காவல் தெய்வங்கள் -#1
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செரம்பான் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ண சாமியைப் பற்றி கேட்டார்.
எத்தனை வகையான கருப்பண்ணசாமிகள் இருக்கிறார்கள் என்பது கேள்விகளில் ஒன்று.
பெரியகருப்பர், சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், வளைதடிக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், ஆத்தியடிக் கருப்பர், கோட்டைக் கருப்பர், பதினெட்டாம்படி கருப்பர், கழுவக் கருப்பர், கழுவடிக் கருப்பர், மாசாணக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ராங்கியம் கருப்பர் என்று வரிசையாக மனதிற்கு வந்த கருப்பர் பெயர்களைச் சொன்னேன்.
கருப்பரைப் பற்றிய நூல்கள், வலைத்தளங்கள் பற்றி கேட்டார்.
அதிகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
வலையில் கருப்பண்ணசாமி படமே நான் ஜியோஸிட்டீஸில் போட்டுவைத்திருக்கும் படம்தான்.
வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு இருந்தாலும் இருக்கும்.
"கருப்பரின் அடையாளமாக உள்ளது சூலமா?" என்று கேட்டார்.
"கருப்பருக்கு அரிவாள்தான் நட்டுவைப்பார்கள்; அல்லது நிறுத்தி வைப்பார்கள். கருப்பர் அரிவாளை வலக்கையில் ஏந்தியிருப்பார். இடக்கையில் சுக்குமாத்தடி என்னும் ஆயுதம் இருக்கும். இடையில் சூரிக்கத்தி என்பது இருக்கும். வளைதடிக் கருப்பர் வளரியை வைத்திருப்பார்", என்று விளக்கினேன்.
ஆசாமி வெகு ஸீரியஸாகக் கருப்பண்ணசாமியை முறையாக வழிபடப்போவதுபோல் தெரிகிறது.
அதற்கு அடுத்தநாள்......
கோலாலும்ப்பூரிலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். "நின்னது நிக்க" என்பார்கள் அல்லவா? அதுபோல "சிறு தேவதைகள் பற்றி சொல்லுங்கள்", என்றார்.
'சிறு தேவதைகள்' என்று ஒரு காலத்தில் நானும் குறிப்பிட்டவன்தான்.
ஆனால் பின்னர் மாற்றிக்கொண்டேன்.
ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மலேசியாவில் ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கும் ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆனால் என்ன?
சுவாரஸ்யமான விஷயத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லக்கூடிய ஆட்கள்தாம் இல்லை.
அதுவும் சிறுகதை விமரிசனம், புதுக்கவிதை விமரிசனம் என்று உலர்ந்துபோய் வெளிறிப்போய் சோணியாய், சோகை பிடித்தமாதிரி உள்ள உரைகள் மிகவும் அதிகமாகத் திணிக்கப்பட்டு இங்குள்ளவர்கள் வெகுவாகப் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகையால்தான் சுவாரஸ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும்போது அவ்வளவு ஆர்வமுடன் கேட்கிறார்கள்.
"அப்படியானால் அந்த தெய்வங்களை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? கிராம தெய்வமா?" என்று கேட்டார்.
"இங்கு ஏது கிராமம்? 'காவல் தெய்வம்' என்று சொல்லவேண்டியதுதான்".
"கிராமத்தில் உள்ளதை கிராம தெய்வம் என்று சொல்லலாம்தான்".
"ஆனால் மொட்டைக்கோபுர முனியும் ஜடாமுனியும் 'பப்பரபாம்' என்று மதுரைக்கு நடுவேயல்லவா
இருக்கின்றார்கள்? வடக்குக் கோபுர வாசலில் மொட்டைக்கோபுரத்தார் என்றால் கிழக்கு வாசலில்
மதுரைவீர சுவாமி ஜாங்ஜாங்கென்று பொம்மி வெள்ளையம்மாளோடு காட்சி கொடுத்துக்
கொண்டிருக்கிறார். மொகோ.முனி, ஜ.முனி, ம.வீரப்பர்களை எப்படி கிராமத்து ஆசாமிகளாக ஆக்குவது? பக்கா நகரத்தார்கள் அல்லவா இவர்கள்?"
"சரிதான்" என்று ஒத்துக்கொண்டார்.
"இவர்களைப் பார்க்கமுடியுமா?" - இது அடுத்த கேள்வி.
"தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கமுடியும்."
அந்த அனுபவங்களைக் கேட்டார். விலாவாரியாகச் சொன்னேன்.
பேய்களைப் பற்றியும் அதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் வருவதற்கு முன்னால் டெலி·போனில் அஷ்டகர்மா பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
சொன்ன விபரங்களைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்டரி செய்யலாம் என்று தீர்மானித்தார்.
அஷ்டகர்மா என்றால் என்ன கேட்குமுன் சொல்லிவிடுகிறேன்.....
ஸ்தம்பனம், மோஹனம், ஆகர்ஷணம், மாரணம், பேதனம், வித்வேஷணம், உச்சாடனம், வசியம் ஆகியவை.
மாந்திரீகம்.
மேல்விபரங்களுக்கு அகத்தியர் ஆவணத்திற்குள் பார்க்கவும். ஏராளமாக எழுதிவைத்திருக்கிறேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment