சீன மருத்துவமும் பீக்கிங் மனிதனும் -#2

கரப்பான் பூச்சியின் மேலோட்டை நீக்கிவிட்டு உள்சதையைப் பக்குவம் செய்து மருந்தாகச் சாப்பிடுவார்கள். புதிதாகப் பிறந்த குழந்தையின் மூத்திரமும் மருந்தாகப் பயன்படும்.
கடலில் Sea-Horse என்னும் பிராணி உண்டு. அதையும் கருவாடாக ஆக்கி மருந்தாகப் பயன்படுத்துவார்கள். தவளையின் உடலிலிருந்து குடல் முதலியவற்றை எடுத்துவிட்டு, பாடம் பண்ணி சருகுபோல் தொங்க வைத்திருப்பார்கள். அதுவும் மருந்துப்பொருள்தான். பாம்பின் பித்தப்பை, புலியின் பித்தப்பை, குரங்கின் பீஜங்கள் முதலியவை எல்லாம் பயனில் இருக்கின்றன.
மருந்துக் கடைகளில் மனிதப்பற்களைப் போன்ற தோற்றமுள்ள பற்களைப் பொடி செய்து மருந்தாக விற்பது வழக்கம். அதை Dragon's Teeth என்று குறிப்பிட்டார்கள்.
சீனர்கள் Dragon's Teeth என்று அவர்களால் அழைக்கப்படும் பற்களை மருந்தாகப் பயன்
படுத்தினார்கள்.
அவை உண்மையிலேயே Fossilised Teeth - மிகப்புராதனமான மனிதர்களின் பற்கள்.
இந்தப் பற்கள் சீனாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைத்தன. அந்த இடத்துக்குப் பெயரே Dragon Bone Hill என்பதுதான். 1920 - 1930களில் Davidson Blake என்னும் கனேடிய ஆராய்ச்சியாளர் தற்செயலாக பீக்கிங்கில் ஒரு மருந்துக்கடையில் புராதன எலும்புகளையும் பற்களையும் நுணுக்கித் தூளாக்கி மருந்துகள் தயாரிப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த மருந்துக்கடையில் தேடியதில் ஒரே ஒரு கடைவாய்ப் பல் மட்டுமே கிடைத்தது. அது எங்கிருந்து கிடைத்தது என்ற விபரத்தைத் தெரிந்துகொண்டு அந்த இடத்துக்குப்போய் அகழ்வாராய்ச்சி செய்தார்.
ஆனால் அந்த Prehistoric Site-இல் எத்தனையோ நூற்றாண்டுகளாகப் புராதன எலும்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே ப்லேக்குக்குக் சிரமப்பட்டு கிடைத்ததெல்லாம் ஒரு சில எலும்புகளே. அவற்றை வைத்து ஆராயும்போது அதுகாறும் அறியப்படாதிருந்த ஒரு புராதன மனித இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் எலும்புகள் என்று தெரியவந்தது.
அந்த மனித இனத்துக்கு Sinanthoropus Pekinensis என்று பெயரிட்டார்கள். Peking Man என்று சுருக்கமாக அழைத்தார்கள்.
1936-க்கு மேல் ஜப்பானின் ஆக்கிரமிப்பு சீனாவின் மீது ஏற்பட்டது.
1941-இல் பீக்கிங் மனிதனின் எலும்புகளை ஒரு மரப்பெட்டியில் போட்டு மூடியை ஆணியடித்துப் பக்காவாகச் செய்து அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயன்றார்கள். அதை எடுத்துச் சென்ற அமெரிக்க மெரைன்ஸ் வீரர்கள் ஜப்பானியரிடம் பிடிபட்டுவிட்டனர்.
ஜப்பானியர் அந்த பெட்டியைக் கைப்பற்றிப் பார்த்ததில் ஏதோ பழைய எலும்புத்துண்டுகள் இருப்பதைக் கண்டு அந்தப் பெட்டியை ஒரு வீதி ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
அதன்பின்னர் பீக்கிங் மனிதனின் அந்த எலும்புகள் என்ன ஆயின என்பது தெரியவில்லை.
ஒரு புராதன மனித இனத்தைப் பற்றிய மேல்நிலை ஆராய்ச்சிகளும் இல்லாமற்போயின.
அந்த எலும்புகளின் ப்லாஸ்ட்டர் பிரதிகளை வைத்துத்தான் ஆய்வெல்லாம் நடக்கிறது.
இந்த ஆதி மனிதனின் விபரத்தை ஜூலியன் ஹக்ஸ்லி என்னும் ஆராய்ச்சியாளர் எழுதிய புத்தகம் ஒன்றிலிருந்து படித்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய புத்தகம்.
இந்த ஜூலியன் ஹக்ஸ்லி பெரிய பாரம்பரியத்தை உடையவர். அவருடைய பாட்டனாராகிய தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லிதான் பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வினின் பிரதம சீடர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment