸ்தியை 
அவர் வர்ணிக்கும் விதம் இன்னும் படா ஜோரா இர்கும். "அரே சைத்தான்கீ பச்சா! அமாவாஸ்லே பொறந்த @#$%*&னே! சண்டேலே ஓமண்டே நான் ஒட்ஸி ஒன் ரத்தம் நான் குட்க்கலே நான் பட்டாணிக்கிப் பொற்கலே!".... இப்படியாக இருக்கும் அவரின் சவால்கள். சண்டைகளில் எதிராளியின் மண்டையை யெல்லாம் சொல்லி வைத்து உடைத்திருக்கிறார். ஒரு முக்கிய சண்டையின்போது எடுத்த எடுப்பிலேயே எதிராளி பயில்வான் உள்ளங்கையை ஒரு தினுசாக வைத்துக்கொண்டு  காதில்   ஓங்கி அடித்ததில் காதைக் கையால் பொத்திக்கொண்டு "ஆ.... ஆ.... ஆ...." என்று அலறியவாறு நின்றார் என்பார்கள்.  அதிலிருந்து காது பழுதாகிவிட்டது.  அதன்பின் சண்டை போட்டாரா என்பது தெரியவில்லை. 

                காட்டா குஸ்தியில் உள்ள பாவ்லாக்களில் ஜக்கரித்தல் ஒன்று.  முன்னால் பாய்ந்து பாய்ச்சல் காட்டி,  பக்கவாட்டில் ஒதுங்கி, அப்படியே பின்வாங்கி தப்பித்துக் கொள்வதை ஜக்கரித்தல் என்பார்கள். ஜகா வாங்குதல் என்பதுவும்  பின்வாங்குதலாயிற்றே. It seems to complete the move initiated by ஜக்கரித்தல். 

                இதை வீட்டிலேயே செய்து பார்த்துக்கொள்ளுங்கள். மட்டுப்பட்டுவிடும்.

        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 19 September 2013

KAVAL DEITIES



                                காவல் தெய்வங்கள்      
                   கருப்பண்ணசாமி




    சில ஆண்டுகளுக்கு முன்னர் செரம்பான் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ண சாமியைப் பற்றி கேட்டார்.
    எத்தனை வகையான கருப்பண்ணசாமிகள் இருக்கிறார்கள் என்பது
கேள்விகளில் ஒன்று.
    பெரியகருப்பர், சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், வளைதடிக்கருப்பர்,
சங்கிலிக்கருப்பர், ஆத்தியடிக் கருப்பர், கோட்டைக் கருப்பர், பதினெட்டாம்படி கருப்பர், கழுவக் கருப்பர், கழுவடிக் கருப்பர், மாசாணக்கருப்பர், நொண்டிக் கருப்பர், ராங்கியம் கருப்பர் என்று வரிசையாக மனதிற்கு வந்த கருப்பர் பெயர்களைச் சொன்னேன்.
    கருப்பரைப் பற்றிய நூல்கள், வலைத்தளங்கள் பற்றி கேட்டார்.
    அதிகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
    வலையில் கருப்பண்ணசாமி படமே நான் ஜியோஸிட்டீஸில் போட்டு
வைத்திருந்த படம்தான். ஜியோஸிட்டீஸ¤ம் இப்போது அழித்து விட்டார்களே.
வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு இருந்தாலும் இருக்கும்.
    "கருப்பரின் அடையாளமாக உள்ளது சூலமா?" என்று கேட்டார்.
    "கருப்பருக்கு அரிவாள்தான் நட்டுவைப்பார்கள்; அல்லது நிறுத்தி
வைப்பார்கள். கருப்பர் அரிவாளை வலக்கையில் ஏந்தியிருப்பார். இடக்கையில் சுக்குமாத்தடி என்னும் ஆயுதம் இருக்கும். இடையில் சூரிக்கத்தி என்பது இருக்கும். வளைதடிக் கருப்பர் வளரியை வைத்திருப்பார்", என்று விளக்கினேன்.
    ஆசாமி வெகு    ஸீரியஸாகக் கருப்பண்ணசாமியை முறையாக வழிபடப்போவதுபோல் தெரிந்தது. கேட்டுவிட்டு கேட்டு விட்டு சும்மா போகிறவர்கள்தாம்  மிக அதிகம்.

    அதற்கு அடுத்தநாள்......
    கோலாலும்ப்பூரிலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். "நின்னது நிக்க"
என்பார்கள் அல்லவா? அதுபோல.
    "சிறு தேவதைகள் பற்றி சொல்லுங்கள்", என்றார்.
    'சிறு தேவதைகள்' என்று ஒரு காலத்தில் நானும் குறிப்பிட்டவன்தான்.
ஆனால் மலேசியாவில் பிரபலமாக இருக்கும் ஒரு முனி கோயிலின் முன்னால்-வாசலுக்கு நேரே ஒரு சமயம் காரை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் கட்டாயச் சூழ்நிலையில் நான் கண்ட காட்சிகள் என்னைப் பெரிதும் சிந்திக்க வைத்தன.
    "இவர்களைச் சிறுதெய்வங்கள் என்று குறிப்பிடுவது எவ்வளவு தவறு?"
என்ற முடிவுக்கு வந்த மாத்திரத்தில் காரைக் கிளப்பிக்கொண்டு போக வழியேற்பட்டுவிட்டது.
    "அன்றிலிருந்து 'சிறுதெய்வங்கள்' என்று சொல்வதில்லை" என்று
சொன்னேன்.
    ஆனால் சில தேவதைகள் உண்மையிலேயே க்ஷ¤த்ர தேவதைகள் என்னும் வகுப்பைச் சேர்ந்தவை. பயங்கரத் தன்மை கொண்டவை.
    ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மலேசியாவில்
ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கும் ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
    ஆனால் என்ன?
    சுவாரஸ்யமான விஷயத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லக் கூடிய ஆட்கள்தாம் இல்லை.
    அதுவும் சிறுகதை விமரிசனம், புதுக்கவிதை விமரிசனம் என்று உலர்ந்து போய் வெளிறிப்போய் சோணியாய், சோகை பிடித்தமாதிரி உள்ளவை மிகவும்  அதிகமாகத் திணிக்கப்பட்டு  இங்குள்ளவர்கள் வெகுவாகப் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
    ஆகையால்தான் சுவாரஸ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும் போது அவ்வளவு ஆர்வமுடன் கேட்கிறார்கள்.
    "அப்படியானால் அந்த தெய்வங்களை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? கிராம தெய்வமா?" என்று கேட்டார்.
    "இங்கு ஏது கிராமம்? 'காவல் தெய்வம்' என்று  சொல்ல வேண்டியதுதான்".
    "கிராமத்தில் உள்ளதை கிராம தெய்வம் என்று சொல்லலாம்தான்".
    "ஆனால் மொட்டைக் கோபுர முனியும் ஜடாமுனியும் 'பப்பரபாம்' என்று மதுரைக்கு நடுவேயல்லவா இருக்கின்றார்கள்? வடக்குக் கோபுர வாசலில் மொட்டைக் கோபுரத்தார் என்றால் கிழக்கு வாசலில்  

மதுரை வீர சுவாமி ஜாங்ஜாங்கென்று பொம்மி வெள்ளையம்மாளோடு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். மொகோ.முனி, ஜ.முனி, ம.வீரப்பர்களை எப்படி கிராமத்து ஆசாமிகளாக ஆக்குவது? பக்கா நகரத்தார்கள் அல்லவா இவர்கள்?"
    "சரிதான்" என்று ஒத்துக்கொண்டார்.
    "இவர்களைப் பார்க்கமுடியுமா?" - இது அடுத்த கேள்வி.
    "தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கமுடியும்."
    அந்த அனுபவங்களைக் கேட்டார். விலாவாரியாகச் சொன்னேன்.
    பேய்களைப் பற்றியும் அதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார்.
    அவர் வருவதற்கு முன்னால் டெலி·போனில் ஒருவர் அஷ்டகர்மா பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
    சொன்ன விபரங்களைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்டரி செய்யலாம் என்று தீர்மானித்தார்.
    அஷ்டகர்மா என்றால் என்ன கேட்குமுன் சொல்லிவிடுகிறேன்.....
    ஸ்தம்பனம், மோஹனம், ஆகர்ஷணம், மாரணம், பேதனம், வித்வேஷணம், உச்சாடனம், வசியம் ஆகியவை.
    மாந்திரீகம்.
    மேல்விபரங்களுக்கு அகத்தியர் ஆவணத்திற்குள் பார்க்கவும். ஏராளமாக எழுதிவைத்திருக்கிறேன்.


     $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 27 August 2013

CHICKEN SOUP



 ஆன்மாவுக்குக் கோழி சூப்



Chicken Soup for the Soul என்னும் தலைப்பில் வெளியாகும் புத்தகங்கள்
தமிழர்களுக்கு எந்த அளவுக்குப் பரிச்சயம் என்பது கேள்விக்குறியே.
சமீபத்தில் மலேசியாவில் தன் முனைப்புத் தூண்டுதல், முக்கியமான சமய இயக்கம் ஒன்று ஆகியவற்றில் முக்கியமான ஆளாகக் கருதப்படுபவர் ஒருவரைச் சந்தித்தபோது, இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர், "Ai don read all that. நான் முழுச்சைவம். Strict vegetarian" என்று அழுத்தமாகச் சொன்னார்.
மலேசியாவில் தமிழியமும் சமயமும் பல்லாண்டுகள் பின்தங்கிச் செல்வதன் காரணஸ்தர்களில் இந்த ஆளும் ஒருவர். அவரிடம் போய்ச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.

Chicken Soup for the Soul என்பது ஒரு புத்தகத்தின் பெயர்.
ஏன் அவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள்?

உடல் தளர்ச்சியாகவும் பலவீனமாகவும் ஜீரணம் சரியாக இல்லாமலும் இருப்பவர்களுக்குக் கோழி சூப் கொடுப்பது வழக்கம். செட்டிநாட்டுப் பக்கத்தில் இது சர்வசாதாரணம்.
மற்றவர்களிடையேயும் இந்த வழக்கம் உண்டு. சீனர்கள் கோழி சூப்பிலேயே பலவிதமான ரிஸிப்பிக்கள் வைத்திருக்கிறார்கள்.
கோழிக் காலுடன் சில மூலிகைகள், மருந்துச்சரக்குகள் முதலியவற்றைப் போட்டு செய்யும் சூப் ஒன்று இருக்கிறது. மண் சட்டியில்தான் அதை வைத்துக் கொடுப்பார்கள். 


"சூட்டோடு சூடாக சூப்பு தன்னைச்
சாப்பாட்டு முன்னாலே சாப்பிடவேண்டும்"

என்று எந்த சித்த வைத்தியப் பாடலும் சொல்லவில்லை. நான்தான் சும்மா ஒரு பெப்புக்காகச் சொல்லிவைத்தேன். யாப்பு கீப்பு கிராமரெல்லாம் இல்லாமல் இப்படியெல்லாம் சித்தர் பாட்டு இருக்காது. போதாததற்கு இந்த 'பாரப்பா, கேளப்பா, கூறப்பா'வெல்லாம் போட்டு அமர்க்களமாக ஜிகிர்தண்டாவாக விளங்கும்.
Brand's Essence of Chicken என்பது பாட்டன் பூட்டன் காலத்துச் சரக்கு. அதே பச்சைப் பெட்டியில் கறுப்பு பாட்டிலில் கறுப்பு திரவம். இது ஒரு அருமையான டானிக்.
"முருகேஸ¤.... ப·ப்... ப·ப்..... உஸ்ஸ்ஸ்... அப்பா!" என்று ஓடமுடியாமல் மூச்சு வாங்குகிறவர்கள் இதை வாங்கி சாப்பிடலாம்.
உடல் தளர்ச்சிக்கும் உடல் தெம்புக்கும் ஏற்றது கோழி சூப் என்பதால் தெம்பையும் உற்சாகத்தையும் மோட்டிவேஷனையும் திருப்தியையும் சாந்தியையும் அமைதியையும் ஏற்படுத்தும் உருவகமாகக் கோழி சூப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
Chicken Soup for the Soul என்று ஆன்மாவுக்குத் தெம்பு கொடுக்கும் டானிக்காக விளங்கும் கதைகளையும் சம்பவங்களையும் கவிதைகளையும் ஜோக்குகளையும் சேகரித்துப் புத்தகமாக ஆக்கியிருக்கிறார்கள்.
'Soul, ஆன்மா' என்பதை சங்கராச்சாரியார், மெய்கண்டார் சொன்னாப்புல
எடுத்துக்கிடக்கூடாது. அது வேற.

இவற்றின் முக்கியமான லட்சணம், அந்த சம்பவங்கள் கதைகள் எல்லாமே மனதைத் தொடக்கூடியதாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அமைந்திருக்கும்.
இந்த மாதிரியானதொரு concept-ஐ மனதில்கொண்டு Jack Canfield, Victor Hansen ஆகிய இருவரும் மனதுக்குத் தெம்பையும் உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்தும் சம்பவங்கள் கதைகளையெல்லாம் தொகுத்தார்கள்.
அத்தகைய நூற்றியோரு விஷயங்களை ஒரு புத்தகமாக்கினார்கள்.
இதை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வெளியீட்டாளராகப் போய்ப் பார்த்தார்கள்.
ஒருவரையா....இருவரையா?
நூற்றுநான்கு பேர்களைப் பார்த்தார்கள்.
அத்தனை பேரும் நிராகரித்தனர்.
இந்த மாதிரியான விஷயங்களைப் படிப்பதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள்
என்று அந்த வெளியீட்டாளர்கள் பரிபூரணமாக நம்பினார்கள்.

கடைசியில் நூற்று ஐந்தாவதான முயற்சியில் அறிமுகமேயில்லாத ஒரு சிறிய கம்பெனியின் மூலம் வெளியிட்டார்கள். முதன்முதலில் 1993-ஆம் ஆண்டில் புத்தகம் வெளிவந்தது. அது ஒரு Run Away Success.
இதை அப்படியே தமிழாக்கம் செய்தால் எதிர்மறையான அர்த்தம் ஏற்படும்.
'ஓடிப்போன வெற்றி' என்றா சொல்வது? சொல்லப்படாது.
ஆரம்பத்தில் இதற்கு ஒன்றும் விளம்பரமேயில்லை. சும்மா ஒர்த்தொர்த்தர் அவரவருக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்ல, அவரவர் மற்றவருக்குச் சொல்ல, மற்றவர் இன்னொருவருக்குச் சொல்ல, இன்னொருவர் வேறொருவருக்குச் சொல்ல, 'அண்ணாதுரை ஸிஸ்ட'த்தில் அந்தப் புத்தகத்தின் புகழ் பரவியது. மிக வேகமாகப் புத்தகம் விற்றுத் தீர்ந்தது.
இதன் பரபரப்பான விற்பனையால் பெரிய பெரிய கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

நூலாசிரியர்கள் அடுத்தடுத்து வெகுவேகமாகக் கதைகளையும் கவிதைகளையும் சம்பவங்களையும் சேகரித்து இதே தலைப்பில் புத்தகங்களாக வெளியிட்டனர். இப்படி ஆறு புத்தகங்கள். அதன்பின்னர் ஒவ்வொரு குறிப்பிட்ட குழுமங்களுக்காக என்று புத்தகங்கள் போட்டனர். டீன் ஏஜ் பசங்களுக்கு, பெண்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, வயசாளிகளுக்கு, வேலை செய்பவர்களுக்கு என்று புதுப்புது புத்தகங்கள்.
பழைய புத்தகங்கள் மறு பதிப்புக்களும் கண்டன.
ஆடீயோ கெஸெட்டுக்கள்வேறு.
இந்தப் புத்தகங்களின் சுருக்கமாக Chicken Soup for the Soul in a Cup என்ற பெயரில் சிறு நூல்கள் கையடக்கமாக வெளிவந்தன. எங்காவது போகும்போது பாக்கெட்டில் செருகிக்கொண்டோ ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டோ செல்லக்கூடியவையாக இருந்தன. பல்வைத்தியத்துக்காகக் காத்திருப்பதிலிருந்து பஸ் ஸ்டாண்டு, கக்கூஸ் என்று ஆங்காங்கு படிக்கக்கூடியவகையில் அந்தப் பிரதிகள் இருந்தன.
அப்படியே நூறு புத்தகங்கள் வெளியாகிவிட்டன. 2005-அம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நூற்று ஓராவது தலைப்பு வெளியாகிறது.
நூற்று ஒரு கட்டுரைகள் கதைகளை வைத்து ஒவ்வொரு புத்தகமும்
விளங்கியதால்தான் நூற்றியோராவது புத்தகத்தின் வெளியீட்டை விழாவாகக் கொண்டாடினார்கள்.

பன்னிரண்டு ஆண்டு காலத்திற்குள் அறுபத்தைந்து மொழிகளில் நூறு சிக்கன் சூப் தலைப்புப் புத்தகங்களின் தொண்ணூறு மில்லியன் பிரதிகள் வெளியாகி உலகெங்கும் விற்பனையாகிவிட்டன.
இவற்றுடன் தொடர்பான தலைப்புகளிலும் துறைகளிலும் வேறு சில புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
The Alladdin Factor என்பது Chicken Soup for the Soul - Living Your Dreams என்னும் புத்தகத்தின் தொடர்பாக விரிவுகளும் விளக்கங்களும் கொண்டது.
உபயோகமான புத்தகங்கள்.




       $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 25 August 2013

A FABULOUS PANCHANGAM


செயற்கரியன செய்த சான்றோர்-#1

திவான் பகதூர் சுவாமிக்கண்ணு பிள்ளை 



    சாமிக்கண்ணு பிள்ளையவர்களின் எ·பெமெரிஸைப் பற்றி எழுதவேண்டியுள்ளது.
அதற்கு ஆராய்ச்சி மிகவும் தேவை.
பேராசிரிய சுவாமிக்கண்ணு பிள்ளை 1865-இல் பிறந்தவர். ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவர். ஆனால் தம்முடைய சுய முயற்சியால் பிற்காலத் தமிழர்கள் யாருமே செய்திராத கடும் ஆராய்ச்சிகளைச் செய்து மேம்பட்டவர்.
சட்டத்தில் மேற்படிப்பு படித்தவர். சென்னை சட்டசபைக் கவுன்ஸிலின் தலைவராக இருந்தவர். சட்டசபை நூலகத்தை அவரே உருவாக்கினார். திவான் பகதூர் என்னும் உயர் விருதையும் அரசு விருது ஒன்றையும் பெற்றவர்.

    வசதிகளற்ற அந்தக் காலத்தில் எவ்வளவோ உழைத்து சில வெள்ளைக்காரர்கள் சிரமப் பட்டு பல விஷயங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

    Jouveau Dubreil, Robert Sewell போன்ற அறிஞர்கள், பல்லவர்கள், விஜயநகரம் பற்றிய கண்டுபிடிப்புகளை முதன்முதலில் செய்தவர்கள்.
    ராபர்ட் ஸெவெல் எழுதிய 'The Forgotten Kingdom' என்னும் புத்தகம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த நூல் விஜயநகர சாம்ராஜ்யத்தைப் பற்றிய அருமையான நூல்.
அந்த அளவுக்கு இன்னொரு நூலை விஜயநகரத்தைப் பற்றி இன்னும் யாரும் எழுதவில்லை.
Social Life Under Vijayanagar Empire என்னும் நூல் ஒன்று இருக்கிறது. ஆனால் அதில் சில துறைகள் மட்டுமே விரிவாக இருக்கும். பல கன்னட மொழிக் குறிப்புகளும் காணப்படும்.
    Quaritz Wales என்னும் ஆய்வாளர் கடாரத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

    திவான்பகதூர் சாமிக்கண்ணு பிள்ளை ஜோதிடம், வானநூல் அறிந்தவர். அவர் Indian Chronology என்னும் என்னும் சிறப்புப் பஞ்சாங்கத்தைத் தயாரித்து, கல்வெட்டுக்களில் காணப்படும் பஞ்சாங்கக் குறிப்புகளைப் பார்த்து அவற்றின் வருட மாதந் தேதியைக் கணித்துச் சொல்லி யிருக்கிறார். பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து 'Indian Ephemeris - AD 700 to AD 2000' என்னும் ஏழு தொகுதிகள் கொண்ட நூலை வெளியிட்டார். 
கிபி 700-ஆம் ஆண்டிலிருந்து கிபி 2000-ஆம் ஆண்டுவரைக்கும் ஒவ்வொரு நாளுக்கும் உரிய நாள், நட்சத்திரம், திதி, கிழ்மை போன்றவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார். அந்த எஃபெமெரிஸின் உதவியோடு, கல்வெட்டுக்களில் காணப்படும் நாள், மாதம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு அந்தக் குறிப்பு எந்த ஆணடைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம். இந்திய நாட்டு அரசர்களின், நிகழ்ச்சிகளின் தேதியை இதைவைத்துத்தான் நிறுவியிருக்கிறார்கள்.
    1922-இல் இந்த அரிய நூல் வெளியாகியது.

    இந்த நூலை வெளியிடுவதிலும் மேற்கொண்டு ஆய்வுகள் தொடர்வதற்கும் ராபர்ட் ஸெவெல் ரொம்பவும் உதவி செய்து உழைத்திருக்கிறார்.
    Dr.Van Wijk என்னும் டச்சுக்காரர் கணித சாத்திர நிபுணர் Indian Calender என்னும் பொதுவான தலைப்பில் அரிய ஆராய்ச்சி செய்து நூலும் வெளியிட்டிருக்கிறார். அவருக்கும் ராபர்ட் ஸெவெல் மிகவும் உதவியிருக்கிறார். இந்த நூல், இந்திய பஞ்சாங்கக் கணிதத்தைப்
பற்றிய ஆய்வு.
    இந்தியப் பஞ்சாங்க/கால ஆராய்ச்சியில் இன்னும் இருவர் அவர்களுக்கு முன்னரேயே ஈடுபட்டவர்கள்.
    Professor Kielhorn, Professor Jacobi ஆகியோர் செய்த ஆராய்ச்சிகளை விஞ்சுவதற்கு வேறு நூல்கள் இல்லை என்று கருதப்படுகிறது.
    சாமிக்கண்ணு பிள்ளை 'Panchang And Horoscope or The Indian Calender and Indian Astrology' என்னும் இன்னொரு அரிய நூலையும் வெளியிட்டிருக்கிறார்.
    இந்த நூலின் Contents, Index ஆகிய பகுதிகளைப் பார்த்தாலேயேகூட போதும்.

    அத்தனைப் புதிய விஷயங்கள் இருப்பதை அறிந்துகொள்ளலாம்.      
    எடுத்துக்காட்டுக்காக  மூன்று பக்கங்களின் பகுதிகளை ஸ்கேன் செய்து மேலே போட்டிருக்கிறேன்.
 தற்காலத்தில் இந்தியர்களிடையே வசதிகள் இருந்தும் இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் செய்வதில்லை.

                                       $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

Wednesday, 7 August 2013

THE TOWER THAT MARUDHU BUILT-#1


பகுதி 1




மதுரைக் கோபுரங்கள்



    "சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப்பொட்டு குமுகுமுங்க
மருதக் கோபுரம் தெரியக் கட்டின மருது வாரதப் பாருங்கடீ..."

காளையார் கோயிலைப் பற்றி இப்போதெல்லாம் அதிகம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. ஏதாவது கொலை கிலை சம்பந்தப்பட் விஷயமாக இருந்தால் பத்திரிக்கையில் வந்து கவனத்தைக் கவரக்கூடும். இல்லையென்றால் அங்கு ஏதாவது மாபெரும் கட்சிப் பேரணி மாநாடு நடக்கவேண்டும்.
அந்த ஊர் மிகவும் புராதனமான ஊர்.
அங்கு காளீஸ்வரர் கோயில் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனாரால்
பாடப்பட்ட தலம். திருக்கானப்பேர் என்னும் பெயரில் பாண்டிநாட்டின்
பதினான்கு தேவாரத்தலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. சங்க
காலத்தில் 'கானப்பேரெயில்' என்ற பெயரில் அது இருந்தது. மிகவும் உயர்ந்த சுவர்களையுடைய கோட்டை இருந்திருக்கிறது. வேங்கைமார்பன் என்னும் தலைவன் அந்தக் கோட்டையில் இருந்தான்.
பிற்காலத்திலும் அது பலம் வாய்ந்த கோட்டையாகவே இருந்திருக்கிறது.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலிருந்து படையெடுத்த லாங்காபுரத் தண்டநாயகனின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட இடம்.
சிவகங்கை தனிநாடாக ஆனபோது அதுதான் முக்கிய கோட்டைகளில்
ஒன்றாக இருந்தது. சிவகங்கை மன்னர்களுடைய போர்களில் கடைசியாக நின்று பிடிக்கும் இடமாக விளங்கியது.

காட்டரண், மதிலரண், நீரரண் ஆகியவை பெற்ற கோட்டை.

1873-இல் சிவகங்கையை ஆண்ட மருது சேர்வைக்காரர்களுக்கு
காளையார் கோயிலில் மிகப்பெரிய ராஜகோபுரம் ஒன்றை எழுப்பவேண்டும் என்று ஆவல்.
அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்துகொண்டு பார்த்தால் மதுரை
மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரங்கள் தெரியவேண்டும்.
அதே சமயம் அந்தக் கோயிலுக்கு மிகச்சிறந்த தேர் ஒன்றையும்
செய்துவைக்கவேண்டும் எண்ணினார்கள்.

அதே சமயம் அந்தக் கோயிலுக்கு மிகச்சிறந்த தேர் ஒன்றையும்
செய்துவைக்கவேண்டும் எண்ணினார்கள்.
ஆகவே அதற்கான வேலைகளைத் துவக்கினார்கள்.
மிகப் பெரிய தேராகச் செய்யவேண்டியிருந்தது. அதன் அச்சுக்கான
மரங்கள் குறிப்பிட்ட ஜாதி மரமாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட வயதான முற்றிய மரமாகவும் இருக்கவேண்டும். வைரம் பாய்ந்ததாக இருக்கவேண்டும்.
ஆனால் முடிச்சு விழுந்ததாக இருக்கக்கூடாது. பெரிய மரமாகவும் இருக்க
வேண்டும்.
பல இடங்களில் ஆட்கள் தேடினார்கள்.
மரங்கள் கிடைக்கவேயில்லை.
திருப்பூவணத்தில் ஒரு கிழவனார் வீட்டின் பின்புறத்தில் இரண்டு
மருதமரங்கள் இருந்தன. இருநூறு வயதுக்கும் மேற்பட்டவை. வைரம் பாய்ந்து பிரம்மாண்டமாக இருந்தன.
அந்த இரண்டு மரங்களையும் வெட்டிக்கொண்டு செல்ல மருது
சேர்வைக்காரர்களின் ஆட்கள் வந்தார்கள்.
ஆனால் அந்தக் கிழவனாரும் அவருடைய பேத்தியும் மரத்தைக்
கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
அமைச்சர்கள் தளவாய்கள் நாட்டார்கள் முதலிய அனைவரும்
கேட்டும் மரத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
கடைசியில் மருது சேர்வைக்காரர்கள் இருவரும் வந்தனர்.
பெரும் பணமும் காணியும் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனாலும்
பாட்டனும் பேத்தியும் மறுத்துவிட்டனர்.
அவர்களிடமும் பிடிவாதத்தைப் பாட்டனும் பேத்தியும் காட்டினார்கள்.
சின்ன மருது தம்முடைய ஆட்களைவிட்டு அவர்கள் இருவரையும் மீறி, மரத்தை வெட்டுமாறு உத்தரவிட்டார்.
கோடாலிகள் மரங்களின்மீது விழப்போகும்போது பாட்டனும் பேத்தியும்
மரங்களின்மீது தங்கள் கழுத்துக்களை வைத்துக்கொண்டனர்.
மருது சேர்வைகள் விதிர்விதிர்த்துப் போயினர்.
அப்போது கிழவனார் சொன்னார்:
"இந்த நாடு எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அமைதியோ
வளமோ இல்லாமல் இருந்தது. அடிக்கடி போர்கள். கண்ட கண்டவர்களெல்லாம் வரி வசூல் செய்து போயினர். இருப்பதையெல்லாம் சுரண்டினர். போதாததற்குக் கொள்ளைக் காரர்கள். எந்த வித தைரியமும் இல்லாமல் பயந்து பயந்து, கஷ்டப்பட்டு உழைத்தும் பலனேயில்லாமல் வாழ்ந்துவந்தோம். என்னுடைய
பாட்டன் காலத்திலும் அப்படித்தான் இருந்ததாக அவர் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
ஆனால் நீங்கள் இந்த சின்ன மறவர் சீமையை ஆளவந்த பின்னர்
எப்போதுமே இல்லாத செல்வமும் வளமும் எங்கும் நிலவுகிறது. பயமில்லாமல் இருக்கிறோம். நீதி கிடைக்கிறது. வரிக்கொடுமை இல்லை. நீங்களே உங்கள் சொந்தப் பணத்தை வைத்து கிஸ்தி கட்டுகிறீர்கள். நாங்கள் கவலைகள் இல்லாமல் வாழ்கிறோம். உங்களை நாங்கள் தெய்வங்களாக மதிக்கிறோம். இந்த இரண்டு மருத மரங்களையும் நாங்கள் வெறும் மரங்களாகப் பார்க்கவில்லை. இந்த இரண்டு மருத மரங்களையும் உங்கள் இருவராகவும் பாவித்து வழிபட்டு வருகிறோம். இந்த மரங்களை நாங்கள் எங்கள் உ யிரைக் கொடுத்தும் காப்போம். இவற்றை வெட்டினால் உங்களை வெட்டுவதற்குச் சமம். அவ்வாறு செய்யாதீர்கள். அப்படிச் செய்வதானால் எங்களை வெட்டிவிட்டு அதன்பிறகு மரங்களை வெட்டுங்கள்."

மருதுசேர்வைகளுக்கு மனம் நெகிழ்ந்துபோயிற்று.
பாட்டனையும் பேத்தியையும் தங்களிடமே தங்கியிருக்குமாறு
அழைத்துக்கொண்டு அந்த இரண்டு மரங்களுக்கும் காவல் போட்டுவிட்டுத் திரும்பினர்.
பின்னர் பிரான்மலை/காளாப்பூர் காடுகளில் தேருக்கு உரிய மரங்கள்
கிடைத்துவிட்டன.
தேரின் வேலைகள் தொடங்கின.
தேர் ஸ்தபதி குப்பமுத்தாசாரியின் திறமையான தலைமையிலும்
கைவண்ணத்திலும் தேர் உருவாகியது.

கோபுரம் என்றதும் கோயிலின் கர்ப்பகிருகத்துக்கும் மேலே
இருக்கக்கூடியதையும் சேர்த்தே குறிப்பிடுவதாக் கொள்வார்கள்.
அது அப்படியல்ல.
கர்ப்பகிருகத்துக்கு மேலேயுள்ளது ஸ்ரீவிமானம் எனப்படும்.
கர்ப்பக்கிருகம், கர்ப்பகிருகத்து முன்னால் உள்ள அந்தராளம்,
அதற்கும் முன்னால் உள்ள அர்தமண்டபம் ஆகியவை ஒரு யூனிட்
அமைப்பு எனக்கொள்ளலாம். இவற்றிற்கு வெளியில்தான் பலிபீடம்,
கொடிமரம், வாகனம் முதலியவை இருக்கும்.
இவற்றைச் சுற்றிலும் ஒரு நடை இருக்கும். நடையைச் சுற்றி
ஒரு மதில் இருக்கும். நடையைப் பிரகாரம் என்று சொல்வார்கள்.
இதற்கும் வெளியில் ஒரு நடையை அமைத்து அதற்கும் வெளியில் சுவர்
வைக்கலாம். அது இரண்டாம் பிரகாரம்.
கோயில் அமைப்பு முதலியவற்றைத் தமிழில் எளிமைப்படுத்தி
எழுதிப்போடவேண்டும். அதற்குரிய டையகிராம்களைத் தயார் செய்து
கொள்ளவேண்டும். அதுதான் பெரிய காரியம்.
இப்போது நான் சொல்வது மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட விஷயம்.
உண்மையிலேயே அவ்வளவு எளிமையான விஷயமில்லை.
ஒவ்வொரு பகுதியும் எந்த நீள அகல கனம் கொண்டிருக்கவேண்டும்
என்பதையும் சாத்திர விதிகள் நிர்ணயித்துவைத்திருக்கின்றன.
கர்ப்பகிருகத்திற்கு நேராக வாயில் இருக்கும்.
இந்த வாயிலுக்கு மேலே ஒரு கோபுரம் இருக்கும். இதுதான்
கோபுரம். கர்ப்பகிருக சமாச்சாரம் விமானம்.
சுற்றுச்சுவரில் நான்கு வாயில்கள் இருந்தால் நான்கு கோபுரங்கள்
இருக்கும். முக்கிய வாயிலுக்கு மேலே இருக்கக்கூடியது மெயின்
கோபுரமாக இருக்கும். மற்றவற்றைவிட உயரமானதாகவும் பெரிதாகவும்
இருக்கும்.
முக்கிய கோபுரத்தை 'ராஜகோபுரம்' என்பார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பதினான்கு கோபுரங்கள்
உண்டு. அவற்றில் முக்கியமானவை கிழக்கில் உள்ள பராக்கிரம பாண்டியன் வாயில், தெற்கு கோபுரம், வடக்கில் உள்ள மொட்டைக் கோபுரம், மேலக்கோபுரம் ஆகியவை. ஒரு கோபுரம் போல் இன்னொன்று இல்லை.
இருப்பனவற்றில் ஒயில் மிக்கது தெற்குக் கோபுரம்தான். உள்வளைவு
கொடுத்துக்காட்டியிருப்பார்கள். இந்த மாதிரி கட்டுவது சற்றுக் கடினம்.
அதுதான் உயரமானதும்கூட. நூற்று அறுபத்தைந்து அடி உயரம்.
ஐந்து நிலை, ஏழு நிலை, ஒன்பது நிலை என்ற கணக்கில் கோபுரங்கள்
விளங்கும். எல்லாம் அடுக்குகள்தாம்.
கோபுரத்துக்கு அடித்தளம் இருக்கும். அதற்குமேல் கல்லால் ஆன
அடிப்பாகம் இருக்கும். அதற்குமேல் செங்கல்களாலும் காரையாலும் கோபுரம் கட்டப்பட்டிருக்கும். கோபுரத்தில் உள்புறம் கொஞ்சம் கூடாக
விட்டிருப்பார்கள்.
தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் ஸ்ரீவிமானம் இருநூற்றுப் பதினாறு அடி
உயரம். அதன் மெயின் வாயிலுக்கு மேலே ஒரு கோபுரம் இருக்கிறது.
இது அவ்வளவு உயரமானதல்ல. இதற்கும் ஒரு பெயர் கொடுத்திருந்தார்.
கேரளாந்தகன் திருவாயில். மதுரையின் கோயிலின் வெளி மதிலுக்குக் கூட பெயர் இருந்தது - கபாலி கடிமதில். இன்னொரு சமயம் இவற்றைப் பற்றி விலாவாரியாக எழுதப் பார்க்கிறேன்.


காளையார்கோயில் ராஜகோபுர வேலையும் தொடங்கியது.
காளையப்ப ஆசாரி என்னும் ஸ்தபதியின் தலைமையில் பெரிய
அளவில் அது நடந்தது.
நல்ல கற்களைப் பல இடங்களிலிருந்தும் கொண்டுவந்தனர்.
அந்த வட்டாரத்தில் ஏற்கனவே பல பெரிய கோயில்கள் இருந்தன.
அவை தொடர்ச்சியான துருக்கர் படையெடுப்பால் அழிக்கப் பட்டு விட்டன.
அவற்றில் சிலவற்றைமட்டும் விஜயநகரத்தினர்/நாயக்க மன்னர்கள் கட்டினர்.
பலவற்றை மீண்டும் கட்டவில்லை.
இந்த வட்டாரத்தில் பார்த்தால் பல அணைக்கட்டுகள், கலிங்குகள்,
கண்மாய்க்கரைகள், கால்வாய்க்கரைகள், கோயில்கள், பொது மன்றங்கள், மேடைகள், மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு இந்த இடிபாட்டுக் கற்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியும்.
புனருத்தாரணம் செய்யப்பட்ட கோயில்களிலும் சிதைவுகளிலிருந்து
எடுக்கப்பட்ட கற்களைக் காணலாம்.
மருதுபாண்டியர்களின் கட்டட/கோயில் நிர்மாணங்களில் காளையார்
கோயில் மட்டுமில்லை. அந்த வட்டாரத்திலிருந்த பல கோயில்களை அவர்கள் செப்பம் செய்து அவற்றில் சிறியதும் பெரியதுமாய்த் திருப்பணிகள் செய்தனர்.
குன்றக்குடி கோயில், திருப்புத்தூர் வைரவர் கோயில் போன்றவை
பெரிய திட்டங்கள்.
ஏற்கனவே இடிபட்டுக் கிடந்த கோயில்களின் கற்களையும் பெரும்
பெரும் தூண்களையும் பயன்படுத்திக்கொண்டனர். திருப்புத்தூருக்கு
(சிவகங்கை மாவட்டம்) அருகில் இருக்கும் சூரைக்குடி, முறையூர் போன்ற இடங்களில் இருந்த பெரும்பெரும் கோயில்கள் மாலிக் கா·பூர்
முதலியவர்களால் அழிக்கப்பட்டவை. அவற்றின் இடிபாடுகளிலிருந்து பெரும் தூண்களை எடுத்துச் சென்றனராம். அவற்றை ஏற்றிக்கொண்டு ஆங்காங்கு செல்ல விசேஷமான வண்டிகள் செய்துவைத்திருந்தனர். அந்த வண்டிகளில் பத்து எருதுகள் பூட்டியிருந்தன. அவற்றின் சக்கரங்கள் தேர்ச்சக்கரங்களைப் போல கனமாகவும் பெரிதாகவும் உறுதியாகவும் இஇருந்தன.

காளையார்கோயிலிலிருந்து 20 கீலோமீட்டர் தொலைவில் உள்ள
திருமலை என்னும் சிறு குன்றிலிருந்து அதற்குக் கற்கள்  கொண்டு வரப்பட்டன என்று சொல்வார்கள்.
ராஜகோபுரத்தைக் கட்டியதுபற்றி சில கதைகள் இஇருக்கின்றன.
அவற்றில் ஒன்று, இஇக்கோயிலுக்குக் கற்களும் செங்கல்லும் கொண்டு
வந்து சேர்த்த விதத்தைப் பற்றியது.

மானாமதுரையில் செங்கற்கள் தயாராகின.
செங்கல் செய்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த மண் மானாமதுரையில்
இருப்பதாகச் சொல்வார்கள். இஇப்போதும்கூட மானாமதுரை மட்பாண்டங்களுக்கும் செங்கற்களுக்கும் பேர் போன இஇடம். செங்கற்கள் மானாமதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று சொல்வார்கள்.
செங்கற்களை எப்படி காளையார் கோயிலுக்குக் கொண்டு சென்றார்கள்?
செங்கற்களைக் கொண்டுசென்றதைப் பற்றியும் ஒரு விந்தையான
செய்தியைக் கூறுவார்கள்.
மானாமதுரையிலிருந்து காளையார்கோயில்வரைக்கும் மக்கள்
வரிசையாக நின்று செங்கல்களை ஒருவர் கை மாற்றி ஒருவர் வாங்கி
வாங்கிக் கொடுத்து அப்படியே கொண்டு சென்றார்களாம்.
இஇது முடியுமா அல்லது figment of imagination என்று சொல்வார்களே, அந்த மாதிரி எதுவுமா?
பார்ப்போமே?
காளையார் கோயிலிலிருந்து மானாமதுரை இஇருக்கும் தூரம்,
செவ்வையாக நேர்ப்பிடியாகப் பிடித்தால்(as the crow flies) 20 கீலோ
மீட்டருக்குள் இஇருக்கும். ஒரு கீலோமீட்டருக்கு ஆயிரம் பேர் நின்று
செங்கல்களைக் கைமாற்றினார்கள் என்று வைத்துக்கொண்டால்,
இஇருபதாயிரம் பேர்கள் அதில் பங்கெடுத்ததாக ஆகும்.
இஇது சாத்தியமானதொரு எண்ணிக்கைதான்.
பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானெர்மேன் கைப்பற்றிய பின்னர்
அதனை இஇடித்துப்போட்டான். கட்டபொம்முவையும் தூக்கிலிட்டான்.
அதன்பின்னர் அவருடைய தம்பி ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பிவிட்டார்.
தம்முடைய குடிமக்களைத் திரட்டி, இஇரண்டே வாரங்களில் பாஞ்சாலங்
குறிச்சிக் கோட்டையை மீண்டும் கட்டி முடித்தாராம். களிமண்,
கருப்பஞ்சாறு, இஇலவம்பஞ்சு, கடுக்காய்ச்சாறு போன்றவற்றைக் கலந்து
அதனைக் கட்டியதாகச் சொல்வார்கள். பழைய கோட்டையைவிட இஇது
இஇன்னும் உறுதியாக இஇருந்ததாம். அந்தக் கோட்டையைக் கட்டுவதில்
இஇருபதாயிரம் பேர் ஈடுபட்டதாகச் சொல்வார்கள்.

ஒரு தடவை கைமாற்றும்போது ஒரு கூடைச் செங்கல் என்று
வைத்துக்கொள்வோம். ஒரு கூடையில் நான்கு செங்கற்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நிமிடத்துக்கு சராசரி வேகத்தில் கை பிடித்தாலும் பதினைந்து கூடைகளைக் கடத்தலாம். ஆனால் தொடர்ந்து அப்படியெல்லாம் கஷ்டத்தை நாம் கொடுக்கவேண்டாம். ஒரு நிமிடத்துக்குப் பத்துக் கூடை என்று வைத்துக்கொள்வோம். அதற்குமேல் மெதுவாகச் செய்ய விட்டிருக்க மாட்டார்கள்.
அந்தக் காலத்தில் working hours எத்தனை மணி நேரமாக
இஇருந்திருக்கக்கூடும்? வெய்யிலில் வேலை செய்வது கிடையாது. ஆகவே அதற்கும் கொஞ்சம் கழிவு கொடுக்கலாம். சாப்பிடுவது வெற்றிலை போடுவது போன்றவற்றிற்கும் சிறிது தள்ளுபடி கொடுக்கலாம்.
தோராயமாக ஒரு எட்டு மணி நேரம் வேலை செய்திருப்பார்கள்.
ஒரு நிமிடத்துக்கு 40 செங்கற்கள். ஒரு மணி நேரத்தில் 60 X 40 = 2400
செங்கற்கள். ஒரு நாளைக்கு 8 X 2400 = 19200 செங்கற்கள்.
வண்டி வண்டியாக ஏற்றிக்கொண்டு செல்வதைவிட இது இன்னும்
வேகமாகவும் சிக்கனமாகவும் இருந்திருக்குமா? ஏன் வண்டிகளில்
ஏற்றிச்செல்லவில்லை?
இந்த இடத்தில் ஏதேனும் Psychological reason இருந்திருக்கக்கூடுமா?
Mass Popular Participation. Citizens Involvement.
Human Chain என்று தற்காலத்திலும் லட்சக்கணக்கான ஆட்களைச்
சேர்த்து ஒரு கொள்கையை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ,
ஒரு Show of Force செய்வது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.
பழங்கால ஆட்கள் நாமெல்லாம் நினைப்பதுபோல் குறைச்சலான
ஆட்கள் இல்லை. இப்போது நாம் கையாளும் பல விஞ்ஞானபூர்வமான
மனோதத்துவமுறைகளை அவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்துச் செங்கற்கள் சிறிதும் பெரிதுமாக மூன்று நான்கு
அளவுகளில் இருந்தன. அவற்றில் சற்றுப் பெரியது, தோராயமாக 30 செண்டிமீட்டர் X 20 செண்டிமீட்டர் இருக்கும். கனம் 6 செண்டிமீட்டர் இஇருக்கும்.
அப்படியானால் ஒரு நாளில் கடத்தப்பட்ட செங்கற்களின் எடை எவ்வளவு?

இஇதுவும் ஒருவகையான Logisticsதான்.

இந்த மாதிரி செய்ததாகக் கூறுகிறார்களே. அது சாத்தியம்தானா?
அதை நாமே கணக்கிட்டு Rationalise செய்து பார்க்கவேண்டும்.
ரேஷனலைஸ் - நேர்ச்சொல் மனதுக்குச் சட்டென்று வரவில்லை. அதற்காக யோசனை செய்துகொண்டிருந்தேனேயாகில் வீடு விட்டுப் போயிரும்.
சிந்தனையின் வேகத்தில் கருத்துக்களும், கருத்துக்களின் வேகத்தில்
வாக்கியங்களும், வாக்கியங்களின் வேகத்தில் கீபோர்டைத் தட்டுவதும்
நடக்கவேண்டும். எங்கேனும் எதற்கேனும் வெட்டுப்பட்டாலோ, தயக்க
மேற்பட்டாலோ போக்கு அறுந்துவிடும். அப்புறம் கட்டுரையாவது $%#@யாவது.
படத்துக்குப் படம் கல்லூரி மாணவனாக வந்து கருணாஸ் சொல்வதுபோல "டப்பாஸே.... டப்பாஸே"தான்.

இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி கட்டுரைகள் எழுதுவதே
ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்தான். இதுவும் சிறந்த தமிழ்த் தொண்டுதான்.
காளையார்கோயிலுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு பத்து
செங்கற்களுக்கு ஒரு செங்கல் வீதம் மானாமதுரையில் போட்டார்களாம்.
அப்படிப் போடப்பட்ட செங்கற்களை வைத்துத்தான் மானாமதுரைக்
கோயிலின் ராஜகோபுரத்தை மருது சேர்வைகள் கட்டினார்கள். அந்த
ஊருக்கும் ஒரு ராஜகோபுரம் இருக்கட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு
இருந்தது.

இரண்டாம் பகுதி.......


                 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 18 July 2013

MANTRA TANTRA YANTRA-#1


         மந்திரம் தந்திரம் யந்திரம்-#1

    சில ஆண்டுகளுக்கு முன்னர் உதிரி உதிரியாக எழுதிய மந்திரங்கள்
பற்றிய மடல்களை ஒருங்கிணைத்துத் தொகுத்துப் போட்டிருக்கிறேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...
சில அன்பர்கள் என்னை வந்து பார்த்தபோது மந்திரங்களைப் பற்றியும் நிறைய கேட்டார்கள்.
அவர்கள் கேட்டது அம்பிகை சம்பந்தமான மந்திரங்களைப் பற்றி.
பொதுவாகவே மந்திரங்களில் பலவகையுண்டு.
பெண் தேவதைக்குரிய மந்திரம், ஆண்தேவருக்குரிய மந்திரம் என்பது
மாத்திரமல்ல.
ஆண் பெண் மந்திரங்கள்கூட உண்டு.
ராஜமந்திரம் என்றவகையுண்டு.
நரசிம்ம மந்திரம் என்பது ஒரு ராஜமந்திரம்.
இதையெல்லாம் செய்வதற்கு தனிப்பட்ட விசேஷ ஆசாரங்கள் அனுஷ்டானங்கள், நியமங்களெல்லாம் உண்டு.
ஆசாரம், நியமம் என்றால் நம்ம ஆட்கள் எப்போதுமே சைவமாகச் சாப்பிடுவது, குளிப்பது, கால்கை கழுவுவது, பஞ்சகச்சம் வைத்துக் கட்டுவது, இடுப்பில் துண்டு கட்டுவது, கொட்டை, பட்டை அணிதல், சடங்குகளை ஏராளமாக இணைத்துச் செய்வது போன்றவற்றில்தான் கவனத்தையும் செலுத்துகிறார்கள்; அவற்றையே
வலியுறுத்துகிறார்கள். அவை மட்டும் போதாது.
மனதில் உறுதி, வினைத்திட்பம், தீர்க்கமான கவனம், அலையாத, நிலைத்த மனம், ஒருங்குசேர்த்து இலக்கில் மட்டுமே செலுத்தப்படும் மனம், தேவையானவற்றை மட்டுமே பார்க்கும் பார்வை.....இப்படி பல விஷயங்கள் உண்டு.
இவை இல்லாமல் ஆசாரம் என்ற போர்வையில் செய்யப்படும் செய்கையெல்லாமே வெறும் Charade என்று சொல்லப்படும் ஒருவகைக் கூத்தாக மாறிவிடும்.
லயிக்காத மனம் பிரயோசனமில்லை.
விக்கிரகம், படம், யந்திரம், மண்டலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
மனோலயம் ஏற்படவேண்டும் என்பதற்கும் அவை ஒரு காரணமாக அமையும். மனதை ஈர்ப்பதற்காக. கண்களுக்கும் பார்வைக்கும் இலக்கு, மனதுக்கும் லயிப்பு.
இதை விட்டுவிட்டு வெறெதெல்லாமோ செய்துகொண்டிருப்பதில் பயனில்லை.
நட்ட கல், நட்ட கல்தான்.
உள்ளிருக்கும் நாதன் அந்தக் கல்லில் வரமாட்டான்.
முதலில் நாதனே உள்ளிருந்தால்தானே!
இதுதான் அடிப்படையே.

மனதைப் பற்றி நம் யோகநூல்கள் நிறையவே சொல்லியிருக்கின்றன.
இவை தவிர நேரடியாகக் கற்றலின்மூலமும் தானாகச் செய்யும் பயிற்சிகளின் மூலமும் அனுபவத்தின்மூலமும் மனதின் தன்மைகள், செயல்பாடுகள், இயக்கம், போக்கு முதலியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

பல பொருள்களிலும் மனது செல்லும் நிலையை 'க்ஷ¢ப்தம்' என்று சொல்வார்கள்.

இயக்கமின்மை, சோம்பல், லயிப்பின்மை, கவனமின்மை முதலியவைகூடிய நிலையை 'மூடம்' என்து சொல்வார்கள்.
அர்த்தம் மாறிப் போய் பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று.
"பலகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!" என்னும்போது இந்த நிலையில் உள்ள மனதை ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.

மனது சில சமயங்களில் வெளியில் கண்டதனமாகத் திரிந்துவிட்டு, சிற்சில சமயங்களில் உள்முகமாகவும் ஓடி ஒளிந்துகொள்ளும். இந்த நிலையை 'விக்ஷ¢ப்தம்' என்று யோகநூல்கள் கூறும்.

ஒரே இலக்கில் மனதை லயிக்கச்செய்து அதிலேயே நிறுத்தி வைத்துக் கொள்வது 'ஏகாக்ரம்'.
யோகத்தில் மட்டுமல்லாது மார்ஷியல் போர்முறைகளிலும் 'ஏகாக்ரம்' மிகவும் \அவசியமானது.
அடுக்கி வைத்திருக்கும் செங்கற்களை உடைக்கும் வீரரைக் கவனித்துப்
பாருங்கள்.
ஒழுங்காகச் செய்யப்படும் மார்ஷியல் போரும் ஒரு யோகம்தானே.

மனதை முற்றிலுமாக இயக்கமின்றி ஆக்கி, நிறுத்தியோ அல்லது இல்லாமலோ செய்வதை 'நிருத்தம்' என்று யோகநூல் கூறும்.
யோகம் என்றால் என்ன? அதற்கு பதஞ்சலியார் சொன்னது:
"யோகாஸ் சித்த நிரோத:"
இல்லாமல் செய்வது நிரோதனம். 'நிரோத்' என்னும் பெயரும் இதே வேரைக்  கொண்டதுதான்.
மனதை இல்லாமல் செய்வது யோகத்தின் உச்சநிலை.

'சும்மா' என்றொரு தொடரை எழுதியிருந்தேன்.
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் அது முழுக்கட்டுரையாக இருக்கிறது.

http://www.visvacomplex.com/summa_1.html

சிலநாட்களுக்கு முன்னால் நம் அன்பரொருவர் குறிப்பிட்டிருந்த மாத்ருகா மந்த்ர புஷ்பமாலா, மானச பூஜை, பாவனாமார்க்கம், இப்போதுள்ள Virtual Imaging முதலியவற்றுக்கெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட மனநிலைகள் தொடர்புள்ளவை.
மாத்ருகா மந்திரம், மாத்ருகா மந்த்ர புஷ்பமாலா முதலியவையும் குறிப்பிடத் தக்கவை..

                               $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Sunday, 5 May 2013

WHO IS THE SAIVAN

                           யார் சைவன்?



                      
உண்மையான சைவம் என்றால் என்ன?
அதைப் பற்றி பேசுமுன்பாக உங்களிடம்ஒரு புதிர் போடுகிறேன்.
அடுத்து தொடரலாம்.

முதற்கட்டம்:

    பிற்கால சோழர்கள் தீவிர சிவவழிபாட்டினர்; ஆழ்ந்த சிவபக்தியுடையவர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னாலேயே கோச்செங்கணான் என்பவர் காவிரிக் கரையில் எழுபத்திரண்டு சிவாலயங்கள் கட்டியிருக்கிறார்.
பல்லவ பாண்டிய பேரரசர்கள் சமணர்களாக விளங்கி, அந்த சமயத்தையே ஆதரித்து வந்த காலத்தில்கூட சோழர்கள் சிவமதத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருந்திருக்கின்றனர்.
    அப்பர் தன்னுடைய சிவப்பணியைத் தொடங்கிய காலத்திலேயே, அவருக்கு பழையாறையைச் சேர்ந்த சோழமன்னன் ஒருவன் ஆதரவு
கொடுத்துள்ளான்.
    அதன்பின்னர், பாண்டியநாட்டில் பரவியிருந்த சமண சமயத்தைப்
போக்கி, மீண்டும் சிவமதம் தழைக்கச் செய்ய சம்பந்தரை அங்கு
அழைப்பித்ததுவும் நின்றசீர் நெடுமாற பாண்டியரின் அரசியாரான 'பாண்டி மாதேவி'யாக விளங்கிய "வளவர்கோன் பாவை" மங்கையற்கரசியார்தான். அவர் ஒரு சோழ மன்னரின் மகள்.
    விஜயாலய சோழர் வழிவந்தவர்களில்அவருடைய கொள்ளுப்பேரர்
கண்டராதித்த சோழர் ஒரு பெரும் சிவனருட்செல்வர். அவருடைய
"திருவிசைப்பா" ஒன்பதாம் திருமுறையில் திகழ்கிறது. அவருடைய
மனைவியார் செம்பியன்மாதேவியார் ஒரு சிவப்பழம்.
    கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயரின் பேரர்தான் அருண்மொழிவர்மர் எனப்படும் ராஜராஜசோழர். இவரை தீவிர சிவப்பற்று மிக்கவராக செம்பியன் மாதேவியார் வளர்த்துவிட்டார்.
    ராஜராஜர் ஆட்சியில் செய்த முக்கிய காரியங்களில் இன்றும் பெருமை
குன்றாமல் திகழ்வது அவர் தேவார திருமுறைகளைத் தில்லையிலிருந்து  நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு வெளிப்படச் செய்ததுதான். பின்னர் நம்பியுடன் அறுபத்து மூன்று நாயன்மார்களின் மரபில் உதித்த பாணப் பெண்மணியின் உதவியுடன் தேவாரப் பதிகங்களுக்கு பண்ணடைவு செய்வித்தார்.
    அன்று நிலவிய சிவசமய அருட்பாடல்களைத் திரட்டச் செய்தார்.
    நம்பி அவற்றையெல்லாம் திருமுறைகளாகத் தொகுத்தார்.
    தனது சொந்த வழிபாட்டிற்காக "தேவார தேவர்" என்ற பெயரில் ஒரு
சிவமூர்த்ததை நிறுவி அனுதினமும் தேவார திருமுறைகளை ஓதி வழிபாடு செய்துவந்தார். பிரம்மாண்டமான சிவாலயம் ஒன்றை எழுப்பி, பெரும் கோயில்கள் கட்டும் மரபையும் அங்கு தேவாரப்பதிகங்கள் ஓதும் மரபையும் நிறுவினார்.
    சிவாலயங்கள் சமுதாய மையங்களாகத் திகழுமாறு ஏற்பாடு செய்தார்.
    அவருடைய மகன் ராஜேந்திர சோழர்,கங்கைகொண்ட சோழபுரத்தில்
மிகச் சிறப்பான அமைப்புக்கொண்ட பெரும் சிவாலயம் எழுப்பினார்.
அக்கோயிலுக்கும் சித்தர் கருவூர்த்தேவர் திருவிசைப்பா ஒன்றை பாடியுள்ளார்.
அதனையும் உடனிருந்த நம்பியாண்டார்ஒன்பதாம் திருமுறையில் சேர்ப்பித்து விட்டார்.
    பின்னர் முடிவாக பதினோரு திருமுறைகளாக தொகுப்பை நம்பியாண்டார் பூர்த்தி செய்தார்.
    அதே அளவில் அதே வடிவில் அவை அடுத்து நூற்று இருபது ஆண்டுகளுக்கு விளங்கின. ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த எட்டு
சோழர்களின் ஆட்சி கழிந்து ஆறாவது தலைமுறையில் ஒன்பதாம்
சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கனுடைய முதலமைச்சர் சேக்கிழார் பெருமான், "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரு நூலை இயற்றினார்.
அதனுடன் சேர்ந்து திருமுறைகள் மொத்தம் பன்னிரெண்டாக ஆக்கப்பட்டன.
    அப்படியே இன்றளவும் நிலவுகின்றன.
    திருத்தொண்டர் புராணத்தின் சுவடிகளையும் சேக்கிழார் பெருமானையும் யானையின் மீது ஏற்றி, அரங்கேற்றத்திற்காக தில்லைக்கோயிலுக்கு குலோத்துங்கன் கொண்டு வந்தான். அப்போது சேக்கிழாரின் பின்னால் யானையின் அம்பாரியின்மீது நின்றுகொண்டு அவருக்குக் கவரி வீசினான். (அந்தக் காலங்களில் இப்படியெல்லாம் மரியாதை இருந்தது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை அடுத்து சொல்கிறேன். இவற்றையெல்லாம் "Tamilian Sagas" என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்).
    இவர்கள் எல்லாருமே தீவிர சிவமதத்தவர்; ஆழ்ந்த சிவப்பற்று
மிக்கவர்கள்.
    சிவனையே முழு முதற் பொருளாகக் கொண்டவர்கள்.
    சிவவழிபாட்டை முனைப்புடன் செய்தவர்கள். சிவமதம் தழைப்பதில்
பெரும் தொண்டு ஆற்றியவர்கள்.
    சோழர்கள் காலத்தில் சில சீனத் தூதுக் குழுக்கள் சோழர்களின்
தலைநகருக்கு வந்தன. அவர்களில் ஒரு தூதுவர் சோழமன்னர் தந்த
விருந்தைப் பற்றியெழுதியிருக்கிறார்.
"....He(the Prince) does not drink wine, but he eats meat, and, as is the native custom, dresses in cotton clothing and eats flour cakes."
அவர்களெல்லாம் மாமிச உணவு சாப்பிட்டவர்கள்தாம்.

இரண்டாம் கட்டம்:

    அடார்ல்·ப் ஹிட்லர் பெரும்போராட்டங்களுகிடையில் ஜெர்மனியின் பெருந்தலைவராகியவர்.
    அவருக்கு ஓர் அக்காள் மகள்.
    அவளை ஹிட்லர் மிக ஆழமாகக் காதலித்தார். பேய்க் கோபவெறி
கொண்ட ஹிட்லரை அவளுடைய கனிவு ஒன்றே இந்த உலகத்தில் கட்டுப்படுத்தக்  கூடியது.
    ஆனால் அந்தப் பெண் இளவயதிலேயே இறந்துவிட்டாள்.
    அவளுடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள ஹிட்லரால் இயலவில்லை.
தற்கொலை செய்துகொள்ள நினைத்த ஹிட்லரைத் தடுத்தவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்களான ஹெஸ்ஸ¤ம் கெரிங்கும்தான்.
    அவளுடைய ஞாபகார்த்தமாக ஹிட்லர் அன்றிலிருந்து மாமிசம்
சாப்பிடுவதை விட்டுவிட்டார். திருமணத்தைப் பற்றியும் நினைக்கவே
இல்லை.
    தாம் சாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரேயே அவர் எவா ப்ரானைத் திருமணம் செய்துகொண்டார்.
    ஆனால் தனது மரக்கறி உணவைமட்டும் இறக்குமட்டும் விடவேயில்லை. அவருடைய கடைசி உணவு மரக்கறி உணவுதான்.

    இப்போது சொல்லுங்கள்.
    இவர்களில் சைவம் யார்?
    சோழரா? ஹிட்லரா?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 18 January 2013

GOLD-LIKE





   மலேசியாவில் மலாய்க்காரர்களிடம் பலவகையான நம்பிக்கைகள் உண்டு.     அவற்றில் ஒன்று..... மலாய்க்கார ஆண்கள் நம்மைப் போல் நவரத்தினக் கற்களை அணியமாட்டார்கள். வேறுவகையான கற்களை அணிவார்கள்.
நவரத்தினக் கற்களுக்கு எப்படி பலன்கள் இருக்கின்றவோ அதே போல்
பலன்கள் இவ்வகைக் கற்களுக்கும் உண்டு. நவரத்தினங்களிடம் இல்லாத சில குணங்களும் பலன்களும்கூட இக்கற்களுக்கு உண்டு. சில கற்கள் மிகவும் அபூர்வமானவை. சிலகற்கள் அற்புத சக்திகள் கொண்டவையாக இருக்கும். மலாய் மாந்திரீகர்கள் இவ்வகைக் கற்களை அணிந்திருப்பார்கள். மலாய் ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் வைத்திருப்பார்கள்.


மேலேயுள்ள கற்கள் - மாலச்சைட், டைகர்ஸ் ஐ, டர்க்வாய்ஸ், அகேட்


    பெரும்பாலும் மோதிரமாகத்தான் கற்களை அணிவார்கள்.
    ஆனால் இன்னொரு பாந்த்தாங் தடையும் அவர்களிடையே உண்டு. ஆண்கள் தங்கத்தை உடலின் எந்த பாகத்திலும் எந்த ரூபத்திலும் அணியக்கூடாது.
    ஆகவே அவர்கள் பெரும்பகுதி செம்பும் கொஞ்சம் வெள்ளீயமும் கலந்த கலவையைப் பயன்படுத்தி மோதிரங்களைச் செய்வார்கள்.
    சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஒரு டாலர் நாணயம் செம்பு, வெள்ளீயம்,
கொஞ்சம் அலுமினியம் ஆகியவை கலந்த கலவையால் ஆனது.
    சீனர்கள் நம்மைப்போல 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்த
22 காரட் தங்கத்தைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் பெரும்பாலும்
2 பங்கு வெள்ளி, 2 பங்கு செம்பு, 18 பங்கு பொன் ஆகியவை சேர்ந்த கலவையைப் பயன்படுத்துவார்கள். அது மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும்.
    கிட்டத்தட்ட அந்த மாதிரியான நிறத்தில் சிங்கப்பூர் டாலர் இருக்கும்.
    இந்த டாலரை மோதிரம் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.
    ஆகவே சிங்கப்பூர் ஒரு டாலர் நாணயத்தைக் காண்பது அரிது.

                        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$