Friday, 19 August 2011

சமய ஒற்றுமை

ஒரு காலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே தீராப்பகை நிலவி வந்தது.   ஸ்ரீவைஷ்ணவர்கள் என்போர் விஷ்ணுவை முழுமுதல் தெய்வமாக வழிபடுபவர்கள்.  ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஷண்மதங்கள் எனப்படும் ஆறு சமயங்களில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம்,  சௌரம் ஆகியவை இருக்கும். இந்த வரிசையில் வரும் வைஷ்ணவம் வேறு. ஸ்ரீவைஷ்ணவர்கள் கடைபிடிக்கும் சமயம் வேறு.

ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் சமயத்தில் மிக ஆழமான பற்றுக்கொண்டவர்கள். அவர்கள் இருக்கும் வீதியில், சிவன் கோயில் உற்சவ மூர்த்தி உலா வந்தால் வீட்டின் முன் கதவைப் பூட்டி வைத்துக்கொள்வார்கள்.  மெய்கண்ட வாத சித்தாந்த சைவர்களும் இதே மாதிரிப் பட்டவர்கள்தாம். விஷ்ணுவை அறவே பிடிக்காது. ஆதிசங்கரரின் அறுசமய வரிசையில் உள்ள சைவம் இவர்களின் சைவத்திலிருந்து வேறுபட்டது.  'விஷ்ணு', 'நாராயண' என்ற பெயர்கள்கூட காதில் விழக்கூடாது என்று நினைப்பார்கள். அப்படி அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டால், காதுகளைப் பொத்திக்கொண்டு உரக்க, "சிவ சிவ, சிவ சிவ" என்று கத்துவார்கள்.

சிவனுடைய கணங்களில் பூத கணங்கள் உண்டு. அந்த பூத கணங்களின் கூட்டமொன்றின் தலைமைப் பூதன் ஒருவன் இருந்தான்.  அவனுக்கு சிவன் பெயரைத் தவிர வேறேதும் கேட்கக்கூடாது.
இந்த இடத்தில் 'சிவநாமம்' என்று எழுதவில்லை. அப்புறம் "சிவன் எப்போ நாமம் போட்டுண்டுட்டார்?"  என்று யாராவது கேட்கக்கூடும் அல்லவா?  ஆகையால்தான் 'சிவன் பெயர்'.

அந்த பூதத் தலைவன் தன் காதுகளில் பெரிய கண்டா மணிகளைத் தொங்கவிட்டிருந்தான்.  யாராவது 'நாராயணா' என்று சொன்னால், உடனேயே தலையை வெகு வேகமாக ஆட்டி, அந்த கண்டா மணிகளை ஒலிக்கச் செய்வான். அத்துடன், "சிவ சிவ சிவ சிவ" என்று உரக்கச் சொல்வான்.  அதனாலேயே அந்த பூதனுக்குக் 'கண்டாகர்ணன்' என்று பெயர் ஏற்பட்டது. 'கண்டா = மணி; கர்ணம் = காது.
இந்த சைவ வைஷ்ணவ பரஸ்பர வெறுப்பைப் பற்றி பல கதைகள் நிலவி வந்தன. 
அவற்றில் ஒன்று............

திருச்சியின் ஒரு பகுதி ஸ்ரீரங்கம். அது ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைமைக் கோயில். சைவர்களுக்குச் சிதம்பரம் எப்படியோ அதே மாதிரி ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு.  திருச்சியின் அருகாமையில் உள்ள ஊர் திருவானைக்கா. அங்கு சிவனுடைய பஞ்சபூத §க்ஷத்திரங்களில் ஒன்றாகிய ஜம்புகேஸ்வரம் இருக்கிறது. அங்கு அகிலாண்டேஸ்சரி சமேத ஜம்புகேஸ்வரர் இருக்கிறார்.  ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்ததொரு வைஷ்ணவர். அவர் திருவானைக்கா ஜம்புகேஸ்வரம் கோயிலின் சுவற்றோரத்தில் மலஜலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  இதற்காகவே காலையில் மெனக்கெட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து ஆற்றைக் கடந்து நடந்தே திருவானைக்காவுக்குச் செல்வார். 

ஒருநாள் சுவற்றின் கீழே குத்தவைத்து அமர்ந்து மலஜலம் கழிக்கும்போது, அந்தச் சுவற்றின்மீது வந்து உட்கார்ந்த காகம் ஒன்று, சுவற்றின் உச்சியிலிருந்த செங்கலொன்றைத் தற்செயலாகத் தள்ளிவிட்டது. அது அவருடைய மண்டையின்மீது விழுந்து ரத்தக்காயம் ஏற்பட்டது.  மேலே நிமிர்ந்து பார்க்கும்போது, அந்தக் காகம் அங்கு இருப்பதையும் செங்கல் ஒன்று உதிர்ந்து விழுந்திருப்பதையும் கண்டார்.  உடனே காகத்தைப் பார்த்து, "ஏ ஸ்ரீவைஷ்ணவப் பெருங்காக்கையே! இதே மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செங்கல்லாகக் கீழே தள்ளி இந்தச் சுவற்றை இடித்துத் தள்ளு!" என்று சொல்லிப் பாராட்டினாராம். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்ஸ¤னாமியால் வேளாங்கண்ணி மாதாக்கோயில் இடிந்து விழுந்து, நாற்பது பேருக்குமேல் இறந்துபோன செய்தி கேட்டு ஒருவர் மிகவும் சந்தோஷப்பட்டு ரொம்பவும் மகிழ்ச்சியாக இணையத்தில் எழுதியிருந்தார். அவர் ஒரு பிராம்மணர். 

அதைப் படித்ததும் எனக்கு இந்தக் கதைதான் ஞாபகம் வந்தது. 

No comments:

Post a Comment