'பலிக் கடா' என்ற சொல்லை சர்வசாதாரணமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலிக்காக நேர்ந்துவிடப்பட்ட கடா ஆடு. பெட்டை ஆடுகள் பலியாகக் கொடுக்கப்படுவதில்லை. கடா ஆடுகள்தாம். காலங்காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம் அது. பலிக் கடா என்பது போல இன்னொரு சொல்லும் இருக்கிறது.
'வேட்டைக் கடா'.
இது புழக்கத்தில் இல்லாத சொல். புலிவேட்டையில் பயன்படுத்தப்படுவது. இந்தக் காலத்தில் புலிவேட்டையை யார் ஆடுகிறார்கள்? புலிவேஷ ஆட்டம்தான் உண்டு. ஆடு புலி ஆட்டம்கூட இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. காம்ப்பியூட்டர் கேம்ஸில்கூட அது இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.
புலி வேட்டையாடும்போது, புலியைக் குறிப்பிட்ட இடத்திற்கு வர வைப்பதற்குச் சில முறைகள் வைத்திருப்பார்கள். அந்த இடத்திற்கு வந்துவிட்ட புலியைக் கொல்லலாம்; அல்லது கண்ணி வைத்தோ வலையிலோ, கூண்டிலோ பிடிக்கலாம். ஆனால் அந்த இடத்திற்கு புலியை எப்படி வரவழைப்பது? அதற்காக ஓர் ஆட்டுக் கடாவை அந்த இடத்தில் கட்டிவைத்துவிடுவார்கள். வேட்டைக் காரர்கள் பரண்கள்மீது அமர்ந்து காத்திருப்பர். கட்டப்பட்ட ஆடு "பே.... பே...." என்று கத்திக்கொண்டேயிருக்கும் அல்லவா? அதைக் கேட்டும், மோப்பத்தாலும் புலி அந்த இடத்திற்கு வந்துவிடும். வேட்டையாடுபவர்கள் பரணிலிருந்து சுடுவார்கள். அல்லது கண்ணிக்குள் புலி விழுந்து விடும்.
ஆட்டுக் கடாவை மீண்டும் ரீஸைக்கில் செய்து வேறொரு வேட்டைக்குப் பயன்படுத்த மாட்டார்கள். புலிக்காக விட்ட ஆடு. புலியைக் கொன்றதைக் கொண்டாடுவதற்காக அந்த ஆட்டை அடித்து பார்பக்கியூ போட்டு அவர்கள் சாப்பிட்டு விடுவார்கள். "பாவம். கடைசியாகப் புலி அதற்கென்று விடப்பட்ட ஆட்டுக்கடாவை அடித்துக் கடோசிக் கடோசியாக சாப்பிட்டுப் போகட்டுமே. அப்புறம் சுட்டுக் கொல்வோமே" என்றெல்லாம் ஜீவகாருண்யம் பார்க்கமாட்டார்கள்.
கோலாலும்ப்பூருக்கு வந்தும்கூட அங்கும் வெஜிட்டேரியன் பிட்ஸா சாப்பிடும் ஜீவகாருண்யீக்கள் இந்த மாதிரி வேட்டைக்கெல்லாம் வரமாட்டார்கள். 'வேட்டையாடு விளையாடு' என்று படம் பாட்டு எல்லாம் உண்டு. "புலி வேட்டை ஆடிவிட்டு, ஆடு புலி விளையாடியதால் அந்த சொல் வழக்கு ஏற்பட்டது," என்று சொல்பவர்கள் சொன்னால் நம்ம ஆட்களில் பலர் அப்படியே நம்பிவிடுவார்கள்.
"Lost World" என்னும் "Jurassic Park" இன் இரண்டாம் பாகத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் மறந்துபோய்விட்டிருக்கும். அதில் டைரானோஸாரஸைப் பிடிக்க ஓர் உத்தியைக் கையாளுவார்கள். ஒரு குட்டி டைரானோஸாரஸ் ரெக்ஸின் காலை உடைத்து, அதனைக் காயப் படுத்தி, ஓரிடத்தில் கட்டிவைத்து விடுவார்கள். அதன் பெற்றோர் அதனைத் தேடி வருமல்லவா?
அதான் வந்தனவே?
பார்த்திருப்பீர்களே?
அந்த காட்சியில் "வேட்டைக் கடா"வுக்குப் பதில் ஒரு "வேட்டை டைரானொஸாரஸ் ரெக்ஸ்" இருந்தது.
அதான் வித்தியாசம்.
புலியை முறத்தால் அடித்து விரட்டும் வீரமகளிர் வழி வந்த தமிழர் இப்படி புலியை ஏமாற்றி வேட்டையாடுவார்கள? - மலேஷியாவில் ஓராண்டும், யூ. எஸ். ஏ இல் 35 ஆண்டுகளாகாவும் (பெருமையுடன்) சைவச் சாப்பாடே உண்டு உயிர் வாழும் முத்துசுப்ரமண்யம்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete