Tuesday, 27 August 2013

CHICKEN SOUP



 ஆன்மாவுக்குக் கோழி சூப்



Chicken Soup for the Soul என்னும் தலைப்பில் வெளியாகும் புத்தகங்கள்
தமிழர்களுக்கு எந்த அளவுக்குப் பரிச்சயம் என்பது கேள்விக்குறியே.
சமீபத்தில் மலேசியாவில் தன் முனைப்புத் தூண்டுதல், முக்கியமான சமய இயக்கம் ஒன்று ஆகியவற்றில் முக்கியமான ஆளாகக் கருதப்படுபவர் ஒருவரைச் சந்தித்தபோது, இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர், "Ai don read all that. நான் முழுச்சைவம். Strict vegetarian" என்று அழுத்தமாகச் சொன்னார்.
மலேசியாவில் தமிழியமும் சமயமும் பல்லாண்டுகள் பின்தங்கிச் செல்வதன் காரணஸ்தர்களில் இந்த ஆளும் ஒருவர். அவரிடம் போய்ச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.

Chicken Soup for the Soul என்பது ஒரு புத்தகத்தின் பெயர்.
ஏன் அவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள்?

உடல் தளர்ச்சியாகவும் பலவீனமாகவும் ஜீரணம் சரியாக இல்லாமலும் இருப்பவர்களுக்குக் கோழி சூப் கொடுப்பது வழக்கம். செட்டிநாட்டுப் பக்கத்தில் இது சர்வசாதாரணம்.
மற்றவர்களிடையேயும் இந்த வழக்கம் உண்டு. சீனர்கள் கோழி சூப்பிலேயே பலவிதமான ரிஸிப்பிக்கள் வைத்திருக்கிறார்கள்.
கோழிக் காலுடன் சில மூலிகைகள், மருந்துச்சரக்குகள் முதலியவற்றைப் போட்டு செய்யும் சூப் ஒன்று இருக்கிறது. மண் சட்டியில்தான் அதை வைத்துக் கொடுப்பார்கள். 


"சூட்டோடு சூடாக சூப்பு தன்னைச்
சாப்பாட்டு முன்னாலே சாப்பிடவேண்டும்"

என்று எந்த சித்த வைத்தியப் பாடலும் சொல்லவில்லை. நான்தான் சும்மா ஒரு பெப்புக்காகச் சொல்லிவைத்தேன். யாப்பு கீப்பு கிராமரெல்லாம் இல்லாமல் இப்படியெல்லாம் சித்தர் பாட்டு இருக்காது. போதாததற்கு இந்த 'பாரப்பா, கேளப்பா, கூறப்பா'வெல்லாம் போட்டு அமர்க்களமாக ஜிகிர்தண்டாவாக விளங்கும்.
Brand's Essence of Chicken என்பது பாட்டன் பூட்டன் காலத்துச் சரக்கு. அதே பச்சைப் பெட்டியில் கறுப்பு பாட்டிலில் கறுப்பு திரவம். இது ஒரு அருமையான டானிக்.
"முருகேஸ¤.... ப·ப்... ப·ப்..... உஸ்ஸ்ஸ்... அப்பா!" என்று ஓடமுடியாமல் மூச்சு வாங்குகிறவர்கள் இதை வாங்கி சாப்பிடலாம்.
உடல் தளர்ச்சிக்கும் உடல் தெம்புக்கும் ஏற்றது கோழி சூப் என்பதால் தெம்பையும் உற்சாகத்தையும் மோட்டிவேஷனையும் திருப்தியையும் சாந்தியையும் அமைதியையும் ஏற்படுத்தும் உருவகமாகக் கோழி சூப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
Chicken Soup for the Soul என்று ஆன்மாவுக்குத் தெம்பு கொடுக்கும் டானிக்காக விளங்கும் கதைகளையும் சம்பவங்களையும் கவிதைகளையும் ஜோக்குகளையும் சேகரித்துப் புத்தகமாக ஆக்கியிருக்கிறார்கள்.
'Soul, ஆன்மா' என்பதை சங்கராச்சாரியார், மெய்கண்டார் சொன்னாப்புல
எடுத்துக்கிடக்கூடாது. அது வேற.

இவற்றின் முக்கியமான லட்சணம், அந்த சம்பவங்கள் கதைகள் எல்லாமே மனதைத் தொடக்கூடியதாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அமைந்திருக்கும்.
இந்த மாதிரியானதொரு concept-ஐ மனதில்கொண்டு Jack Canfield, Victor Hansen ஆகிய இருவரும் மனதுக்குத் தெம்பையும் உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்தும் சம்பவங்கள் கதைகளையெல்லாம் தொகுத்தார்கள்.
அத்தகைய நூற்றியோரு விஷயங்களை ஒரு புத்தகமாக்கினார்கள்.
இதை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வெளியீட்டாளராகப் போய்ப் பார்த்தார்கள்.
ஒருவரையா....இருவரையா?
நூற்றுநான்கு பேர்களைப் பார்த்தார்கள்.
அத்தனை பேரும் நிராகரித்தனர்.
இந்த மாதிரியான விஷயங்களைப் படிப்பதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள்
என்று அந்த வெளியீட்டாளர்கள் பரிபூரணமாக நம்பினார்கள்.

கடைசியில் நூற்று ஐந்தாவதான முயற்சியில் அறிமுகமேயில்லாத ஒரு சிறிய கம்பெனியின் மூலம் வெளியிட்டார்கள். முதன்முதலில் 1993-ஆம் ஆண்டில் புத்தகம் வெளிவந்தது. அது ஒரு Run Away Success.
இதை அப்படியே தமிழாக்கம் செய்தால் எதிர்மறையான அர்த்தம் ஏற்படும்.
'ஓடிப்போன வெற்றி' என்றா சொல்வது? சொல்லப்படாது.
ஆரம்பத்தில் இதற்கு ஒன்றும் விளம்பரமேயில்லை. சும்மா ஒர்த்தொர்த்தர் அவரவருக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்ல, அவரவர் மற்றவருக்குச் சொல்ல, மற்றவர் இன்னொருவருக்குச் சொல்ல, இன்னொருவர் வேறொருவருக்குச் சொல்ல, 'அண்ணாதுரை ஸிஸ்ட'த்தில் அந்தப் புத்தகத்தின் புகழ் பரவியது. மிக வேகமாகப் புத்தகம் விற்றுத் தீர்ந்தது.
இதன் பரபரப்பான விற்பனையால் பெரிய பெரிய கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

நூலாசிரியர்கள் அடுத்தடுத்து வெகுவேகமாகக் கதைகளையும் கவிதைகளையும் சம்பவங்களையும் சேகரித்து இதே தலைப்பில் புத்தகங்களாக வெளியிட்டனர். இப்படி ஆறு புத்தகங்கள். அதன்பின்னர் ஒவ்வொரு குறிப்பிட்ட குழுமங்களுக்காக என்று புத்தகங்கள் போட்டனர். டீன் ஏஜ் பசங்களுக்கு, பெண்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, வயசாளிகளுக்கு, வேலை செய்பவர்களுக்கு என்று புதுப்புது புத்தகங்கள்.
பழைய புத்தகங்கள் மறு பதிப்புக்களும் கண்டன.
ஆடீயோ கெஸெட்டுக்கள்வேறு.
இந்தப் புத்தகங்களின் சுருக்கமாக Chicken Soup for the Soul in a Cup என்ற பெயரில் சிறு நூல்கள் கையடக்கமாக வெளிவந்தன. எங்காவது போகும்போது பாக்கெட்டில் செருகிக்கொண்டோ ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டோ செல்லக்கூடியவையாக இருந்தன. பல்வைத்தியத்துக்காகக் காத்திருப்பதிலிருந்து பஸ் ஸ்டாண்டு, கக்கூஸ் என்று ஆங்காங்கு படிக்கக்கூடியவகையில் அந்தப் பிரதிகள் இருந்தன.
அப்படியே நூறு புத்தகங்கள் வெளியாகிவிட்டன. 2005-அம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நூற்று ஓராவது தலைப்பு வெளியாகிறது.
நூற்று ஒரு கட்டுரைகள் கதைகளை வைத்து ஒவ்வொரு புத்தகமும்
விளங்கியதால்தான் நூற்றியோராவது புத்தகத்தின் வெளியீட்டை விழாவாகக் கொண்டாடினார்கள்.

பன்னிரண்டு ஆண்டு காலத்திற்குள் அறுபத்தைந்து மொழிகளில் நூறு சிக்கன் சூப் தலைப்புப் புத்தகங்களின் தொண்ணூறு மில்லியன் பிரதிகள் வெளியாகி உலகெங்கும் விற்பனையாகிவிட்டன.
இவற்றுடன் தொடர்பான தலைப்புகளிலும் துறைகளிலும் வேறு சில புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
The Alladdin Factor என்பது Chicken Soup for the Soul - Living Your Dreams என்னும் புத்தகத்தின் தொடர்பாக விரிவுகளும் விளக்கங்களும் கொண்டது.
உபயோகமான புத்தகங்கள்.




       $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. If you’ve ever experimented with adding cold press coconut oil into your diet you will likely recognize this captivating experience, as well as the sense of sustained energy, balance and vitality that this versatile oil can bring it.“When oil is refined, it loses a lot of nutrients but cold pressing it in a marachekku oil ensures that you retain all of it,” says the 35-year-old who works in a software firm.

    ReplyDelete