Friday, 27 January 2012

BEYOND THE FIFTH

ஐந்துக்கும் அப்பால்


அன்பர்களே,


சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தறிவுகளுக்கு அப்பாற்பட்ட அறிவுகள் உள்ளன என்பதைப் பற்றி ஒரு மடல் தொடரை எழுத ஆரம்பித்தேன்.
'Beyond The Fifth' என்னும் தலைப்பு.
அதில் ஐம்புல அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆறாவது அறிவி, ஏழாவது, எட்டாவது போன்ற அறிவுகளைப் பற்றி எழுத நினைத்தேன். 
மூன்றே மடல்களுடன் அந்தத் தொடர் நின்றுபோய்விட்டது. 
'ஊம்' கொட்ட ஆளில்லாமல் போய்விட்டதுதான். 
இப்போதுதானே 'ஏழாவது அறிவு' படம் வந்து இதெல்லாம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மூன்று மடல்களையும் திரட்டி, ஒருங்கிணைத்து வைத்தேன். 
முடிந்தால் இதைத் தொடரலாம்.
'கைவல்ய நவநீதம்', 'ஒழிவில் ஒடுக்கம்' போன்ற அரிய நூல்களையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்கலாம் அல்லவா? 
` இப்போது படியுங்கள்........


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஐம்புல அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆறாவது அறிவு இருக்கிறது. தமிழ் மரபில் 'ஆறறிவு படைத்த மனிதன்' என்றும் 'ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள்' என்றும் சொல்வதுண்டு அல்லவா. 
மேற்கத்திய மரபுப்படி, அவர்கள் ஐம்புல அறிவைக் கணக்கில் கொண்டு அந்த ஐம்புலன்களால் உணரப்பட முடியாத அறிவை-உணர்வை ஆறாவது அறிவு என்று கொள்கிறார்கள்.  Sixth Sense என்று அதைக் குறிப்பிடுவார்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவை-உணர்வை அவர்கள் 
Extra-Sensory Perception என்று சொல்வார்கள். இதையே சுருக்கி ESP என்பார்கள்.
நம்முடைய மரபுப்படி எடுத்துக்கொண்டோமானால் ஆறாவது அறிவுக்கும் அப்பாற்பட்ட 
அறிவுகளும் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 
இதை நன்கு அறிந்தவர்கள்......
ஐம்புலன்களின் செயல்பாட்டை மிகவும் குறைத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் Feed-back முதலியவற்றில் மிக மிக அடிப்படையான, மிக அதிகத் தேவையானவற்றை மட்டும் உணர்ந்து கொண்டு, அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றபடிக்கு மற்ற எல்லா ஐம்புலத் தகவல்களையெல்லாம் தடுத்துவிடுவார்கள். 
"ஐம்புலக் கதவை அடைப்பது" என்ற ஔவையார் வாக்கைத் தேவையான அளவுக்கு மட்டும் பின்பற்றி, அந்தக் கதவை அரைக்குறையாகச் சார்த்திக் கொள்வார்கள்.
இந்த நிலையில் அந்த அதீத அறிவு வேலைசெய்யும். ஐம்புலக் குறிக்கீடு குறைவான நிலையில் அது சிறப்பாக வேலை செய்யும். 
செங்கல்களை அடுக்கிவைத்துக்கொண்டு, அவற்றை ஒரே குத்தில் உடைக்கப்போகும் அந்த டைக்குவாண்டோ வீரனின் மனநிலையையும் கண்கள் முதலிய அவயவங்களையும் கவனித்திருக்கிறீர்களா. 
ஹை ஜம்ப் விளையாட்டன் ஓடிப்போய் குதிப்பதற்கு முன்னால் தூரத்தையும் குறுக்குக் கம்பையும் பார்த்தவாறு இருப்பான். பின்னர் குறுக்குக் கம்பத்தை மட்டும் பார்ப்பான். அதன் பின்னர் மெதுவாக உடலை முன்புறமாகச் சாய்த்து நின்று அதன்பின் குதித்துக் குதித்து ஓடி, உயரத்தைத் தாண்டுவான்.
இவர்களெல்லாம் கண் சிமிட்டுவது இல்லை. 
டைகர் வூட்ஸ் என்பவர் ஒரு கோல்·ப் வீரர். எனக்கு மிகவும் பிடித்த ஆள். பெயர் ராசி. ஆகவே இன்னும் அதிகமாகப் பிடிக்கும். 
அவர் கோல்·ப் விளையாட்டில் அந்தக் கடைசி - அதாவது winning தட்டைத் தட்டப் போகும்போது நீண்ட நேரம் ஏதோ ஓர் ஒடுக்கத்தில் இருப்பார். கண்கள் திறந்தவாறு இருக்கும். கண்களைச் சிமிட்டவோ அசைக்கவோ மாட்டார். மூச்சு விடுகிறாரா என்பதைக்கூட அறியமுடியாது. மிக மிக மெதுவாகத் தோள்பட்டை, கைகள், மேல் உடம்பு மட்டும் லேசாக அசைந்து, அப்படியே லேசாகத் தட்டுவார். 
பந்து குழிக்குள் செல்லும்.
அப்படித்தான் சொல்லவேண்டும்.
ஏதோ ஒரு மானசீகக் கட்டளையை மேற்கொண்டு கோல்·ப் பந்து அப்படியே உருண்டு சென்று குழிக்குள் விழுந்து கட்டளையை நிறைவேற்றும். 
இந்த மாதிரியான Subliminal நிலை தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும். 
அஷ்டாங்க யோகத்தில் தாரணை என்றொன்றுண்டு. 


கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி 
வீணாத்தண்டூடே வெளியுறத் தானோக்கிக்
காணக்கண் கேளாச்செவி என்றிருப்பார்க்கு 
வாணாள் அடைக்கும் வழியதுவாமே


அந்த அளவுக்குப் போகமட்டுமே அது பயனாவதில்லை.
கோல்·ப் அடிக்கவும் பயன்படுத்தலாம். 
எல்லாம் ஒன்றுதான்.
Its All A Matter Of Application.


'ஸ்டார் வார்ஸ்' படம் முதன்முதலில் வந்த புதிது. ஸ்டார் வார்ஸ் வரிசையிn ஆறு படங்களில் நான்காம் நம்பர்தான் முதலில் வந்தது. 
அதில் நாம் இருக்கும் அண்டமாகிய மில்க்கிவேய் MilkyWay என்னும் கேலக்ஸியில் Galaxy ஓர் அஷ்டமாசித்தி சாம்ராஜ்யம் நிறுவப்பட்டிருக்கும். 
சித்திகள் கைவரப்பெற்ற 'சித்' என்னும் சித்த வீரர்கள் ஒரு மஹா சித்தனாகிய எம்ப்பரரின் தலைமையில் இருப்பார்கள். 
ஒரு மகாவீரனின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட க்லோன்களால் ஆகிய பெரும் படைகள் அவர்களிடம் இருக்கும். பயங்கர ஆயுதங்கள். பலவகையான விமானங்கள்; பிரம்மாண்டமான பறக்கும் கப்பல்கள்.
இவர்களை எதிர்க்கக் கூடியவர்கள் ஜெடாய் எனப்படும் இன்னொரு வகை சித்தர் கூட்டம். அவர்களும் வீரர்கள்தாம். அண்டத்தில் அமைதி காப்பவர்கள் அவர்கள்.
ஒரு மாஜி ஜெடாய் மாவீரன் யாராலும் வெல்லப்பட முடியாத அளவுக்கு விளங்குவான். அவனுடைய உடலின் பெரும்பகுதி பையானிக் எனப்படும் செயற்கைப் பகுதிகளால் ஆனது. 
அவன் பெயர் டார்த் வேடர். 
எம்ப்பையரின் எதிரிகளை வேட்டையாடுவது அவன் பொறுப்பு.
இந்த பிரபஞ்சமெங்கும் பரவி இருப்பது The Force எனப்படும் மகாசக்தி. அதிலேயே இரண்டு பகுதிகள். இருளும் அஞ்ஞானமும் நிறைந்த ஒரு பக்தி; பிரகாசமும் ஞானமும் நிறைந்த அருட்பகுதி இன்னொன்று. ஜெடாய் வீரர்களுக்கு அருட்சக்தியின் ஆற்றல் உண்டு. சித்கள் இருளிலிருந்து அசுர ஆற்றல்களைப் பெறுவார்கள். 
ஜெடாய்களையெல்லாம் டார்த் வேடரும் எம்ப்பரரும் அழித்துவிடுவார்கள். 
வான் கெனோபி என்பவரும் யோடா என்னும் மகாசித்தரும்தான் எஞ்சுவார்கள். 
எம்ப்பரரின் படைகள் அண்டம் முழுவதையும் பிடித்துவிட்டாலும் ஆங்காங்கு புரட்சி உலகங்கள் போராடிக்கொண்டிருந்தன. 
லேயா என்னும் இளவரசிதான் அவற்றிற்குத் தலைவி.
ல்யுக் என்னும் இளைஞன் அவளுடைய தம்பி. இன்னோர் உலகத்தில் தலைமறைவாக சாதாரண விவசாயியாக  வளர்க்கப்பட்டுவருவான். 
என்னென்னவோ நடந்துபோய், கெனோபியிடமும் யோடாவிடமும் சித்திகளில் பயிற்சி பெறுவான். 
ஆனால் சித்தி பெறுவதில் அவனுக்கு நம்பிக்கையும் குறைவு; முயற்சியும் ஒருமைப்பாடும் தீட்சண்யமும் இல்லை. ஆகவே தோல்வியடைந்தே வந்தான்.
டார்த் வேடருடன் நடந்த வாட்போரில் கெனோபி தன்னுடைய பூத உடலை நீத்துவிடுவார். சூட்சுமமாக சஞ்சரிக்க ஆரம்பிப்பார். 
டெத் ஸ்டார் என்னும் மிகப்பெரிய செயற்கை கிரகம் ஒன்றை டார்த் வேடர் நிறுவுவான். அது சக்தியை ஏற்படுத்தி குவிய வைத்து, பாய்ச்சி முழு முழு உலகங்களை அழிக்கும் ஆற்றல் படைத்தது. 
அதற்கு ஒரு பலவீனமான இடம் உண்டு. 
அதைப் புரட்சிக்காரர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். 
ராக்கெட் விமானங்களின் மூலம் அந்த இடத்துக்குச் சென்று, எதிரிகளின் 
தாக்குதல்களிலிருந்து தப்பி, குறிப்பிட்ட ஒரு கணத்தில் குண்டு போட வேண்டும். அந்தக் குண்டு பலவீனத்தைத் தாக்கி அழித்துவிடமுடியும். ஆனால் குறி மட்டும் தவறவே கூடாது. 
ஆனால் யாராலும் அதைச் செய்யமுடியாது. 
எப்படியோ அவர்களின் கணிப்பும், கவனமும், குறியும் தப்பிவிடும். 
ல்யூக் மட்டுமே எஞ்சியிருக்கும்போது, கெனோபி அருவமாக அவனிடம் தன்னுடைய ஐம்புலன்களையும் ஒடுக்கிவிட்டு, மஹாசக்தியான ·பார்ஸின் மூலம் குண்டை ரிலீஸ் செய்யுமாறு சொல்வார். 
கடைசிநேரத்தில் ல்யூக் கண்களை நேராக வைத்துக்கொண்டு எதிலுமே கவனத்தைச் சிதறவிடாமல் புலன்களுக்கு அப்பால் உள்ள நிதானத்தின்மூலம் குண்டை ரிலீஸ் செய்துவிடுவான். 
அது டெத் ஸ்டார்ன் உட்புறமுள்ள வர்ம ஸ்தானத்தில் வெடித்து டெத் ஏடாரை அழித்துவிடும்.

இதும்  யோகசித்திதான்.


மலேசியாவில் Cobra King என்ற பட்டத்தை வைத்திருக்கிறவர் ஒருவர் இருக்கிறார். இன்னொருவரும் இருந்தார். எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
  நல்ல பாம்பு, விரியன் பாம்பு முதலியவற்றை வசியப் படுத்தி அவற்றுடன் விளையாடிக் காட்டுவார்.
  நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகளுடன் பலநாட்கள் ஒரே கண்ணாடிக் கூண்டில் வசித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.


  அவரிடம் ஒருமுறை கேட்டேன்.
  அவர் தம்முடைய மன ஆற்றலால் பாம்புகளை வசியப் படுத்துவதாகச் சொன்னார். 
"அது என்ன ஹிப்னட்டிஸமா, அல்லது மெஸ்மரிஸமா?" என்று கேட்டதற்கு, "You can call what you want, Sir", என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆமோதிக்கவுமில்லை; மறுக்கவுமில்லை.


தரையில் கிடக்கும் பாம்பை உசுப்பிவிடுகிறார்.
அது தலையைத் தூக்கி ஆடுகிறது. நல்ல பாம்பாக இருந்தால் படமெடுத்து ஆடுகிறது.
அதன் லெவலுக்குக் கீழே தரையில் கைகளையும் கால்களையும் பரப்பி ஊன்றிக்கொண்டு, தரைக்கு மேல் கொஞ்ச உயரத்திலேயே படுத்த மாதிரியாக, ஆனால் தரையில் உடல் படாமல், அப்படியே இங்கும் அங்குமாய் லேசாக அசைகிறார். ஆனால் பார்வை மட்டும் பாம்பின் கண்களின்மேல். பார்வையை மட்டும் திருப்புவதேயில்லை. கண்களைச் சிமிட்டுவதுமில்லை. ஏதோ ஒரு கனவு நிலையிலிருப்பதுபோல் இருக்கிறார்.
அதன் பின் ஒரு கையை மட்டும் தூக்கி, பாம்பின் தலைக்கு நேரே பக்கவாட்டில் மிக மெதுவாக அசைக்கிறார். பாம்பு மிக லேசாக தலையை பக்கவாட்டில் அசைக்கிறது. அப்புறம் அவரும் அசையாமல் இருக்கிறார். பாம்பும் அசையாமல் இருக்கிறது. பிறகு அந்தக் கையைப் பாம்பின் தலைக்கு மேலே மெதுவாகக் கொண்டு செல்கிறார்.
பாம்பின் தலை மண்டையின் பின்புறத்தில், கழுத்துக்கு மேற்புறமாக நடுவிரலால் தொட்டு தடவுகிறார். அது அசையாமல் இருக்கிறது. அதன்பின் அதை அப்படியே எடுக்கிறார். அது பாட்டுக்கு வளைந்து நெளிந்து அவர் கையில் இருக்கிறது. சீறவில்லை.
அதை அப்படியே கிட்டத்தில் கொண்டுவந்து அதன் வாயில் முத்தமிடுகிறார்.
இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது பார்வையை மட்டும் அசைக்கவில்லை. கண்களைச் சிமிட்டவும் இல்லை. அரைக்கண்களை மூடிய பாவனையில் Intense Look என்பார்களே அது மாதிரியான ஒரு தீட்சண்யமான பார்வை.
அந்த டைகர் வூட்ஸ் பந்தைத் தட்டுமுன்னிருக்கும் நிலை; பார்வை.
பார்த்துக்கொண்டிருப்பவர்களே ஆடாது அசையாது லயித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஹிப்னட்டிஸமா, மெஸ்மரிஸமா......
அல்லது வர்மமா?
எல்லாம் கலந்த மாதிரி இருக்கிறது.


பின்னணியில் ஏதும் மந்திரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அமானுஷ்ய சக்தி என்று நாம் சொல்லும் அந்த சில சக்திகளெல்லாம் அடிப்படையில் மானுஷ்யமாக - அதாவது மனிதர்களால் மனித இச்சையால்தான் இயக்கப்படுகின்றன.
இன்னும் ஒரு கதையைச் சொல்லலாம்......
கேட்க ஆசைப்பட்டால்......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அன்புடன்


ஜெயபாரதி

Monday, 9 January 2012

READING YAVANARANI




 களவியல் - யவனராணி 



         ஒரு காலத்தில் "எப்படா குமுதம் பத்திரிக்கை வரும்? 'யவனராணி' படிக்கலாம்? என்ற ஆவலோடு காத்திருந்ததுண்டு. அதைப் படித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் அதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் டிஸ்கஷன் வைத்துப்பேசிக்கொண்டிருப்போம். கிட்டத்தட்ட 40 % மாணவர்கள் படித்திருப்பார்கள். 
அரட்டைகளின் மையக்கருத்துக்களில் ஒன்றாக யவனராணி விளங்கியது. பொதுவாகவே சாண்டில்யன் கதைகளை இளைஞர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள். For obvious reasons.
     
மாணவர்களில் சிலருக்கு யவனராணி பாத்திரங்களில் பெயரைக் கொடுத்திருந்தோம். ஈஸ்வரமூர்த்தி என்பவரை இலி ஆஸு என்று அழைத்தோம். இலி ஆஸு என்பவன் சாம்பிராணி நாட்டு அரசன். அகப்பட்டவர்களையெல்லாம் பிடித்து, கை அல்லது காலை வெட்டி, சாம்பிராணி மரக் காடுகளுக்கு அடிமை வேலைக்கு அனுப்பியவன். குமுதத்தில் வந்த யவனராணி நாவலின் படத்தில் கண்டஇலிஆஸு உருவத்தைப் போலவே ஈஸ்வரமூர்த்தி இருந்தார்.

அந்தக் காலத்தில் குமுதம் வியாழன், வெள்ளி, ஏதோ ஒரு நாளில் வெளிவரும். வார இறுதிக்குச் சரியாக இருக்கும். 
ஆனால் யார் அந்த மாதிரி காத்திருந்தார்? உடனேயே படித்து விட்டுத் தான் மறுவேலை. 
நோட்ஸ¤க்குள் வைத்துக்கொண்டு பேத்தாலஜி லெக்சர் கிலாஸில் வைத்துப் படிப்பவர்கள் இருந்தார்கள். 
குமுதம், ஆனந்தவிகடன் படிப்பதற்கென்று சில பாடங்களின் லெக்சர் கிலாஸ்கள் இருந்தன. 
மதுரை மருத்துக்கல்லூரி லெக்சர் ரூம்கள் ஒரு வசதியைக் கொண்டிருந்தன. படிப்படியாக உயரமாக அதன் டெஸ்க் இருக்கைகள் அமைந்திருக்கும். கடைசி டெஸ்க் தூரத்தில் இருக்கும். அதன் அருகே இன்னொரு கதவு இருக்கும். அது எப்போதும் திறந்தே கிடக்கும். யாராவது கதவைக் கழற்றிவிட்டிருப்பார்கள்.
"அல்ல்ல்ல்ல்..... வெவரமான பயடா நீ......!" என்று அந்தக் காலத்து மதுரை மருத்துவக் கல்லூரி குழூஉக்குறியில் பாராட்டப்பட்ட எவனாவது ஒரு 'வெவரமான பய' அந்தத் தர்மக் கைங்கர்யத்தைச் செய்திருப்பான். 
குமுதம் படிப்போர் சங்கம் எப்போதும் அந்தக் கடைசி டெஸ்க்கின் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும். ஓடிப்போவோர் சங்கம் டெஸ்க்கின் ஓரங்களில் இருக்கும். 
"ஏம்ம்ப்பூஊ..... இப்ப்டி மறச்சு மறச்சு வச்சு யவனராணியப் படிக்கிறியே.... அதோட த்ரில் விட்டுப் போயிராதோ?" என்று கேட்டால்.......
"தோ பார். அதுலதான் திரில்லே இருக்குல்ல. கையில பென்ஸில வச்சுக்கிட்டு அதோட மேல் நுனிய மட்டும் அசயிற மாரி சுத்திக்கிட்டே குமுதத்தப் படிப்பம்ல. எவனும் கண்டுக்க மாட்டான்ல. நாம சொல்றத ரொம்ப ஸீரியஸா எழுதிக்கிட்ருக்கான்னுட்டு நெனப்பாங்க்யல்ல. ரொம்ப சொங்கிஹதான் மாட்டிக்குவாங்க்ய". 
இப்போதும் இந்த வயதில் அதே யவனராணியை அதே வேகத்தோடு அவசரத்தோடு ஆர்வத்தோடு ஈடுபாட்டோடு படிக்கமுடியுமா? 
முடியாதுதான்.
ஏதோ தொலைந்துவிட்டது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 5 January 2012

UNLOCKED DOOR

பூட்டாத பெட்டகம்

        இந்து சமயத்தில் ஏராளமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. 
சமயம் என்பதே இதனால் ஒரு சிக்கலான நெருக்கடியான கஷ்டமான விஷயமாக ஆகிவிடுகிறது. 
இவற்றிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு, இவற்றிலேயே மனத்தை லயிக்க விட்டுக் கொண்டு, பரபரப்பாகவும் மும்முரமாகவும் செய்வதில் சமயத்தின் மையமான விஷயத்தை மறந்துபோய் விடுகிறார்கள். 
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கக்கூடிய தூரமோ இடைவெளியோ ஏதும் இல்லை.
"உனக்கும் உன் கழுத்து நரம்புக்கும் இருப்பதைவிட நான் இன்னும் நெருக்கமாக இருக்கிறேன்" என்று இறைவன் சொல்லியிருப்பதாக இன்னொரு மதம் கூறுகிறது.
அப்பர் பெருமானோ, "உள்குவார் உள்கிற்று எல்லாம் உடனிருந்து அறிதி" என்று இறைவனின் நெருக்கத்தை தாமே நேரடியாக அறிந்து உணர்ந்து சொல்லியிருக்கிறார். {"யார் யார் எதை நினைத்தாலும், சிந்தித்தாலும் அந்த நினைப்பை, சிந்தனையை அவரவருடன் இருந்து உடனேயே நீ அறிந்துகொள்கிறாய்"}
இத்தனை நெருக்கமான இறைவனைச் சிந்திப்பதற்கோ, அடைவதற்கோ ஏன் இவ்வளவு சிரமம் மிக்க கடினமான பாதைகள்?
சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் அகத்தியத்தில் எழுதிய மடல் ஒன்றை இங்கு முன்வைக்கவேண்டியுள்ளது. 


        ஹேரி ஹ¥டினீ என்பவர் ஒரு பெரிய Escape Artist. 
அவரைச் சங்கிலிகளால் கட்டி, அவற்றையும் பெரிய பெரிய பூட்டுக்களால் பிணைத்து, பெரிய பெட்டகத்தில் வைத்து அடைத்து விடுவார்கள். 
குறிப்பிட்ட நிமிடங்களில் அவர் வெளியில் வந்துவிடுவார்.
ஒருமுறை யாராலுமே உடைக்கமுடியாத பெட்டகத்தை ஒரு கம்பெனி செய்தது. 
அதற்கு ஒரு சவாலையும் விடுத்து பந்தயமும் கட்டியிருந்தனர்.
அந்தப் பெட்டகத்திலிருந்தும் அவர் வெளியில் வந்துவிட்டார். 


சில தடவைகள் இப்படிச் செய்தனர். அவரைச் சங்கிலிகளால் பிணைத்து, ஒரு பெரிய பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி, அந்தப் பெட்டகத்தையும் சங்கிலிகளால் சுற்றி, பூட்டுக்களால் பிணைத்து, கிரேன் வைத்து ஆற்றுக்குள் இறக்கிவிட்டனர்.
அதற்குள்ளிருந்தும்கூட ஹ¥டினி வெளியே வந்து பந்தயத்தில் ஜெயித்துக் காட்டினார்.


உள்புறமிருந்து எப்படிப்பட்ட பெட்டகத்தையும் திறந்து விடுவார். பூட்டுத் திறப்பதிலும் மன்னன்.


அப்பேற்பட்ட ஆள்.

ஒரே ஒரு முறைதான் அவரால் ஒரு பெட்டகத்தைத் திறந்துகொண்டு வெளியில் வரமுடியவில்லை.
ஏன்?
யாருக்கும் ஏதும் புரியவில்லை.
ஹ¥டினீக்கும் புரியவில்லை.
ஆராய்ச்சி பண்ணினார்கள்.
ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணியபிறகு தற்செயலாகக் கண்டுபிடித்தார்கள். 


அவசரத்தில் பெட்டகத்தைப் பூட்ட மறந்து விட்டார்கள்.


பூட்டப்பட்ட பெட்டகத்தை மட்டுமே திறந்து பழக்கப்பட்ட ஹ¥டினீக்கு, திறந்திருந்த பெட்டகத்தைத் திறந்துகொண்டு வரமுடியவில்லை. 


அதான்......


திறந்திருக்கும் வழியில் சுலபமாகச் செல்வதற்கு நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.......


ஆன்மீகத்தில்தான்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Tuesday, 3 January 2012

SERENDIPITY

ஸெரெண்டிப்பிட்டி - Serendipity-#1

பல சமயங்களில் ஒன்றைப் பற்றி ஆராயும்போது வேறேதாவது புதியதாகத் தட்டுப்படும்.
இதனை 'Serendipity' என்று சொல்வார்கள். 
'Serendip' என்பது இலங்கையின் பழைய ஐரோப்பியப் பெயர். 
இதேபோல Cathay, Chipango, Golden Chersonese போன்ற பெயர்கள் அப்போது வழக்கில் இருந்தன. இவை வேறெதுவுமல்ல; சீனா, ஜப்பான், மலாயா ஆகியவைதாம்.
ஒன்றைத் தேடிப்போகும்போது வேறு ஏதோ கிடைப்பது அல்லது கண்டுபிடிக்கப்படுவதுதான் serendipity என்பது.
இந்தியாவைத் தேடிச் சென்ற கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் அல்லவா? செரெண்டிப் ஆகிய இலங்கைக்கு பதில் மேற்கு இண்டீஸ் கிடைத்தன அல்லவா? அப்படி வந்ததுதான் அந்தச் சொல். ஏதோ ஆண்டிப்பட்டி அரசம்பட்டி மாதிரி இல்லை? - 
இந்த செரெண்டிப்பிட்டி சமாச்சாரம் ஒன்று ஏற்பட்டது.


வள்ளிமலை வள்ளல் என்று புகழப்பட்ட திருப்புகழ் சச்சிதாநந்த சுவாமிகளின் வரலாற்றைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சம்பவம் பார்வையில் பட்டது. 
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளின் மடத்தில் மேற்படி சுவாமிகளுக்கும் வள்ளிமலை சுவாமிகளுக்கும் ஒரு திருப்புகழ்ப் பாட்டு சம்பந்தமாக கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது 'கள்ளமுள்ள வல்லவல்லி' என்னும் திருப்புகழ்ப்பாடலின் கருத்து சம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபட்டது. 
ஞானியார் சுவாமிகள் பன்மொழி மேதை: பேரறிஞர்; பெரும் கல்விமான். அப்போது ஞானியார் சுவாமிகள் வள்ளிமலை சுவாமிகளைப் பார்த்து இவ்வாறு கூறிக்கொண்டு, விவாதத்திலிருந்து ஒதுங்கிக்
கொண்டார்:


"'கற்றது கைம்மண்ணளவு' என்ற வரம்பிற்குட்பட்டுக் கல்வி பயின்ற எங்கள் அறிவுக்கு ஓர் எல்லையுண்டு. 'கல்லாதது உலகளவு' என்றவாறு ஓதாது உணர்ந்த நீங்கள் மெய்யருள் ஞானிகளே. உள்ளதை இல்லாதது என்று சொல்லி அதை நிரூபித்தும்விடுவீர்கள். உதாரணமாகக்
'கூராழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு மறைவு செய் கோபாலன்' - ஆதவன் இருக்கும்போதே, அவனையும் அவன் சோதியையும் மறைத்தவரும், அமாவாசை திதியை அபிராமி பட்டருக்காகப்
பௌர்ணமி என்று உலகுக்குக் காண்பித்தோரும், ஏழைப் புலவர் வாக்கை மெய்ப்பிக்க ஆற்றின் திசையை மாற்றிப் புதிய சூழ்நிலையை உருவாக்கியோருமான அருள் வள்ளல் வழியில் வந்தவர்கள் அல்லவா நீவிர்! உமது அருள் திறத்தின் மகிமையை அளவிடவும் முடியுமோ?"


இது என்ன புதுக்கதை என்று பார்த்தேன்.


இது இரட்டைப் புலவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.
இரட்டைப் புலவர்கள் என்போர் காளமேகப்புலவரின் சமகாலத்தவர். 
ஒருவர் குருடர்; இன்னொருவர் முடவர். முடவரைக் குருடர் தம் தோளில் ஏற்றிக்கொள்வார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்து செல்வார். Team-work, Comensality என்பதற்கு இது ஓர் அருமையான உதாரணம். ஒரு மாதிரியான biological interdependance. முன்னவர் ஒரு வெண்பாவின் முதலிரண்டு அடிகளைச் சொல்ல இரண்டாமவர் மீதி இரண்டடிகளையும் சொல்லி முடிப்பார்.
இவர்கள் 'திருவாமாத்தூர்க் கலம்பகம்' என்னும் பிரபந்தம் இயற்றி யிருந்தனர். 
அதனை அரங்கேற்றம் செய்தபோது,


'மாதைநாதர் வலங்கொள் பம்பை மேற்கரையில், கோயில் கொண்டார்'


என வரும் பகுதி வந்தது. 
அதனைக் கேட்டவர்கள் சிரித்துவிட்டனர்.
ஏனெனில் அப்போது திருவாமாத்தூர் கோயில், பம்பையாற்றின் கீழ்க்கரையில் இருந்தது. அதனைப் பாராத குருடர், மேற்கில் வைத்துப் பாடிவிட்டார்.


"யானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்" என்று இரட்டையர் பேசாமலிருந்துவிட்டனர்.


அன்று இரவே பெருமழை பெய்தது. ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரையையும் மீறிக்கொண்டு ஆறு பரந்து விரிந்து ஓடியது.
இதன் விளைவாக ஆற்றின் போக்கு மாறியது. விடிந்தபோது வலப்புறம் மாறி ஓடிக் கொண்டிருந்தது.
பிரபந்தத்தில் கண்டதுபோல் ஆறு இப்போது ஓடியது.
இன்றும் அந்த ஆறு ஓடிய பழைய படுகையையும் இன்றைய போக்கையும் நன்கு காணலாம்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 1 January 2012

கம்பன் விழாவும் கம்பன் அடிப்பொடியும்

செட்டிநாடுப்பகுதியைச் சேர்ந்த இஇரு நிலப்பகுதிகளை கானாடு அல்லது கானநாடு என்றும் கோனாடு என்றும் அழைப்பார்கள். கானாடுகாத்தான் என்ற ஊர்கூட இருக்கிறது. கானாட்டின் வடக்கில் இஇருப்பது கோனாடு. 


கானாடு, கோனாடு ஆகிய இருநாட்டிலும் வாழ்ந்த இஇருபத்துநான்கு கோட்டத்து வேளாளர்கள்தாம், வேளாளரைச் சிறப்பித்து 'ஏர் எழுபது' என்னும் நூலைக் கம்பரை இயற்றச்செய்து, அரங்கேற்றி, 
பரிசில்களும் வழங்கினர். பொன்னமராவதி என்னும் கோனாட்டைச் சேர்ந்த ஊரின் தலைவராகிய பொய் சொல்லா தேவன் என்னும் கள்ளர் மரபினரின் தலைவரிடம் இது குறித்து ஒரு சாசனம் இருந்தது. புதுக்கோட்டை அரசினரிடம் அந்த சாசனம் சேர்ப்பிக்கப்பட்டது. கம்பர் தன் இறுதிக் காலத்தில் செட்டிநாட்டில்தான் இருந்தார் என்று நம்பப்படுகிறது. 


கானாட்டின் முக்கிய ஊர்களில் ஒன்று நாட்டரசன்கோட்டை. அங்கு 'கண்ணுடைய நாயகி யம்மன்' கோயில் என்ற அம்பிகை கோயில் இருக்கிறது. அந்த ஊரையும் கம்பனையும் சம்பந்தப் படுத்துவார்கள். கம்பன் அடங்கிய இடம் என்று அதனைச் சொல்வார்கள். அங்கு கம்பன் அடங்கிய இடமாகக் குறிக்கப்படும் நடுகல்லுடன் கம்பன் செய், கம்பன் குளம், கம்பன் ஊருண்ணி என்ற பெயர்களும் வழங்குகின்றன. 


1775இல் முத்துநாயகப்புலவர் என்பவர் 'கண்ணுடைய நாயகியம்மன் பள்ளு' என்ற சிறு பிரபந்தத்தைப் பாடியுள்ளார். . 


அதில் ஓரிடத்தில், 


'வாசமான தென்பாண்டி நன்னாடு 
மதுரை நாட்டில் வளருமிந்நாடு 
காசினிக்குள் கதிர்க்கின்ற நாடு 
முன்கம்பர் வந்து துதிக்கின்றநாடு. 


பூசுரர்க் கன்னதானம் செய்நாடு 
புலவர் மேல்அபிமானஞ் செய்நாடு 
ராசலட்சுமி கண்ணுடை யாள்அருள் 
நல்கு நாட்டரசன் கோட்டை நாடே.' 


அந்தத் தொடர்பால் கம்பன் விழா சமயத்தில் அங்கும் ஒரு விழா நடக்கும். 


கம்பன் விழாவை முதன்முதலில் தோற்றுவித்தவர் 'காரைக்குடி கம்பன்' என்று மக்களால் அழைக்கப் பட்டு வந்த 'கம்பனடிப்பொடி' சா.கணேசன் அவர்கள். வரலாற்றாராய்ச்சிப் பேரறிஞர்; மிகச் சிறந்த தமிழறிஞர். தேசத் தியாகி. பாரதம் சுதந்திரம் அடையும்வரை சட்டையே போடுவதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டவர். பாரத விடுதலைக்குப் பிறகும்கூட சட்டை போடாமலேயே இருந்தவர். தனதூராகிய காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தன்னுடைய பேரனுக்கு 'கம்பன்' என்று பெயரிட்டு வாய்நிறைய அழைத்து இன்பம் கண்டவர். அவர்தான் காரைக்குடியில் தொடர்ந்து அவ்விழா நடைபெறும் வண்ணம் ஏற்படுத்தியவர். 


பக்தி இஇலக்கியம் என்ற தகுதியை மட்டுமே  பெற்றிருந்த கம்பராமாயணத்தை ஒரு பேரிலக்கியமாகப் புகழ் பெறச் செய்த பெருமையில் சா.கணேசனுக்குப் பெரும்பங்கு உண்டு. பல இடங்களில் கம்பன் கழகங்களையும் நிறுவக் காரணமாக இஇருந்தவர். 


முதன்முதலில் 1939ஆம் ஆண்டில் அவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தார். 


கி.பி.886ஆம் ஆண்டு பங்குனி மாதம், நான்காம் நாள், புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திர நாளன்று கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதாக சா.கணேசன் தம் ஆராய்ச்சியால் நிறுவியுள்ளார். 


ஆகவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மகம், பூரம், உத்தரம் ஆகிய மூன்று நாட்களில் காரைக்குடியிலும் ஹஸ்த நட்சத்திரன்று நாட்டரசன்கோட்டையிலுள்ள 'கம்பனுடைய பள்ளிப்படை' என்னும் இடத்திலும் கம்பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. 


1952ஆம் ஆண்டில் கம்பன் விழாவை முதன்முதலாகக் கொண்டாடத் தொடங்கினர். 


இவ்வழக்கத்தை ஏற்படுத்தியவர் சா.கணேசன்தான். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$