Thursday, 12 July 2012

UNEXPECTED CHALLENGE



எதிர்பாரா எதிர்ப்பு

கட்டபொம்முவின் மூதாதையரில் ஒருவர் வேட்டைக்குச் சென்றிருந்த 
இடத்தில் அவருடைய வேட்டை நாய்கள் ஒரு முயலைத் துரத்தினவாம். 
ஓரிடத்திற்கு வந்த பின்னர், அந்த சிறு முயல் திரும்பிப் பாய்ந்து வேட்டை 
நாய்களை எதிர்த்ததாம். இதைப் பார்த்த அந்த ஆதி கட்டபொம்மு அந்த 
இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினாராம். அப்படித்தான் பாஞ்சாலங்குரிச்சிக் கோட்டை ஏற்பட்டது என்பார்கள். 
இதே மாதிரியான கதை ஒன்று மலாயா வரலாற்றிலும் இருக்கிறது.
பரமேஸ்வரா என்பவர் சுமாத்ராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கிருந்து ஓடி வந்து சிங்கப்பூர் மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். 
சிங்கப்பூர் மன்னரைக் கொன்றுவிட்டு தாமே மன்னராகினார். சிங்கப்பூர் மன்னரின் பங்காளியாகிய லங்க்காசோக்கா நாட்டு மன்னர் ஒரு கடற்படையைச் சித்தப்படுத்திக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி வந்தார். 
பரமேஸ்வரா சிங்கப்பூரை விட்டு ஓடினார். மூவார் என்னும் இடத்தில் தம்முடைய கூட்டத்தினர், படையினருடன் தங்கினார். 
ஆனால் அந்த இடம் பாதுகாப்பாக இல்லாததால் வேற்றிடம் தேடிப் போனார். 
ஓரிடத்தில் அவருடைய ஏழு வேட்டைநாய்கள் ஒரு ஸாங்காச்சில் என்னும் குறுமானை விரட்டின. ஒரு நெல்லி மரத்தின் அடியில் வந்ததும் அந்த குறுமான் 
திடீரென்று திரும்பி ஏழு வேட்டை நாய்களையும் எதிர்த்து விரட்டியது. 
அதைப் பார்த்த பரமேஸ்வரா அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு தம் ராஜதானியை உருவாக்கிக் கொண்டார். நெல்லிமரத்தின் அடியில் நடந்த சம்பவத்தால் அந்த கோட்டைக்கும் நெல்லி மரத்தின் பெயராகிய 'மலாக்கா' என்னும் பெயரை இட்டார்.


ஓர் உண்மைச்சம்பவம்.......


பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு டாக்டர் இருந்தார். 


பெயர் டேவிட் லிவிங்ஸ்டன். 
அவர் சமயத் தொண்டு ஆற்றவேண்டும் என்று எண்ணியதால் ஒரு 
மிஷனரியாக சங்கல்பம் மேற்கொண்டு, ஆப்·ரிக்காவின் காடுகளுக்குள் 
சென்றுவிட்டார். 
ஆ·ப்ரிக்கக் காடுகளின் மத்தியப் பகுதிக்குள் - நடுக்காட்டுக்குள் 
சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்பது அவரது 
நோக்கம். அத்துடன் நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது என்பதையும் 
கண்டறியவேண்டும் என்று எண்ணியிருந்தார். அவர் காட்டுக்குள் மறைந்தது மறைந்ததேதான்.


ரொம்பநாட்கள் ஆகிவிட்டன. 
அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமலிருந்தது. 
இங்கிலாந்தில் அவரைத் தேடிச் செல்ல யாரையாவது அனுப்பவேண்டும் 
என்று முடிவாயிற்று. 
ஹென்ரி ஸ்டான்லி என்பவர் ஒரு பத்திரிக்கையாளர். நியூயார்க் 
ஹெரால்ட் பத்திரிக்கையில் விசேஷ நிருபரக இருந்தார். 
லிவிங்ஸ்டோனைத் தேடுவதற்கு ஸ்டான்லியை நியூயார்க் ஹெரால்ட் 
பத்திரிக்கை அனுப்பியது.
அவர் தற்கால தான்ஸேனியா நாட்டுக்குச் சென்று அங்கிருந்து 
தங்கன்யீக்கா ஏரியை நோக்கிச் சென்றார். காட்டுக்குள்தான். 
ஏனெனில் அந்த வட்டாரத்தில்தான் லிவிங்ஸ்டன் கடைசியாகக் 
காணப்பட்டதாகத் தகவல். 
அங்கிருந்து அப்படியே காங்கோ காடுகளுக்குள் நுழைந்துவிட்டார்.
ஆங்காங்கிருந்த காட்டுவாசிகளிடம் விசாரித்துக்கொண்டே 
சென்றார்.
கடைசியில் ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு குடிசையில் லிவிங்ஸ்டன் 
இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 


அந்த குக்கிராமத்துக்குச் சென்றார்.


குடிசைக்கு அருகில் ஸ்டான்லி வந்ததும் லிவிங்ஸ்டன் வெளியில் 
வந்தார்.


அவரைப் பார்த்ததும் ஸ்டான்லி தன் வலக்கையை நீட்டி, "டாக்டர் 
லிவிலிங்ஸ்டன் என்று நினைக்கிறேன்?"(Dr. Livingstone, I presume?") 


அவருடைய கையைப் பிடித்தவாறு, "ஆம், ஆம்' நீங்கள் வந்தது 
குறித்து கடவுளுக்கு நன்றி"(Yes. Yes. Thank God you have come.")


மிகவும் நோயால் நலிவுற்றிருந்தார். சரியான ஆகாரமும் கிடையாது. 


போதாததற்கு ஒரு சிங்கம் அவரைத் தாக்கித் தோள்பட்டையைக் 
கௌவியதில் அவருடைய ஒரு கை செயலற்றுத் தொங்கிப்போயிருந்தது.


கொஞ்ச காலம் லிவிங்ஸ்டனுடன் ஸ்டான்லி இருந்தார். 


இருவரும் ஒரு நாள் ஓரிடத்தில் காற்று வாங்கியவாறு அமர்ந்திருந்தபோது இரண்டு மூன்று சிங்கங்கள் அங்கு வந்து விட்டன. அவை மிகவும் அருகில் வந்து இவர்களின்மீது பாயப்போகும்போது லிவிங்ஸ்டோன் தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரே கையால் ஓங்கிச் சுழற்றியவாறு பெரும் கூச்சலிட்டவாறு 
சிங்கங்களை நோக்கி ஓடினார். 
அந்த சிங்கங்கள் நிதானித்தன. 
பின்னர் எல்லாமே தலை தெரிக்க ஓடிவிட்டன. 


அவை எதிர்பார்த்திருக்க முடியாதல்லவா. தன்னுடைய இயற்கையான உணவுப்பொருள் தன்னையே விரட்டுகிறதே. 
அதான் ஓடிவிட்டன. 


அதேபோல்தான். 


சிறுமுயல் தங்களை எதிர்த்து நிற்பதை எதிர்பாராத வேட்டைநாய்கள் 
ஓடியிருக்கின்றன. 
சாங்காஞ்ச்சில் கதையும் அதே மாதிரிதான்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. மிகவும் சுவையானதும், சிந்திக்கத்தூண்டுவதுமான கட்டுரை! முதல் கதைதான் (கட்டபொம்மு) நான் ஏற்கெனவே அறிந்தது. ”driven to the wall" என்று சொல்கிறார்களே அது போல், தப்பிக்க வழி இல்லாமற் போகும் போது, கடைசி முயற்சியாக முழுப் பலத்துடன் செயல் படும் குணம் தெரிகிறது.

    ReplyDelete