Tuesday, 3 May 2011

செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு









இந்துக்கள் - குறிப்பாகத் தமிழ் இந்துக்கள் பயப்படும் விஷயங்களின் லிஸ்ட் பெரிசு. 

அந்தப் பய பட்டியலில் சனிக்கிரகம், ராகு காலம் முதலியவையும் அடங்கும்.  ராகு காலம் எல்லா நல்ல காரியங்களுக்கும் விலக்கு என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டுவிட்டோம்.  ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேட பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும். 

ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள்.  ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள்.  ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும். 

ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்லமுடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. 'ராகு கால துர்க்கா பூஜை' என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது.

இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் 'மங்கல சண்டிகா'. 

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது.  பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும் இதனைச் செய்வார்கள்.  இதற்கென பூஜா விதானம் இருக்கிறது.

ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை.  எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் புரட்டிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது 'மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்' என்னும்  வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள். 
'மங்கலன்' என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவேதான் 'மங்கல சண்டிகா' என்ற பெயர். 

செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறும்.  ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள். 

மங்கல சண்டிகை ஸ்தோத்திரத்தை அடுத்த மடலில் காணலாம்.

1 comment:

  1. ஐயா.. இப்பூசை எப்போதிலிருந்து வழக்கில் உள்ளது என அறியலாமா?

    ReplyDelete