காணாமற் போகும் கலை
சரம், சர ஓட்டம், சரநூல் என்று உங்களில் சிலராவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'சரம்' என்பது அடிப்படையில் மூச்சும்(சுவாசம்) அதன் நடைகள், ஓட்டங்கள், மடை மாற்றங்கள் முதலியவையும்.
மூச்சை சித்தர் பரிபாஷையில் 'ஆறுகால் குதிரை' என்று குறிப்பிடுவார்கள். சித்தர் நூல்களில் 'ஞானசரநூல்' என்றொரு நூல் இருக்கிறது. திருமந்திரத்திலும் பல இடங்களில் திருமூலர் இதனைப் பற்றி குறிப்பிடுகிறார்.
சரத்தை அறிந்தவர்களுக்குப் பலவகையான சித்திகள் கைவரப் பெறும்..
நடிகர் 'சரத்'குமார் எந்த வகையான சரத்தைப் பிடித்து சித்தியைக் கைப்பிடிக்கப் பெற்றார் என்பது தெரியவில்லை.
"சரம் ஆடுபவனிடம் சுரம் பாடாதே; வாராஹிக்காரனிடம் வாயாடாதே", என்ற சொல் வழக்குகள் இருக்கின்றன. சரத்துக்கு அவ்வளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது.
மூக்கில் இரண்டு துவாரங்கள். அவற்றை நாசித் துவாரங்கள் என்று சொல்வார்கள். ஒரு விஷயத்தை மிகப் பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டார்கள். இரு பக்கத்து நாசிகளிலும் ஒரே சமயத்தில் சமமாக மூச்சு ஓடாது. சில சமயங்களில் வலது பக்க நாசியில் மூச்சு அதிகமாக வரும். வேறு சமயங்களில் இடது பக்க நாசியில் வரும். அவ்வப்போது வலமிருந்து இடப் பக்கத்துக்கு மாறும். இடமிருந்து வலத்துக்கும் மாறும்.
இடப் பக்கத்து நாசியில் சுவாசம் அல்லது மூச்சு ஓட்டத்துக்கு 'இடகலை' என்றும் வலப் பக்கத்து மூச்சு ஓட்டத்துக்குப் 'பிங்கலை' என்றும் சொல்வார்கள். இடகலையைச் 'சந்திர கலை' என்றும், பிங்கலையை 'சூரியகலை' என்றும் குறிப்பிடுவார்கள்.
இது ஓர் அரிய கலை. அற்புதக் கலை. அதிசயக் கலை.
மனிதனை 'அதிமனிதன்' என்னும் Superman ஆக ஆக்கக்கூடியது. இந்தக் கலைகளின் கலையைப் பற்றிய அறிவும் திறமையும் பலவகைக் காரணங்களுக்குப் பயன்படும். காரியங்களுக்கும் பயன்படும்.
ஒருமுறை மலேசியாவின் இந்து சமய இயக்கம் ஒன்றின் தலைவர்களில் ஒருவர் 'வடகலை, பிங்கலை' என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். கேட்கவே வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. 'வடகலை', 'தென்கலை' என்னும் சொற்கள் ஸ்ரீவைஷ்ணவம் என்னும் சமயத்தின் இரு பெரும் பிரிவுகள். 'இடகலை', 'பிங்கலை' என்பன சர சாஸ்திரம் சம்பந்தப்பட்டவை. இரண்டையும் சேர்த்துக் குழப்படி செய்துகொண்டிருந்தார்.
மலேசியாவில் சமய இயக்கத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த குறிப்பிட்ட தலைவரைக் கேட்டபோது அவர்களுக்கே உரிய வழக்கப்படி, "We are executives. We run the organisation. You people have vast knowledge. You can deal with that. Since you are there, we don't have to meddle with such matters", என்று சமத்காரமாகச் சொன்னார். ("நாங்கள் நிர்வாகிகள். சமய இயக்கத்தை நாங்கள் நடத்துவோம். உங்களுக்குப் பரந்த ஞானம் இருக்கிறது. நீங்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்களெல்லாம் இருப்பதால் நாங்கள் ஒன்றும் அந்த விஷயங்களில் தலையிட வேண்டியதில்லை").
அதெல்லாம் வஞ்சகப் புகழ்ச்சி. வஞ்சப் புகழ்ச்சியல்ல. மற்றவர்களென்றால் உச்சி குளிர்ந்துபோய் வடிந்திருப்பார்கள்.
ஆங்கிலத்தில் அல்லவா சொன்னார். ஆகவே, நான் பதில் சொன்னேன், "I am also an executive. I am a CEO of a hospital. I know about these things and was trained for this stuff. And as you have put it nicely, I also possess vast knowledge. And I am involved with religious movements and organsations and I also do organisational work and I teach and give lectures in religion. Don't you think that I would make a better president? With my vast knowledge, expertise, experience, and leadership qualities?" (நானும் ஒரு நிர்வாகிதான். ஒரு மருத்துவ மனைக்குத் தலைமை நிர்வாகி. இந்த மாதிரி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவன். நீங்கள் மிக அழகாகச் சொன்னமாதிரி பரந்த ஞானமும் இருக்கிறது. சமய இயக்கங்கள், சமய நிகழ்ச்சிகளின் ஏற்பாடு முதலியவைபற்றி தெரியும். அத்துடன் சமயத்தைச் சொல்லிக் கொடுப்பதோடு, பல சமய உரைகளையும் நிகழ்த்துகிறேன். அப்படியிருக்கும்போது, பரந்த ஞானம், திறமை, அனுபவம், தலைமைத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட நான், இந்த இந்து இயக்கத்திற்கு இன்னும் சிறந்த தலைவராக இருப்பதற்கு, எனக்கு அதிகத் தகுதி இருக்கிறது அல்லவா?)
அந்த ஆளின் திமிர் எங்கே போகும்?
ஆனானப்பட்ட இந்து சமயத் தலைவர் அல்லவா?
சொன்னார்.
"Sure, sure. This year we have elections. You can file your nomination."("நிச்சயமாக, நிச்சயமாக. இந்த ஆண்டு நாங்கள் தேர்தலை வைத்திருக்கிறோம். நீங்கள் நாமினேஷனைப் போடலாமே!").
ஓர் அரசியல் தேர்தலைவிட மோசமான தேர்தல். அதில் நின்று ஜெயிக்கவா? இதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், நம் அரியகலைகளில் பல இந்த மாதிரி 'ஸெட்டாப்பு'களால்(set-up) அழிந்துகொண்டு வருகின்றன. அதனால்தான் ஓர் அரியகலையின் பெயர்கூட அறிந்து கொள்ளப் படாமல் இருக்கிறது.
சரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$