திருவுக்கு உரிய திருநாள்
சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
1991-ஆம் ஆண்டு மயில் தீபாவளி இதழில் தீபாவளியைப் பற்றி எழுதச்
சொல்லியிருந்தார்கள். அப்போது எழுதிய கட்டுரையில் தீபாவளிக்கும் சமண சமயத்துக்கும் இடையே இருந்த தொடர்பைப் பற்றி எழுதி யிருந்தேன்.
நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததை தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்கு¡¢ய கதை 'காளிகா புராணம் என்னும் உபபுராணத்தில் உபகதையாகக் காணப்படுகிறது.
கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாகத் தீபாவளி முழுக்க முழுக்க இருந்ததால் இது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற விஷ்ணுவுக்குரிய திருநாட்களைப் போன்றுதான் தீபாவளியும் ஒரு வைஷ்ணவ அசுர சம்ஹாரக் கொண்டாட்டத் திருநாளாகக் கருதப் பட்டிருக்கும். விஷ்ணு சம்பந்தப்பட்ட மற்ற திருநாட்களைக் கொண்டாட அறவே விரும்பாத தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கி
யிருப்பார்கள் அல்லவா? ஆனால் சைவர்களும் தீபாவளியைக்
கொண்டாடுகிறார்கள்.
ஆகவே நரகாசுரன் கதை ஒரு சிறுபான்மையினரால் சொல்லப்பட்டுவந்த கட்டுக்கதை
நவராத்திரியைத் தவிர்த்து இந்தியர்கள் அனைவராலுமே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருநாள் தீபாவளிதான். வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையைத் தென்னகத்தில் கொண்டாடுவதில்லை. தமிழகத்தின் பொங்கல் மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படுவதில்லை. கேரளத்தின் ஓணம் மற்ற இடங்களில் கிடையாது. ஆனால் தீபாவளி எல்லா பிரதேசங்களிலும் எல்லா இன ஹிந்துக்களாலும் கொண்டாடப் படுகிறது. சமண மதத்தைச் சேர்ந்தவர்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அதற்கு உரிய காரணம்தான் வேறு.
ஒவ்வொர் இடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொள்கிறார்கள்.
மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதை நினைவுறும் வண்ணம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.
அதாவது மஹாலட்சுமியின் பிறந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் ஸ்ரீராமர் காட்டிலிருந்து திரும்பி வந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வோர் இடத்தில் மஹாலட்சுமி
அவதரிப்பாள்.
அடாடா, மன்வந்தரம் என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டு
விடலாமா, என்ன?
நாம் இருக்கும் கால கட்டத்தைக் கலியுகம் என்று அழைப்பார்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதற்கு முன் மூன்று வேறு யுகங்கள் இருந்தன. கிருதம், திருதம், துவாபரம் என்ற மூன்று யுகங்கள் . இவை நான்கினையும் சேர்த்துச் சதுர்யுகம் என்று கூறுவார்கள்.
மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் ஒரு சதுர்யுகத்தில் இருக்கும். இந்தச் சதுர்யுகங்கள் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறு 72 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். 31 கோடி
10 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.
இவ்வாறு 14 மன்வந்திரங்கள் தோன்றி மறைந்தால் அது ஒரு கல்ப
காலமாகும். மனித ஆண்டுகள் 4354560000. இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இதன் பின் ஒரு கல்ப காலத்துக்கு - இன்னொரு 4354560000 ஆண்டுகளுக்கு ஒரு மகா பிரளய காலம் நிலவும். இது பிரம்மாவின் இரவு. இவை இரண்டும் சேர்ந்தால் பிரம்மாவுக்கு ஒரு நாள்.
அதாவது 8709120000 மனித ஆண்டுகள்.
இவ்வாறு நூறாண்டுகள் - அதாவது 360000 நாட்கள் கொண்டதே
பிரம்மாவின் ஆயுள். (கால்குலேட்டர் வைத்திருக்கிறீர்களா? அப்படி யானால் நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்)
3135283200000000 மனித ஆண்டுகள்.
நாம் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்வந்தரத்தை வைவஸ்வத மன்வந்திரம் என்றழைப்பார்கள். விவஸ்வான் என்னும் பெயர் கொண்ட
சூரியதேவனின் மகனாகிய வைவஸ்வதன் என்னும் மனுவின் வழித்
தோன்றல்கள்தான் இந்த மன்வந்தரத்தில் மனித இனமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகிய நாம். ஆம், சூரியனிலிருந்து தோன்றியவர்கள்தாம் நாம். அப்படித்தானே விஞ்ஞான ஆராய்ச்சியும் கூடக் கூறுகிறது?
சூரியனின் பன்னிரண்டு அம்சத்தினர் இருக்கின்றனர். துவாதச ஆதித்யர் என்று குறிப்பிடப்படுவார்கள்.
அதில் ஒருவர்தான் விவஸ்வான்.
இதற்கு முன்னுள்ள மன்வந்தரங்களில் தாமரை, வில்வம், பூமி போன்ற இடங்களில் மகாலட்சுமி தோன்றினாள். இந்த மன்வந்தரத்தில் - வைவஸ்வத மன்வந்தரத்தில் பாற்கடலில் தோன்றினாள்.
தூர்வாசர் என்னும் கோபக்கார முனிவர் இருந்தார். அவர் பெருந்தவம் செய்து பெற்ற ஒரு மாலையை தேவர்களின் அதிபதியாகிய தேவேந்திரனிடம் கொடுக்க வந்தார். அப்போது தேவேந்திரன் தன்னுடைய தெய்வீக யானையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். தூர்வாசர் நீட்டிய மாலையை, அவன் யானையை விட்டு கீழே இறங்கி, ரிஷியின் காலில் விழுந்து வணங்கி, அதன் பின்னர் பௌவ்யமாக வாங்கியிருக்கவேண்டும். ஆனால் அவன் யானையின்
மீதிருந்த வாக்கில் தன்னுடைய வஜ்ராயுதத்தை நீட்டி, அதன் மூலம் மாலையை இழுத்து வாங்கிக்கொண்டான். அந்த மாலையை மிகவும் அலட்சியமாக யானையின் தலையின் மீது வைத்தான். அந்த யானை அந்த மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துத் தரையில் வீசி அதை மிதித்து நாசப்படுத்தி விட்டது.
இதனால் பெருங்கோபம் கொண்ட தூர்வாசர் தேவேந்திரனுக்குச் செருக்கைக் கொடுத்த செல்வங்கள் அழியுமாறும் அவனிடமிருந்து ஸ்ரீலட்சுமி நீங்குமாறும் சாபமிட்டார். தூர்வாசருடைய சாபத்தினால் தேவேந்திரனிடமிருந்து லட்சுமி நீங்கினாள்.
அதனால் அவனுடைய செல்வமும் மற்றவர்களின் செல்வமும் அறவே மறைந்தன.
ஆகவே உலகெங்கும் சிறப்புக் குன்றியது.
மீண்டும் லட்சுமியைத் தோன்றச் செய்ய தேவர்கள் ஆலோசித்தனர்.
பாற்கடலில்தான் ஸ்ரீதேவி தோன்றுவாள் என்பதைக் கண்டறிந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். தங்களுடன் அசுரர்களையும் சேர்த்துக்கொண்டனர்.
மந்திர மலை என்பதனை மத்தாகவும் வாசுகி என்னும் மகா நாகத்தைக்
கயிறாகவும் வைத்துக் கடைந்தனர். அஷ்டநாகம் என்னும் குழுவைச்
சேர்ந்தது வாசுகி. அஷ்டகுல பர்வதம் என்னும் மலைக் குழுவைச் சேர்ந்தது மந்திரமலை.
வாசுகியின் உடலின் தலைப்பாதியை அசுரர்கள் பிடித்துக்கொண்டனர்.
மறு பகுதியை தேவர்கள் பிடித்துக்கொண்டனர்.
டக்-ஆ·ப்-வார் என்னும் இழுவைப்போட்டியில் அன்கோர் மேன் Anchor-Man என்னும் பலசாலியான ஆட்கள் கயிற்றின் இருமுனைகளிலும் இருப்பார்கள்.
வாசுகி விஷயத்திலும் அப்படித்தான்.
தலைப் பகுதியில் அசுரர்களுக்குத் துணையாக கார்த்தவீர்ய அர்ஜுனன் என்னும் அரசன் இருந்தான். அவனுக்கு ஆயிரம் கைகள். மஹாவிஷ்ணுவின் சக்கராயுதத்தின் அம்சமாகப் பிறந்தவன். பரசுராமரால் கொல்லப்பட்டவன். ராவணனை வென்ற இருவரில் ஒருவன்.
<picture K arjuna>
வால் பகுதியின் நுனியில் வானர குலத்தின் அரசனாகிய வாலி இருந்தான். தேவேந்திரனின் மகன். ராமரால் கொல்லப்பட்டவன். ராவணனை வென்ற இருவரில் இன்னொருவன்.
<vali>
கனத்தால் மலை கடலில் அமுங்கியது. ஆமை வடிவெடுத்து மஹா விஷ்ணு கீழிருந்து மலையை முதுகால் தாங்கி நிலைநிறுத்தினார்.
<picture-kurmam>
கடலிலிருந்து முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவன்
விழுங்கித் தொண்டையில் அடக்கி அழகாகத் திருநீலகண்டனாக விளங்கினார்.
அதன் பின்னர் ஜேஷ்டை என்னும் மூத்த தேவி தோன்றினாள். இவளுக்குப் பின்னால் ஸ்ரீதேவி எனப்படும் ஆதிலட்சுமி தோன்றினாள். அதன் பிறகு உச்சைசிரவஸ் என்னும் குதிரை, அமிர்தம், ஐராவதம் என்னும் தெய்வீக யானை, காமதேனு என்னும் பசு, கற்பக விருட்சம், சிந்தாமணி போன்றவை தன்வந்திரியுடன் தோன்றின.
<pictures-gajalakshmi >
ஆதிலட்சுமி விஷ்ணுவை அடைந்தாள். அவள் அஷ்டலட்சுமியாகவும்
காட்சிதந்து பலவகையான செல்வங்களை உலகிற்கு வழங்கினாள்.
இதை முன்னிட்டு தீபத்தை ஏற்றி வைத்து லட்சுமியின் வருகையைக்
கொண்டாடினார்கள்.
தீபாவளிக்கு முன்னால் உள்ள மூன்று நாட்களுக்குப் பாதாள
லோகத்திலிருந்து பூமிக்கு வருகை புரியும் அரக்கர்களும் தீய சக்திகளும்
மஹாபலி எனும் அசுர அரசனின் தலைமையில் பூமியில் ஆதிக்கம் செலுத்த முனைவார்கள். அப்போது லட்சுமியின் மூத்த சகோதரியாகிய
ஜேஷ்டாதேவியின் ஆதிக்கமும் தோன்றும். அவர்களை லட்சுமியின்
துணையோடு தீபங்களின் உதவியால் இருளகற்றி வாணங்கள், பட்டாசு, வெடிகள் முதலியவைகளைக் கொளுத்தி அந்த தீயசக்திகளை விரட்டி
அடிப்பார்கள். அலட்சுமியாகிய மூத்த தேவியின் ஆதிக்கமும் அகன்று விடும்.
மஹாபலியை மீண்டும் பாதாள லோகத்திற்கு அனுப்பிய பின் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடுவார்;கள். சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள்.
ஒரிஸா போன்ற இடங்களில் உள்ளவர்கள் வீட்டிற்கு வெளியில் சேர்த்து வைத்திருக்கும் மாட்டுச் சாணக் குவியலை வணங்குவார்கள். வயலுக்கு எருவாகப் பயன்படுத்தப்படுத்தும் மாட்டுச் சாண எருக் குவியல், சேறு சகதி போன்றவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக அக்கால மக்கள் நம்பினார்கள். இக்கருத்து வேதகாலத்திலேயே இருந்தது - லட்சுமியின் மானஸ புத்திரராகிய கர்தமர் என்னும் பிரஜாபதி சகதியில்தான் லட்சுமியின் நிழலில் தோன்றியதாகக் காணப்படுகிறது.
'கர்தமேன ப்ரஜாபூரா மயி சம்பவ கர்தம' என்ற ஸ்ரீசூக்தத்தின் வாசகத்தால் இதை அறியலாம்.
லட்சுமி உறையும் இடங்களில் தாமரையும் ஒன்று. லட்சுமிக்கேகூட 'கமலா', 'பத்மா' என்றெல்லாம் தாமரையைக் குறிக்கக் கூடிய பெயர்கள்
உண்டு. தாமரையும் சகதியில்தானே தோன்றுகின்றது?
வண்டல், சேறு, சகதி, எருக்குவியல் போன்றவை விவசாயத்தின்
ஆதாரமான விஷயங்கள். 'சோழநாடு சோறுடைத்து' என்று ஒளவையார்
பாடியதற்கு அடிப்படையாக அமைந்ததே காவிரியின் நீர்வளமும் அது
கொண்டு வந்து சேர்க்கும் சகதியும்தானே?
ஸ்ரீசூக்தம் என்பது ஸ்ரீதேவிக்கு¡¢ய சிறந்த மந்திரநூல். அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் காணப்படுகிறது. 15 ஸ்லோகங்களைக் கொண்டது. ஆற்றல் மிகப் படைத்தது. அதன் பெயரைச் சொல்லியே பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வளவு ஆற்றல் படைத்தது!
தீபாவளியை விவசாயிகளைவிட வணிகர்களே மிகவும் செலவழித்து மிக மிக விமரிசையாகக் கொண்டாடினர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால்தான் தீபாவளிப் பண்டிகை இவ்வளவு பிரபலத்தை அடைந்துள்ளது.
மூதேவியின் தாக்கத்தைப் போக்கி ஸ்ரீதேவியின் செல்வாக்கைப் பெறுவதற்காக திருவின் திருநாளாகிய தீபாவளியின்போது நல்லதைச்
சிந்தித்து நல்லதைச் செய்து திருவை வணங்கி வரவேற்போம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment