Monday, 9 January 2012

READING YAVANARANI




 களவியல் - யவனராணி 



         ஒரு காலத்தில் "எப்படா குமுதம் பத்திரிக்கை வரும்? 'யவனராணி' படிக்கலாம்? என்ற ஆவலோடு காத்திருந்ததுண்டு. அதைப் படித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் அதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் டிஸ்கஷன் வைத்துப்பேசிக்கொண்டிருப்போம். கிட்டத்தட்ட 40 % மாணவர்கள் படித்திருப்பார்கள். 
அரட்டைகளின் மையக்கருத்துக்களில் ஒன்றாக யவனராணி விளங்கியது. பொதுவாகவே சாண்டில்யன் கதைகளை இளைஞர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள். For obvious reasons.
     
மாணவர்களில் சிலருக்கு யவனராணி பாத்திரங்களில் பெயரைக் கொடுத்திருந்தோம். ஈஸ்வரமூர்த்தி என்பவரை இலி ஆஸு என்று அழைத்தோம். இலி ஆஸு என்பவன் சாம்பிராணி நாட்டு அரசன். அகப்பட்டவர்களையெல்லாம் பிடித்து, கை அல்லது காலை வெட்டி, சாம்பிராணி மரக் காடுகளுக்கு அடிமை வேலைக்கு அனுப்பியவன். குமுதத்தில் வந்த யவனராணி நாவலின் படத்தில் கண்டஇலிஆஸு உருவத்தைப் போலவே ஈஸ்வரமூர்த்தி இருந்தார்.

அந்தக் காலத்தில் குமுதம் வியாழன், வெள்ளி, ஏதோ ஒரு நாளில் வெளிவரும். வார இறுதிக்குச் சரியாக இருக்கும். 
ஆனால் யார் அந்த மாதிரி காத்திருந்தார்? உடனேயே படித்து விட்டுத் தான் மறுவேலை. 
நோட்ஸ¤க்குள் வைத்துக்கொண்டு பேத்தாலஜி லெக்சர் கிலாஸில் வைத்துப் படிப்பவர்கள் இருந்தார்கள். 
குமுதம், ஆனந்தவிகடன் படிப்பதற்கென்று சில பாடங்களின் லெக்சர் கிலாஸ்கள் இருந்தன. 
மதுரை மருத்துக்கல்லூரி லெக்சர் ரூம்கள் ஒரு வசதியைக் கொண்டிருந்தன. படிப்படியாக உயரமாக அதன் டெஸ்க் இருக்கைகள் அமைந்திருக்கும். கடைசி டெஸ்க் தூரத்தில் இருக்கும். அதன் அருகே இன்னொரு கதவு இருக்கும். அது எப்போதும் திறந்தே கிடக்கும். யாராவது கதவைக் கழற்றிவிட்டிருப்பார்கள்.
"அல்ல்ல்ல்ல்..... வெவரமான பயடா நீ......!" என்று அந்தக் காலத்து மதுரை மருத்துவக் கல்லூரி குழூஉக்குறியில் பாராட்டப்பட்ட எவனாவது ஒரு 'வெவரமான பய' அந்தத் தர்மக் கைங்கர்யத்தைச் செய்திருப்பான். 
குமுதம் படிப்போர் சங்கம் எப்போதும் அந்தக் கடைசி டெஸ்க்கின் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும். ஓடிப்போவோர் சங்கம் டெஸ்க்கின் ஓரங்களில் இருக்கும். 
"ஏம்ம்ப்பூஊ..... இப்ப்டி மறச்சு மறச்சு வச்சு யவனராணியப் படிக்கிறியே.... அதோட த்ரில் விட்டுப் போயிராதோ?" என்று கேட்டால்.......
"தோ பார். அதுலதான் திரில்லே இருக்குல்ல. கையில பென்ஸில வச்சுக்கிட்டு அதோட மேல் நுனிய மட்டும் அசயிற மாரி சுத்திக்கிட்டே குமுதத்தப் படிப்பம்ல. எவனும் கண்டுக்க மாட்டான்ல. நாம சொல்றத ரொம்ப ஸீரியஸா எழுதிக்கிட்ருக்கான்னுட்டு நெனப்பாங்க்யல்ல. ரொம்ப சொங்கிஹதான் மாட்டிக்குவாங்க்ய". 
இப்போதும் இந்த வயதில் அதே யவனராணியை அதே வேகத்தோடு அவசரத்தோடு ஆர்வத்தோடு ஈடுபாட்டோடு படிக்கமுடியுமா? 
முடியாதுதான்.
ஏதோ தொலைந்துவிட்டது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

2 comments:

  1. ஏதோ தொலையவில்லை ... ஏதொ புகுந்து கொண்டு விட்டது!

    ReplyDelete
  2. Yavanarani was conspicously absent in the Book fair this time, other Sandilyan books were present in full strength though. :)

    ReplyDelete