Friday, 10 June 2011

இருதலைத் தீ

சிவவாக்கியர் என்னும் சித்தரைப் பற்றி தெரியவில்லையென்றாலும் அவர் பாடிய ஒரு பாடல் ரொம்பவும் பரிச்சயமாக இருக்கும். 

நட்டகல்லைத் தெய்வமென்றே நாலுபுட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொனமொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா
 நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
 சுட்டசட்டி சட்டுவம் கறிசுவையை அறியுமோ

இதுதான் அந்தப் பாடல்.

:-)
இதை வைத்து சிவவாக்கியர் நாத்திகர் என்றும் பொதுவாக சித்தர்களே நாத்திகர்கள்தாம் என்ற கருத்தும் பரவி விளங்குகிறது.  இது பரவ பெரிதும் முயன்றவர்கள் வைதீக பிராம்மணர்கள்.

சிவவாக்கியர் ஐந்நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்.  பல சுவடிகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தம் ஐந்நூற்றுப் பதினோரு பாடல்கள் தேறுகின்றன.  ஆனால் ஒரு சில சுவடிகளின்படி அவருடைய பெயரால் ஆயிரம் பாடல்கள் வழங்குகின்றன.  அந்த ஆயிரம் பாடல்களின் பார்த்தால் சிவவாக்கியர் சைவரா, வைஷ்ணவரா, அல்லது முஸ்லிமா என்ற சந்தேகம் ஏற்படும்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

அவருடைய ஒரு பாடல் இருக்கிறது - 

சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம்  எலாம் 
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் 
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே

'சிவாயவசி' என்பதும் பஞ்சாட்சரத்தின் மாறல்களின் நிரலில் வரும் ஒரு மந்திரம்.  அதை 'இருதலைத்தீ' என்கிறார் சிவவாக்கியர்.  அந்த மந்திரம் அக்கினியாக விளங்குவது. குண்டலினி என்பதுவும் அக்கினிதானே.

மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே 
என்று ஔவையாருடைய விநாயகர் அகவல் கூறுகிறது அல்லவா.

சிவாயவசி என்னும் மந்திரத்திற்கு இருதலைகள் உண்டு. முன்னும் பின்னுமாக இருதலைகள்
அந்த 'சி' என்னும் அட்சரம்தான் 'தலை' எனப்படுவது. 
திருமூலர் இதை 'நாயோட்டும் மந்திரம்' என்பார்.
அகத்தியரில் இருமுறை இந்த நாயோட்டும் மந்திரத்தை ஓட்டிப் பார்த்தாயிற்று.

ஆகம சங்கேத மொழியில் இந்த மந்திரத்தை 'இருதலை மாணிக்கம்' என்று குறிப்பிடுவார்கள்.

1 comment:

  1. இருதலைத்தீ அறிய முற்பட்டேன்..விளக்கம் அறிந்தேன். இதை இப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பது திருவருளின் சித்தம்..அதை உம்மால் அறிந்தது இன்னும் சிறப்பு

    ReplyDelete