Sunday, 7 August 2011

பணக்கார அரசர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்திலேயே பணக்காரராக ப்ரூனீ சுல்த்தான் கருதப்பட்டார். முதலில் ப்ரூனீ என்பது எங்கு இருக்கிறது என்று சொல்லிவிடுகிறேன்.  போர்னியோ என்னும் தீவு ஒன்று தென்கிழக்காசியாவில் உண்டு.  மிகவும் பெரிய தீவு. உலகிலேயே மூன்றாவது பெரியது.  ஏழு லட்சத்து முப்பதைந்தாயிரம் சதுர கீலோமீட்டர் பரப்புள்ளது. அதாவது தமிழ்நாட்டைப் போல நான்கு மடங்கு பெரியது. 

அந்தத் தீவு மிகவும் வளமானது. பதினோராயிரம் வகையான பூச்செடிகள் இருக்கின்றன. பதினாறு ஏக்கரே உள்ள ஒரு சிறிய வட்டாரத்துக்குள் மட்டும் எழுநூறு வெவ்வேறு ஜாதி மரங்கள் உள்ளன. பையோடைவர்ஸிட்டி என்பார்கள். 

இந்த தீவின் வடக்கில் சாபா என்னும் மாநிலமும் வடமேற்கே சராவாக் என்னும் மாநிலமும் உள்ளன. இவை மலேசியாவைச் சேர்ந்தவை.  இவற்றிற்கும் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள பகுதியைக் கலிமாந்த்தான் என்பார்கள். அது இந்தோனீசியாவைச் சேர்ந்தது.  இவை மூன்றுக்கும் இடுக்கில் ஒரு சிறிய நாடு.  ஐயாயிரம் சதுர கீலோமீட்டர் மட்டுமே பரப்புள்ள சிறு நாடு. 
சிவகங்கை அளவு உள்ளது. 
அது ஒரு முடியரசு.   
போல்க்கியா என்னும் மன்னர் பரம்பரை ஆட்சியில் உள்ளது.  ஹஸானால் போல்க்கியா என்பவர் அதன் சுல்த்தான்.  ஒரு காலத்தில் அவர்தான் உலகத்திலேயே பெரிய பணக்காரராக இருந்தார். 

Hassanal Bolkiah


உலகின் பல நாடுகள் குடியாட்சிக்கு வந்துவிட்டாலும்கூட இன்னும் சில நாடுகள் அரசர்களால் ஆளப்பட்டுதான் வருகின்றன.  அவற்றின் அரசர்/அரசிகளில் சிலர் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கின்றனர்.  அத்தகைய அரசர்களில் முதன்மை வகிப்பவர் தாய்லந்தின் பூமிபோல் அடுல்யடேஜ்.  இந்தப் பெயர் சமஸ்கிருத மூலத்தைக் கொண்டது.
பூமிபால் அதுல்யதேஜ் -  பூமியைப் பரிபாலித்துக் காக்கும் மாசற்ற தூய்மையான தேஜஸ் உடையவர் என்று பொருள்.  மூவாயிரம் கோடி டாலர் அவருடைய மதிப்பு. 

Thai King


இவருக்கு அடுத்த ஸ்தானத்தில்தான் சுல்த்தான் போல்க்கியா விளங்குகிறார்.   
இரண்டாயிரம் கோடி டாலர்.
ஏராளமாகப் பணம் வைத்திருப்பார்கள் என்று நம்மைப் போன்றவர்களால் நம்பப்படும் அராப் நாட்டுக் கொள்ளையர்கள் இவர்களுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கிறார்கள்.  சௌடி ரௌடி, டுபாய் டுபாக்கூர் போன்றவர்கள் எல்லாம் அப்புறம்தான்.  ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிலவிய காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மிகவும் பணக்காரராக விளங்கினார். 

George V


இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பாட்டனார் ஐந்தாம் ஜார்ஜின் ஸ்டாம்புக் கலெக்ஷனே பலகோடி டாலர் பெருமானமுள்ளது. இன்னும் அரிய பொக்கிஷங்கள் அவரிடம் உண்டு. 

இவர்கள் எல்லாருக்கும் முன்னால் - எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரிய பணக்காரராக இருந்தவர் இந்தியாவின் ஹைதராபாத் நிஸாம் மன்னர்.  இவருடைய சொத்தின் மதிப்பு சரியாகக் கணக்கிடப்படக்கூட முடியாத அளவுக்கு அவ்வளவு அதிகமாக இருந்தது. 

Nizam of Hyderabad


இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் உலகின் பெரிய பணக்காரராக ஆகாகான் விளங்கினார். முஸ்லிம்களில் இஸ்மாய்லியா என்னும் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களின்  தலைமை குருவாக விளங்குபவர் ஆகாகான்.  இஸ்மாய்லியாக்கள் இந்திய, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மிக மிகச் சிறுபான்மையினர். 
ஆனால்.....
பெரும் பணக்காரர்கள். 
இப்போது இருக்கும் ஆகாகானின் பாட்டனாராகிய மூன்றாம் ஆகா கான் நூறு கீலோவுக்கும் அதிகமான எடையுள்ளவராக இருந்தார். ரொம்ப காலம் உயிருடன் இருந்தார்.   அவருக்கு ஐம்பதாம் வயதில் நடந்த பொன்விழாவின்போது எடைக்கு எடை பொன் கொடுத்தார்கள். அறுபதாம் வயதில் வைர விழாவின்போது எடைக்கு எடை வைரங்களைக் கொடுத்தார்கள். எழுபதாம் வயதில் எடைக்கு எடை ப்லாட்டினம் கொடுத்தார்கள். அது தங்கத்தைவிட விலை மதிப்பு மிகுந்தது.

Agha Khan III


இப்போது உள்ள ஆகாகானிடம் எண்பது கோடிதான் இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் மிகவும் கீழே போய்விட்டார். இவரைவிட மு.க அழகிரி இன்னும் பெரிய பணக்காரர். 
மனோ பாலா சொல்லிக் கொடுத்ததுபோல, "எப்படி இருந்தவன்.... இப்பிடி ஆயிட்டன்.....!" என்ற கதைதான்.

2 comments:

  1. அருமையான செய்திகள் நிறைந்த பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லாம் திருமகளின் கடாட்சம்
    வரலாற்று வேங்கை டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete