Wednesday, 29 June 2011

பிச்சைக்காரக் கோழி

'சூடான கோழி சுடாத கோழி' என்னும் மடலை ருசித்து ரசித்துப் படித்தவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கோழியைப் பற்றி எழுதுகிறேன்.

இதன் பெயர் 'பிச்சைக்காரக் கோழி'.

மங்கிக் கசங்கிக் கந்தல் கந்தலான சிறகுகளோடு, அழுக்குப் பிடித்த கோழியொன்று தன் கழுத்தில் ஒரு தகர டப்பாவைக் கட்டிக்கொண்டு "கொக்கொக், க்ராக் க்ராக், கொரக்கோக்கோக்" என்று அதன் பாஷையில் "அம்மா தாயே" என்று கூவிக்கொண்டு திரிவது போன்ற காட்சி நம்ம ஆட்களில் சிலருக்குத் தோன்றியிருக்கும்.
இதெல்லாம் பழைய காலத்தில் ரோட் ரன்னர் ஷோ, வூடீ வூட்பெக்கர் போன்ற படங்களைப் பால்யத்தில் பார்த்த தாக்கமாக இருக்கும். அறுபது வருஷங்கள் கழித்து இப்படியாப்பட்ட உருவகங்கள் அதனால் தோன்றும்.
வயசுக் கோளாறு.

ஹாங்காங் என்றொரு நகரம் இருக்கிறது.
இணையத்தில் உள்ள சில தமிழ்ப்பற்றாளர்கள் இதை 'ஆங்காங்கு' என்று எழுதுவதுண்டு.
ஆங்கு அதாவது ஆங்காங்கில் ·பிலிப் என்றொரு டாக்டர் இருந்தார். தமிழ் இணையத்தின் மூலம் பழக்கமானவர். அவரை இப்படித்தான்...... "பிலிப்பு ஆங்காங்கு" என்று எழுதுவார்கள்.

சீனாவை ஒரு காலத்தில் சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தொண்ணூற்றொன்பது ஆண்டு காலத்துக்கு ஆங்காங்குவை லீஸ¤க்கு எடுத்திருந்தார்கள்.

சக்கரவர்த்திகள் எல்லாம் மெழுகுவர்த்தியாகவும் தீவர்த்தியாகவும் எரிந்து அணைந்து போனபின்னர் வார் லார்டுகள் ஆட்சி, க்வோமிண்டாங் ஆட்சி, சிவப்பர்கள் ஆட்சி போன்றவை சீனாவில் நடந்த போதெல்லாம்கூட பிரிட்டிஷார் கையில் அது இருந்தது. ஜப்பானியர்கள் சில காலம் ஆண்டதுதவிர மற்றபடிக்கு அது பிரிட்டிஷ்காரர்கள் கையில்தான் இருந்தது.  அவர்களும் அதைச் 'சிக்கெனப் பிடித்தேன்' என்றவாறு ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் ஹாங்காங்கில் சீனப் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.

சிவப்புக் கடலின் ஓரத்தில் ஒரு பூர்ஷ்வா பட்டினம். பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள். வெறும் வெள்ளை அல்லது சுத்தமான வேட்டியின் சுத்தமோ வெண்மையோ சும்மா எடுபடமாட்டாது. அதில் புள்ளிகள், அழுக்குத் திட்டு முதலியவை இருந்தால்தான் அதன் சுத்தம்/வெண்மை பளிச்சென்று தெரியும்.  அதுபோலவே ஏழை பாழைகள் ஏராளமாக இருந்தால்தான் இந்த பூர்ஷ்வாக்களின் தனித்துவம் நன்கு எடுபடும். "எல்லாருக்கும் எல்லாம் பொதுவாகணும்; அப்புறம் ஏழைகளைக் கதைகளில்தான் பாக்கணும்" என்று பட்டுக்கோட்டையாரோ நாமக்கல்லாரோ ஒருகாலத்தில் பாடிவைத்த மாதிரி இருந்தால் என்ன ஆவது? மடு இருந்தால்தானே மலைக்குப் பெருமை.
இல்லீங்களா தொரைமாருங்களே?
எப்பவுமே இரண்டாம் மூன்றாம் நான்காம் தரங்கள் இருந்தால்தான் ஒண்ணான் நம்பருக்குப் பெருமை. ஒண்ணான் நம்பர் ஒண்ணான் நம்பராக இருக்கத் தகுதியில்லையென்றாலும் பரவாயில்லை. மற்றதுஹளையெல்லாம் ரெண்டாம், மூணாம், நாலாந்தரத்துக்குத் தள்ளிவிட்டால் போச்சு!
இதுதான் உலகநியதி.
உலக நீதியல்ல.

ஹாங்காங்கில் உள்ள பிச்சைக்காரர்கள் கொஞ்சம் இந்நோவேட்டிவாக உள்ளவர்கள். Necessity is the Mother of Invention என்பார்கள் அல்லவா?  பிச்சைக்காரர்களில் கொஞ்சம் எண்ட்டர்ப்ரைஸிங்காக இருந்தவர்கள் ஹாங்காங் மாநகரின் ஓரப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்கள் வளர்க்கும் கோழிகளைத் திருடி விடுவார்கள்  கோழியை அடித்துச் சிறகு இறகு எல்லாவற்றையும் பிடுங்கிவிடுவார்கள்.  கோழியின் குடல் வகையறாக்களை துவாரங்களின் வழியாக நீக்கிவிடுவார்கள்.  எங்காவது எப்படியாவது உருளைக்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, உப்பு, கீரை போன்றவற்றைத் தேடிக்கொண்டுவிடுவார்கள்.

இதையெல்லாம் கோழியின் உள்ளுக்குள் செலுத்துவார்கள்.  அதன்பின்னர் களிமண்ணை எடுத்து, கோழியின் மீது பூசி, அதை முழுக்க முழுக்க அப்பி, மூடிவிடுவார்கள்.  நெருப்பை மூட்டிவிடுவார்கள்.  நன்றாக எரியவிட்டு, அதற்குள் களிமண்ணால் பூசப்பட்ட கோழியைப் போடுவார்கள்.  அவ்வப்போது பிரட்டிவிடுவார்கள். சில மணி நேரங்கள் கழித்து கோழியை மூடியிருக்கும் களிமண், ஓடாக மாறியிருக்கும்.  அந்தச் சமயத்தில் அதை எடுத்துவிடுவார்கள்.  கல்லால் அடித்து, களிமண் ஓட்டை உடைப்பார்கள்.  சுத்தமாக நீக்கிய பின்னர், கோழியை எடுத்துக் கொள்வார்கள்.  கோழி பக்குவமாகச் சமைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கோழிக்குப் பெயர்.....
Beggar's Chicken.
அதைத்தான் பிச்சைக்காரக் கோழி என்று மொழியைப் பெயர்த்திருந்தேன்.

சில மிகப் பெரிய ஹோட்டல்களில் இந்த அயிட்டம் ரொம்ப விசேஷமான ஸ்பெஷியலிட்டியாக விளங்குவதாகச் சொல்வார்கள்.

1 comment:

  1. நகைச்சுவை மிளிர்கிறது.ஆங்கு என்ற சொல் அங்கு என்று பொருள் படுமல்லவா. இப்போதெல்லாம் 'சிக்கனை நாம் பிடிப்பதில்லை'. கோழி மார்க்கெட்டில் வெட்டுபவரே பிடித்து விட்டு வெட்டிவிடுகிறார்கள். உங்கள் கட்டுரையை நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
    கோ.புண்ணியவான்.

    ReplyDelete