திருக்கோளிலி திருப்பதிகம் கோள்களால், ஜாதகத்தில் ஏற்படும்
கோளாறுகளைப் போக்குவதற்காகப் படிக்கப்படவேண்டிய பதிகம் என்பது ஐதீகம்.
ஆனால் அந்தப் பதிகத்தைப் பார்த்தால் ஜாதகக் கோளாறுகளுக்காக மட்டுமே படிக்கவேண்டியதாக இருப்பதுபோல் தோன்றவில்லை.
அந்த பெயரே 'கோளிலி' என்று இருக்கிறது - 'கோள் இலி'.
கோள் என்பது கேடு, தீயது, இடையூறு, இடர் முதலியவற்றையும்
குறிக்கும். கோள் என்றால் கிரகம் மட்டுமில்லையே.
இப்போது அந்தப் பதிகத்தைப் பார்ப்போம்.
பின்னர் அதன் பொருளைச் சற்று உற்றுக் கவனிப்போம்.
ஆனால் ஒன்று......
இந்தப் பதிகம் வேண்டுகோள் திருப்பதிகங்கள் என்னும் விசேஷப்
பிரிவுக்குள் இடம் பெறுகிறது.
வல்லபமானது; ஆற்றலுடையது; சக்தி வாய்ந்தது; பலன் கொடுக்க வல்லது.
திருக்கோளிலி திருப்பதிகம்
பழந்தக்க ராகம்
1-ஆம் திருமுறை
திருஞானசம்பந்தர்
திருச்சிற்றம்பலம்
நாளாயபோகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடா திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே
ஆடரவத் தழகாமை அணிகேழல் கொம்பார்த்த
தோடரவத் தொரு காதன் துணை மலர் நற்சேவடிக்கே
பாடரவத் திசை பயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்கும் அவன் கோளிலியெம் பெருமானே
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெயல் உற்றவன் தன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலியெம் பெருமானே
வந்தமணலால் இலிங்கம் மண்ணியின் கட்பாலாட்டும்
சிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளி
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும் நற்பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சு கிளி மஞ்சுணவுங் கோளிலியெம் பெருமானே
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்கும் அவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே
கல்நவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயிலுளான்
மின்நவிலும் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே
அந்தரத்தில் தேரூரும் அரக்கன் மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறை பாட வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிசென்னிக் கோளிலியெம் பெருமானே
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணு எனையாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல் இளம் பிறை சென்னிக் கோளிலியெம் பெருமானே
தடுக்கமரும் சமணரோடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகந் நண்ணலுமாம் அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலியெம் பெருமானே
நம்பனை நல் அடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண்
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே
திருச்சிற்றம்பலம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
tamil meaning
ReplyDeletehttp://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=109&pno=732