Sunday, 5 May 2013

WHO IS THE SAIVAN

                           யார் சைவன்?



                      
உண்மையான சைவம் என்றால் என்ன?
அதைப் பற்றி பேசுமுன்பாக உங்களிடம்ஒரு புதிர் போடுகிறேன்.
அடுத்து தொடரலாம்.

முதற்கட்டம்:

    பிற்கால சோழர்கள் தீவிர சிவவழிபாட்டினர்; ஆழ்ந்த சிவபக்தியுடையவர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னாலேயே கோச்செங்கணான் என்பவர் காவிரிக் கரையில் எழுபத்திரண்டு சிவாலயங்கள் கட்டியிருக்கிறார்.
பல்லவ பாண்டிய பேரரசர்கள் சமணர்களாக விளங்கி, அந்த சமயத்தையே ஆதரித்து வந்த காலத்தில்கூட சோழர்கள் சிவமதத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருந்திருக்கின்றனர்.
    அப்பர் தன்னுடைய சிவப்பணியைத் தொடங்கிய காலத்திலேயே, அவருக்கு பழையாறையைச் சேர்ந்த சோழமன்னன் ஒருவன் ஆதரவு
கொடுத்துள்ளான்.
    அதன்பின்னர், பாண்டியநாட்டில் பரவியிருந்த சமண சமயத்தைப்
போக்கி, மீண்டும் சிவமதம் தழைக்கச் செய்ய சம்பந்தரை அங்கு
அழைப்பித்ததுவும் நின்றசீர் நெடுமாற பாண்டியரின் அரசியாரான 'பாண்டி மாதேவி'யாக விளங்கிய "வளவர்கோன் பாவை" மங்கையற்கரசியார்தான். அவர் ஒரு சோழ மன்னரின் மகள்.
    விஜயாலய சோழர் வழிவந்தவர்களில்அவருடைய கொள்ளுப்பேரர்
கண்டராதித்த சோழர் ஒரு பெரும் சிவனருட்செல்வர். அவருடைய
"திருவிசைப்பா" ஒன்பதாம் திருமுறையில் திகழ்கிறது. அவருடைய
மனைவியார் செம்பியன்மாதேவியார் ஒரு சிவப்பழம்.
    கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயரின் பேரர்தான் அருண்மொழிவர்மர் எனப்படும் ராஜராஜசோழர். இவரை தீவிர சிவப்பற்று மிக்கவராக செம்பியன் மாதேவியார் வளர்த்துவிட்டார்.
    ராஜராஜர் ஆட்சியில் செய்த முக்கிய காரியங்களில் இன்றும் பெருமை
குன்றாமல் திகழ்வது அவர் தேவார திருமுறைகளைத் தில்லையிலிருந்து  நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு வெளிப்படச் செய்ததுதான். பின்னர் நம்பியுடன் அறுபத்து மூன்று நாயன்மார்களின் மரபில் உதித்த பாணப் பெண்மணியின் உதவியுடன் தேவாரப் பதிகங்களுக்கு பண்ணடைவு செய்வித்தார்.
    அன்று நிலவிய சிவசமய அருட்பாடல்களைத் திரட்டச் செய்தார்.
    நம்பி அவற்றையெல்லாம் திருமுறைகளாகத் தொகுத்தார்.
    தனது சொந்த வழிபாட்டிற்காக "தேவார தேவர்" என்ற பெயரில் ஒரு
சிவமூர்த்ததை நிறுவி அனுதினமும் தேவார திருமுறைகளை ஓதி வழிபாடு செய்துவந்தார். பிரம்மாண்டமான சிவாலயம் ஒன்றை எழுப்பி, பெரும் கோயில்கள் கட்டும் மரபையும் அங்கு தேவாரப்பதிகங்கள் ஓதும் மரபையும் நிறுவினார்.
    சிவாலயங்கள் சமுதாய மையங்களாகத் திகழுமாறு ஏற்பாடு செய்தார்.
    அவருடைய மகன் ராஜேந்திர சோழர்,கங்கைகொண்ட சோழபுரத்தில்
மிகச் சிறப்பான அமைப்புக்கொண்ட பெரும் சிவாலயம் எழுப்பினார்.
அக்கோயிலுக்கும் சித்தர் கருவூர்த்தேவர் திருவிசைப்பா ஒன்றை பாடியுள்ளார்.
அதனையும் உடனிருந்த நம்பியாண்டார்ஒன்பதாம் திருமுறையில் சேர்ப்பித்து விட்டார்.
    பின்னர் முடிவாக பதினோரு திருமுறைகளாக தொகுப்பை நம்பியாண்டார் பூர்த்தி செய்தார்.
    அதே அளவில் அதே வடிவில் அவை அடுத்து நூற்று இருபது ஆண்டுகளுக்கு விளங்கின. ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த எட்டு
சோழர்களின் ஆட்சி கழிந்து ஆறாவது தலைமுறையில் ஒன்பதாம்
சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கனுடைய முதலமைச்சர் சேக்கிழார் பெருமான், "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரு நூலை இயற்றினார்.
அதனுடன் சேர்ந்து திருமுறைகள் மொத்தம் பன்னிரெண்டாக ஆக்கப்பட்டன.
    அப்படியே இன்றளவும் நிலவுகின்றன.
    திருத்தொண்டர் புராணத்தின் சுவடிகளையும் சேக்கிழார் பெருமானையும் யானையின் மீது ஏற்றி, அரங்கேற்றத்திற்காக தில்லைக்கோயிலுக்கு குலோத்துங்கன் கொண்டு வந்தான். அப்போது சேக்கிழாரின் பின்னால் யானையின் அம்பாரியின்மீது நின்றுகொண்டு அவருக்குக் கவரி வீசினான். (அந்தக் காலங்களில் இப்படியெல்லாம் மரியாதை இருந்தது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை அடுத்து சொல்கிறேன். இவற்றையெல்லாம் "Tamilian Sagas" என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்).
    இவர்கள் எல்லாருமே தீவிர சிவமதத்தவர்; ஆழ்ந்த சிவப்பற்று
மிக்கவர்கள்.
    சிவனையே முழு முதற் பொருளாகக் கொண்டவர்கள்.
    சிவவழிபாட்டை முனைப்புடன் செய்தவர்கள். சிவமதம் தழைப்பதில்
பெரும் தொண்டு ஆற்றியவர்கள்.
    சோழர்கள் காலத்தில் சில சீனத் தூதுக் குழுக்கள் சோழர்களின்
தலைநகருக்கு வந்தன. அவர்களில் ஒரு தூதுவர் சோழமன்னர் தந்த
விருந்தைப் பற்றியெழுதியிருக்கிறார்.
"....He(the Prince) does not drink wine, but he eats meat, and, as is the native custom, dresses in cotton clothing and eats flour cakes."
அவர்களெல்லாம் மாமிச உணவு சாப்பிட்டவர்கள்தாம்.

இரண்டாம் கட்டம்:

    அடார்ல்·ப் ஹிட்லர் பெரும்போராட்டங்களுகிடையில் ஜெர்மனியின் பெருந்தலைவராகியவர்.
    அவருக்கு ஓர் அக்காள் மகள்.
    அவளை ஹிட்லர் மிக ஆழமாகக் காதலித்தார். பேய்க் கோபவெறி
கொண்ட ஹிட்லரை அவளுடைய கனிவு ஒன்றே இந்த உலகத்தில் கட்டுப்படுத்தக்  கூடியது.
    ஆனால் அந்தப் பெண் இளவயதிலேயே இறந்துவிட்டாள்.
    அவளுடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள ஹிட்லரால் இயலவில்லை.
தற்கொலை செய்துகொள்ள நினைத்த ஹிட்லரைத் தடுத்தவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்களான ஹெஸ்ஸ¤ம் கெரிங்கும்தான்.
    அவளுடைய ஞாபகார்த்தமாக ஹிட்லர் அன்றிலிருந்து மாமிசம்
சாப்பிடுவதை விட்டுவிட்டார். திருமணத்தைப் பற்றியும் நினைக்கவே
இல்லை.
    தாம் சாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரேயே அவர் எவா ப்ரானைத் திருமணம் செய்துகொண்டார்.
    ஆனால் தனது மரக்கறி உணவைமட்டும் இறக்குமட்டும் விடவேயில்லை. அவருடைய கடைசி உணவு மரக்கறி உணவுதான்.

    இப்போது சொல்லுங்கள்.
    இவர்களில் சைவம் யார்?
    சோழரா? ஹிட்லரா?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. you have used the current usage of saivam very cleverly.

    ReplyDelete