Monday, 13 June 2011

மஹாத்மாவும் மதுரையும்

மதுரையின் சிறப்புகள் பலவுண்டு.

சில சிறப்புகள் கண்புறமாகப் போய்விட்டன. சில, மறக்கப்பட்டுவிட்டன. சிலவற்றை ஆட்கள் கவனிக்கவேயில்லை. 

1921-ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் செல்வோம். 

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்த மகாத்மா காந்தி, இந்தியாவுக்காக என்ன எப்படிச் செய்யவேண்டும் என்பதை இன்னும் சரியாக முடிவு செய்யாத நேரம். 

பிரிட்டிஷ்காரர்கள் முதலாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற காலம். யுத்தத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு முழுமனதுடன் உதவி செய்தால் சுயாட்சி சம்பந்தமாய் முடிவு செய்வதாகச் சொன்னவர்கள் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை. 

அப்போது மகாத்மா இந்தியாவை ரயில்வண்டியில் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டார்.  தமிழ்நாட்டை அடைந்தபோது ஏழை விவசாயி இடுப்பில் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேல் கட்டிக்கொண்டு உழுவதைப் பார்த்தார். மற்றவர்களும் அதே மாதிரி இருப்பதையும் கண்டார்.  இந்தக் காட்சி அவருடைய மனதில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

மதுரை வந்து சேர்ந்தார். 

21-09-1921.

மதுரையில் மேலமாசி வீதியில் உள்ள 251-A நம்பர் கொண்ட வீட்டில் தங்கியிருந்தார்.  ஏழை இந்தியர்கள் எப்படி உடுத்தியுள்ளனரோ அதே போல் தாமும் உடுத்தப்போவதாக அறிவித்தார்.  அறிவித்தவுடன் தம்முடைய சட்டை போன்றவற்றை நீக்கிவிட்டார்.  இடுப்பில் ஒரு வேட்டியை அணிந்துகொண்டார்.  இந்தக் கோலமே 'மகாத்மா என்றால் இப்படித்தான்; இவர்தான்', என்ற அழியா உருவத்தை அனைவரின் மனத்திலும் ஆழமாகப் பதித்துவிட்டது.  இந்த ஒற்றை ஆடைக் கோலமே பிற்காலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மகாத்மாவை 'Half-naked Fakir' - 'அரைநிர்வாணப் பக்கிரி' என்று குறிப்பிடச்செய்தது.  எல்லாம் ஆரம்பித்தது மதுரை மேலமாசி வீதி வீடு ஒன்றில்தான். 

1 comment:

  1. இளைய தலைமுறையினருக்கு நினைவு படுத்த வேண்டிய முக்கியமான செய்திகளில் இதுவும் ஒன்று ஐயா. நன்றி!

    ReplyDelete