Thursday, 28 April 2011

மஞ்சள், குங்குமம்

மஞ்சள்
ஸ்ரீதேவியின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற மங்கலகரமான பொருள்களில் மஞ்சளும் ஒன்று. மஞ்சளின் மங்கலத்தன்மையைப் பற்றி நிறைய எழுதலாம்.  முகத்தில் மஞ்சள் பூசுதல், மஞ்சள் துணியை அணிதல், மஞ்சள் நீரில் குளித்தல் முதலியவை மங்கலகரமான தெய்வீகத்தன்மை பொருந்திய காரியங்களாகப் பழைய நூல்கள் கருதுகின்றன. 
அம்பிகையின் வழிபாட்டில் மஞ்சள் முக்கியமானது. சுமங்கலிகளின் சுமங்கலத் தன்மையின் சின்னமாகவும் மஞ்சளே திகழ்கின்றது.

திருமணம் பரியும் போது மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடுகின்றனர். அவசரக் கோலக் கல்யாணத்தில் மஞ்சள் கயிற்றில் வெறும் மஞ்சளைக் கோத்து அணிவிப்பதும் அங்கீகரிக்கப்பட்டதொரு வழக்கமாகும். ஏழ்மையில் உழலும் சுமங்கலிகள் மஞ்சள் கயிற்றில் மஞ்சளைத் தாலியாகப் பூண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கு அசைக்க முடியாத சான்று பகரும் அடையாளச் சின்னங்கள் மஞ்சள் கயிறும் மஞ்சளும்.

நெல்லைக் கையால் தேய்த்து உமி நீக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் அரிசியின் முனை உடைந்திருக்காது.  இப்படிப்பட்ட முனைமுறியாத அரிசியில் மஞ்சள் பொடியை நீரிட்டுப் பிசைந்து சேர்த்து செய்யப்படுவதே அட்சதை எனப்படுவது.  ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் தாங்கி வழங்கும் சாதனமாக அட்சதை விளங்குகிறது.  பூஜையின்போது மலர்கள் இல்லாமல் போனால் மலர்களுக்குப் பதில் அட்சதையை வைத்தும் பூஜையைச் செய்வதுண்டு.

மஞ்சளைக் காப்பாக மணிக்கட்டில் அணிந்து கொள்வது சில நிகழ்ச்சிகளில் காணப்படும். இதுதான் மஞ்சள் காப்பு எனப்படும்.  இப்போதெல்லாம் மஞ்சள்கிழங்கைக் கட்டாமல் வெறும் மஞ்சள் நூல் அல்லது கயிறைக் கட்டுகிறார்கள்.  

மங்கலகரமான நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ், புதுக்கணக்கின் ஏடு முதலியவைகளில் மஞ்சள் தடவுகிறோம்.  மஞ்சள் பொடியில் தண்ணீர் கலந்து பிள்ளையார் பிடித்து அர்ச்சனை செய்கிறோம்.  வழிபாட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சளால் ஆன தற்காலிகமான உருவங்களை ஹரித்ரா பிம்பம் என்பார்கள். மஞ்சளாம் பிடித்துவைத்த பிள்ளையாரும் இந்த வகைதான்.

ஸ்ரீதேவியின் அடையாளமாக வலது பக்கமாகச் சுழன்றிருக்கும் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து வழிபாட்டில் பயன்படுத்துவது உண்டு.  மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி ஆகியோர் அணிந்திருக்கும் ஆடையை பீதாம்பரம் என்பார்கள். 

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு சில தியான சுலோகங்கள் இருக்கின்றன.  ஒரு ஜபத்துக்கு முன்னர் ஜபத்துக்குரிய தெய்வத்தை மனதில் ஆவாஹணம் செய்துகொள்ளவேண்டும். ஆவாஹணம் என்றால் மனதிற்குள்ளே எழுந்தருளப் பண்ணிக்கொள்ள வேண்டும். அந்த ஆவாஹணத்துக்கு உதவி செய்யக்கூடியது தியான சுலோகம். சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உருவத்தை மனத்திரையில் உருவகப்படுத்தி ஏற்றிவைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இது உதவும்.  ஸ்ரீலலிதாவுக்கு உரிய தியான சுலோகங்களில் ஒன்று இப்படி வரும்:

த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் 
பத்மபத்ராயதாக்ஷ£ம் 
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித ஹேமபத்மாம் வராங்கீம்....

பீதவஸ்த்ரம் என்பது பீதாம்பரம்தான். பீதாம்பரம் என்பது பொன்னால் ஆன ஆடை அல்லது பொன்னிற ஆடையைக் குறிக்கும். அல்லது மஞ்சள் நிற ஆடையையும் குறிக்கும்.  மந்திர சாஸ்திரத்திலும் மஞ்சள் நிறையப் பயன்படுத்தப்படுகிறது. 

அடுத்தாற்போல் சில அபூர்வமான விஷயங்கள்.......

குங்குமம்
மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூ¡¢ மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும் சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள் கடுதாசி, மஞ்சள் பத்திரிக்கை முதலியவற்றைக் கூறினேன்.

மஞ்சள் பொடியில் அர்ச்சனை செய்வதும் உண்டு.  ஹரித்ரா சூர்ணம் என்பதே மஞ்சள் பொடி. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதை ஹரித்ரா குங்குமம் என்று கூறுகின்றோம்.    உண்மையிலேயே குங்குமம் என்பது ஆரம்பகாலத்தில் குங்குமப்பூவைக் குறித்தது.    குங்குமப்பூ என்பது ஒரு தனிப் பொருள். இதைக் கடைகளில் வாங்கலாம். மெல்லிய இழைகளாக - குங்கும வர்ணத்தில் கிடைக்கு. மெல்லிய-ஆனால் நீண்ட தூரம் பரவும் நறுமணம் உடையது. இது ஒருவகைச் செடியின் மலரின் காயவைக்கப்பட்ட மகரந்தக் காம்புகள். காஷ்மீர், துருக்கி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 

"குங்குமப்பூவே! கொஞ்சும் புறாவே!" என்று பாடல் சிறப்புப் பெற்ற குங்குமப்பூ இதுதான்.
மிகவும் கிராக்கியான பொருள். 
ஆகவே  அதிகக் கலப்படத்துக்கு ஆளாகிறது. 
தேங்காய்ப்பூவின் கலரைச் சேர்த்து குங்கும எஸென்ஸைச் சேர்த்து அதைக் குங்குமப்பூ என்று விற்பார்கள்.
'எடைக்கு எடைத் தங்கம்' என்பார்கள். அது குங்குமப்பூவுக்குப் பொருந்தும். 

குங்குமப்பூவைப் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பன்னீருடன் உரசுகல்லில் உரசி எடுப்பார்கள். இதுதான் குங்குமப்பூச்சு; அல்லது குங்குமக்குழம்பு.    இதைத்தான் அம்பிகைக்குத் திலகமாக இட்டு, பூச்சாகவும் பூசுவது.  பழங்காலத்தில் வசதி மிக்க அரச வர்க்கத்துப் பெண்கள், பணக்காரப் பெண்கள் முதலியோர் குங்குமப் பூச்சு, குழம்பு ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். 

குங்குமம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் 'ஹரித்ரா குங்குமம்' என்பது குண்டு மஞ்சள், எலுமிச்சைச் சாறு, சீனாக்காரம், படிக்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றிலிருந்து செய்யப்படும்.    வைணவர்கள் ஸ்ரீசூர்ணம் என்னும் பொடியை நாமமாக அணிந்து கொள்கிறார்கள்.

2 comments:

  1. ஓம்
    அன்பார்ந்த ஐயா வணக்கம். குங்குமத்தின் பெருமைகளைக் கூறும் குங்கும பஞ்சதசி பாடல்கள் இந்தச் சுட்டியில் உள்ளன.
    http://dl.dropbox.com/u/26201334/kunguma%20pancha%20dasi.rtf
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    ReplyDelete
  2. KUNGUMA PANCHA Dasi





    குங்கும பஞ்சதசி

    குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
    குங்குமமாவது குடியினைக் காப்பது
    குங்குமமாவது குணமத ளிப்பது
    குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே............(1)

    விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
    நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
    பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
    கதிகளை ஆள்வதும் குங்குமமாமே....................(2)

    தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
    பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
    அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
    காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே...................(3)

    நற்பதமீவது நாரணீ குங்குமம்
    பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
    சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
    கற்பினைக் காப்பதும் குங்குமமாமே....................(4)

    செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
    கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
    ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
    காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே....................(5)

    நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
    பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
    சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
    தாயினை அர்ச்சித்த குங்குமமாமே.......................(6)

    சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
    பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
    முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
    சித்தி தருவதும் குங்குமமாமே................................(7)

    நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
    செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
    வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
    மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே.........................(8)

    சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
    சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
    தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
    பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே...........................(9)

    எவையெவை கருதிடின் அவையவை யீவதும்
    நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
    குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
    குவிநிதி யீவதும் குங்குமமாமே...............................(10)

    அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
    இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
    கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
    சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே....................(11)

    குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
    நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
    எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
    கிட்டவே செய்வதும் குங்குமமாமே.........................(12)

    பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
    விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
    பட்டான பார்வதி பாதம் பணிந்தே
    இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே.....................(13)

    சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
    எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
    நித்தம் தொழும் அன்னை குங்குமம்
    நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே................(14)

    மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
    செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
    கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்
    பஞ்ச நிதிதரும் குங்குமமாமே................................(15)

    ......................... சுபம் ..............

    ReplyDelete