Tuesday, 31 May 2011

ப்ரத்யங்கிரா வழிபாடு

சமீபத்தில் பிரத்யங்கிரா தேவி வழிபாடு பற்றிய கேள்வி வந்திருந்தது.  பிரத்யங்கிரா என்னும் தேவதை ஒருத்தி இருக்கிறாள் என்பதுகூட பல நூற்றாண்டுகளாக அதிகம் தெரியாமல் இருந்தது. தாந்திரீக முறைகளைக் கற்றவர்கள் மட்டுமே இந்த தேவியை அறிவார்கள். 

ஒட்டியம் அல்லது க்ஷுத்ர சாத்திரம், ஆபிசார பிரயோகம் எனப்படும் மாந்திரிக வகையின் பிரயோகங்களை முறியடிக்க இந்த தேவதையின் வழிபாடு பயன்படுத்தப்பட்டது. 

மிகவும் உக்கிரமான தேவதை. ஆனால் ஆற்றல் மிகுந்தவள். 

ஒரு கோயில். பிரம்மாண்டமான கோயில். மாலிக் கஃபூரின் படையாலும் பின்னால் வந்தவர்களின் படையாலும் பாழ்படுத்தப்பட்டு பெரும்பகுதி அழிக்கப்பட்ட கோயில்.  ஆனால் அங்கு ஒரு முக்கிய கர்ப்பகிரகம், முன்மண்டபம், ராஜகோபுரம் ஆகியவை மட்டும் ஏனோ விடுபட்டன. இன்னொரு கர்ப்பக்கிரகம் மறைக்கப்பட்டு, அந்த வகையில் பாதுகாக்கப் பட்டது. 

அந்த முன்மண்டபத்தில் சரபருடன் சூலினி துர்க்கையும் பிரத்தியங்கிராவும் இருக்கும் பெரிய சிற்பங்கள் இருக்கின்றன.  இன்றும் இருக்கின்றன. 

இடத்தைச் சொல்லமாட்டேன். 

அப்புறம் அதற்கும் ஒரு வேலி போட்டு, டிக்கட் விற்று, காசு வசூலிப்பார்கள்.  வீஐப்பி எவனாவது வந்தால் அவனுக்கென்று எல்லாரையும் காக்கவைப்பார்கள். விதவிதமான சடங்குகளையும் பூஜைகளையும் ஹோமங்களையும் திணித்துப் பணம் பறிப்பார்கள்.  பத்து ரூபாய், இருபத்தைந்து ரூபாய், ஐம்பது, இருநூற்றைம்பது, ஐந்நூறு, ஆயிரம் என்ற வகையில் தரிசன ரேட்டுகள் நிறுவப்படும். 

ஆகையால்......

அவர்கள் அங்கே அப்படியே இருக்கட்டும். Let us not disturb their thousand years of peace. 

இன்றும் சக்தி வழங்கிக்கொண்டு ஆற்றலுடன் இருந்துகொண்டுதான் வருகிறார்கள். 

இத்தனை நூற்றாண்டுகளாகக் கடுமையான பாதிப்புகளுக்கு, மிகவும் விஷயம் தெரிந்தவர்களால், மிக அரிதாக, பிரத்தியங்கிராவின் ஆற்றல் பிரயோகம் நடந்துவந்திருக்கிறது. 

ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது.

எதற்கெடுத்தாலும் பிரத்தியங்கிரா ஹோமம் செய்கிறார்கள். 

'கொசுவை அடிப்பதற்கு சம்மட்டியா?' என்று கேட்பார்கள். அதுபோலத்தான். அடிக்கடி எங்காவது பிரத்தியங்கிரா லட்சார்ச்சனை, மஹாஹோமம், சஹஸ்ரஹோமம், என்று விதவிதமாகச் செய்துகொண்டு வருகிறார்கள். 

'வைரி விநாசனம்' என்றால் என்ன? வைரி என்னும் விரோதி யார்?  நாம் ஒரு வியாபாரம் செய்கிறோம். இன்னொருவன் ஆரம்பிக்கும் இன்னொரு வியாபாரம் நம்மைப் பாதிக்கும். அது இயற்கைதான்.  ஆனால் நடப்பது என்ன? உடனே பிரத்தியங்கிரா ஹோமம் செய்வான்.  இந்தப் பேயாண்டிப் பூசாரி அடுத்தாற்போல அந்த இன்னொரு வியாபாரியிடம், இவன் செய்த பிரத்தியங்கிரா ஹோமத்தைப் பற்றி சொல்லிவிடுவான்.  உடனே அவனும் ஒன்றைச் செய்வான்.  அவ்வப்போது மஹா பிரத்தியங்கிரா ஹோமம் என்று நடைபெறும். இருபத்தைந்து, ஐம்பது, இருநூற்றைம்பது என்று டிக்கெட்டுகள்.  ராமன், ராவணன், வாலி, கபந்தன், தாடகை, ஹிட்லர், சர்ச்சில், வாஜ்பாயி, சோனியா என்று எல்லாரும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பார்கள்.  அனைவருக்கும் ஒரே ஹோமமாகச் செய்வான் அந்தப் பூசாரி. 

இதில் சிந்திக்கவேண்டியது ஒன்று உண்டு.  இம்மாதிரியான மந்திரங்களைக் கற்கும்போது செய்துகொள்ளும் பிரதிக்ஞை, சங்கல்ப்பம் ஆகியவை இருக்கின்றன.  அவை உடைக்கப்படுகின்றன. 

இந்த அளவுக்கு அதிகமாக பிரத்தியங்கிராவை ஏவிவிடுவதற்கு உண்டான முகாந்திரம்தான் என்ன? 

மலேசியாவில் அடிக்கடி பெரிய அளவில் நடக்கும். ரேடியோ, டீவீயெல்லாம் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து பேட்டியெல்லாம் எடுக்கும். பேப்பரில் அரைப்பக்க விளம்பரங்கள். 

இதில் என்ன வேடிக்கை என்றால், 'லோகக்ஷேமத்'துக்காகச் செய்வதாக விளம்பரப் படுத்துவார்கள்.  காதுல பூ.

பக்கத்து வீட்டுக்காரன் மூன்றாம் வீட்டுக்காரனுக்கும், எதிர்வீட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரனுக்கு எதிராகவும் பிரயோகம் செய்வது எப்படி லோக க்ஷேமத்தை ஏற்படுத்தும்? ஏற்படுத்தமுடியுமா? 

'சர்வ ஜன விநாசனம்' என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 

சமீப காலமாக பிரத்தியங்கிரா கோயிலுக்குப் படை படையாக' பஸ் பஸ்ஸாக மக்கள், கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனராம். எல்லாம் அந்த அம்மையார் மகிமை.  நான் பிரத்தியங்கிராவைச் சொல்லவில்லை.

அந்த தேவதையைப் பற்றி அறிந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதனை எதற்காக வழிபடுகிறார்கள் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.  அநியாயமான முறையில் கெடுதலையும் இடையூறையும் செய்யும் விரோதியை அழிப்பதில் தவறேயில்லை. உண்மையில் பார்க்கப்போனால் அதுதான் கிரமமும்கூட. அதனைச் செய்யவில்லையென்றால்தான் நாம் நம் கடமையிலிருந்து தவறியவர்களாக ஆகி விடுகின்றோம்.

'துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது ராஜநீதி. 

'பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்' என்பது கீதாவாசகம்.

கந்தர் ஷஷ்டி கவசத்தில் தன்னைத் தற்காத்துக்கொள்வது மட்டுமல்லாது, நமக்குக் கெடுதல் செய்யும் agency-களை முற்றிலும் அழிப்பதற்கு வேலாயுதத்தை ஏவச்செய்யும் மந்திரப்பகுதி விளங்குகிறது. 

'மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட' என்று சொல்கிறது.  அவனவன் செய்வதை செய்து கொள்ளட்டும் என்று போலியான அஹிம்ஸையைப் போதிக்கவில்லை. அதற்குண்டானதை அவனவன் அனுபவிக்கட்டும் என்று வாளாவிருக்கச் சொல்லவில்லை.

ஆனால்.......
பிரத்யங்கிரா போன்ற தேவதையர்களிடம் கொஞ்சம் பதனமாக இருக்கவேண்டியிருக்கும். Overkill என்ற சொல் அதிகம் அடிபடக்கூடியது.  சில பிரயோகங்கள் அப்படித்தான். எங்கு போய்த் தாக்கும், எப்படித் தாக்கும் என்பதைக் கட்டுப்படுத்த முடியாது.  பிரத்யங்கிராவாவது பரவாயில்லை. பக்கத்து ஊரில் ஒரு நபர். அவர் பேராக் என்னும் மாநிலத்தில் ஓரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்றை வீட்டிற்கு வெளியில் வைத்துக் கொண்டிருந்தார்.  அதுவும் சிம்ஹமுகி என்று சொல்லப்படும் அம்சத்துடன் இருக்கும் தேவதைதான். ஆனால் அது மிகவும் உக்கிரமான தேவதை. திபெத், நேப்பால், மாங்கோலியா முதலிய இடங்களில் அந்த தேவதையின் வழிபாடு உண்டு.

மலேசியாவில் க்ஷுத்ர தேவதைகளை வழிபடும் வழக்கம் மிகவும் அதிகமாகி வருகிறது.  பிரத்யங்கிரா க்ஷுத்ரதேவதையில்லை. நல்ல தேவதைதான். ஆனால் அதி உக்கிரமானவள்.  சில நேரங்களில் நாய்கள் திடீரென்று ஒட்டுமொத்தமாக ஊளையிடும். அப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தவண்ணம் மனதிற்குள் மந்திரத்தைச் சொன்னால்கூட, அந்த ஊளைகள் அடங்கிவிடும். 

ஆனால் அதற்கு அந்த மந்திரம் நம் வசப்பட்டிருக்கவேண்டும். அந்த குறிப்பிட்ட மந்திரம் நமக்கு சித்தியாகியிருக்கவேண்டும். நாம் சொன்னபடி அது பிரயோகம் ஆகவேண்டும்.  பெருவாரியாகக் காசை வாங்கிக்கொண்டு அன்றைக்கென்று மந்திரத்தைச் சொல்லிச் சொல்லி 'ஸ்வாஹா, ஸ்வாஹா' என்று கண்டதையெல்லாம் நெருப்பில் போடுவதால் என்னத்தைச் சாதிக்கமுடியும்?  எங்கும் எப்போதும் சுபிட்சத்தைத் தரும் வழிபாடுகள் இருக்கின்றன. 
அவற்றை ஏன் செய்யமாட்டாமல் இருக்கிறார்கள்? 

Monday, 30 May 2011

வேட்டைக் கடா

'பலிக் கடா' என்ற சொல்லை சர்வசாதாரணமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  பலிக்காக நேர்ந்துவிடப்பட்ட கடா ஆடு.  பெட்டை ஆடுகள் பலியாகக் கொடுக்கப்படுவதில்லை.  கடா ஆடுகள்தாம். காலங்காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம் அது.  பலிக் கடா என்பது போல இன்னொரு சொல்லும் இருக்கிறது.

'வேட்டைக் கடா'.
இது புழக்கத்தில் இல்லாத சொல்.  புலிவேட்டையில் பயன்படுத்தப்படுவது.  இந்தக் காலத்தில் புலிவேட்டையை யார் ஆடுகிறார்கள்?  புலிவேஷ ஆட்டம்தான் உண்டு.  ஆடு புலி ஆட்டம்கூட இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.  காம்ப்பியூட்டர் கேம்ஸில்கூட அது இல்லை.  விஷயத்துக்கு வருகிறேன்.

புலி வேட்டையாடும்போது, புலியைக் குறிப்பிட்ட இடத்திற்கு வர வைப்பதற்குச் சில முறைகள் வைத்திருப்பார்கள். அந்த இடத்திற்கு வந்துவிட்ட புலியைக் கொல்லலாம்; அல்லது கண்ணி வைத்தோ வலையிலோ, கூண்டிலோ பிடிக்கலாம்.  ஆனால் அந்த இடத்திற்கு புலியை எப்படி வரவழைப்பது?  அதற்காக ஓர் ஆட்டுக் கடாவை அந்த இடத்தில் கட்டிவைத்துவிடுவார்கள். வேட்டைக் காரர்கள் பரண்கள்மீது அமர்ந்து காத்திருப்பர்.  கட்டப்பட்ட ஆடு "பே.... பே...." என்று கத்திக்கொண்டேயிருக்கும் அல்லவா?  அதைக் கேட்டும், மோப்பத்தாலும் புலி அந்த இடத்திற்கு வந்துவிடும்.  வேட்டையாடுபவர்கள் பரணிலிருந்து சுடுவார்கள். அல்லது கண்ணிக்குள் புலி விழுந்து விடும். 

ஆட்டுக் கடாவை மீண்டும் ரீஸைக்கில் செய்து வேறொரு வேட்டைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்.  புலிக்காக விட்ட ஆடு.  புலியைக் கொன்றதைக் கொண்டாடுவதற்காக அந்த ஆட்டை அடித்து பார்பக்கியூ போட்டு அவர்கள் சாப்பிட்டு விடுவார்கள். "பாவம். கடைசியாகப் புலி அதற்கென்று விடப்பட்ட ஆட்டுக்கடாவை அடித்துக் கடோசிக் கடோசியாக சாப்பிட்டுப் போகட்டுமே. அப்புறம் சுட்டுக் கொல்வோமே" என்றெல்லாம் ஜீவகாருண்யம் பார்க்கமாட்டார்கள்.

கோலாலும்ப்பூருக்கு வந்தும்கூட அங்கும் வெஜிட்டேரியன் பிட்ஸா சாப்பிடும் ஜீவகாருண்யீக்கள் இந்த மாதிரி வேட்டைக்கெல்லாம் வரமாட்டார்கள்.  'வேட்டையாடு விளையாடு' என்று படம் பாட்டு எல்லாம் உண்டு.  "புலி வேட்டை ஆடிவிட்டு, ஆடு புலி விளையாடியதால் அந்த சொல் வழக்கு ஏற்பட்டது," என்று சொல்பவர்கள் சொன்னால் நம்ம ஆட்களில் பலர் அப்படியே நம்பிவிடுவார்கள்.

"Lost World" என்னும் "Jurassic Park" இன் இரண்டாம் பாகத்தைப் பார்த்திருப்பீர்கள்.  ஆனால் மறந்துபோய்விட்டிருக்கும்.  அதில் டைரானோஸாரஸைப் பிடிக்க ஓர் உத்தியைக் கையாளுவார்கள். ஒரு குட்டி  டைரானோஸாரஸ் ரெக்ஸின் காலை உடைத்து, அதனைக் காயப் படுத்தி, ஓரிடத்தில் கட்டிவைத்து விடுவார்கள். அதன் பெற்றோர் அதனைத் தேடி வருமல்லவா?
அதான் வந்தனவே?
பார்த்திருப்பீர்களே?
அந்த காட்சியில் "வேட்டைக் கடா"வுக்குப் பதில் ஒரு "வேட்டை டைரானொஸாரஸ் ரெக்ஸ்" இருந்தது.
அதான் வித்தியாசம்.

Friday, 27 May 2011

சாந்தியின் மதிப்பு

Taoism என்றொரு சமயம் இருக்கிறது. சீனாவில். லாவோட்ஸ என்பவரால் தோற்று விக்கப்பட்டது என்பார்கள். மிகவும் பழமையான சமயம்.  தாவொயியர்களிடையே வழங்கும் ஒரு கதை.  இதை ஏற்கனவே அகத்தியத்தில் போட்டு, இறுதியில் ஒரு கேள்வியையும் கேட்டிருந்தேன்.  யாருமே இன்றுவரை பதில் சொல்லவில்லை.  இப்போது புதிய ஆட்கள் பலர் இருக்கிறார்கள்.  ஆகவே மீண்டும் இந்தக் கேள்வியை மிதக்கவிடுகிறேன்.  இதே மாதிரி கதை நம்மிடமும் உண்டு. 
அது என்ன கதை?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

ஒரு சன்னியாசி காட்டில் ஒரு கல்லைக் கண்டெடுத்தார்.  அதை அவருடைய தொங்கு மூட்டையில் வைத்துக்கொண்டு வந்தார். ஓர் ஊரை ஒட்டிய பெரிய மரத்தடியில் இருந்த கல்மேடையில் தம்முடைய மூட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். 

அப்போது ஒருவன் வேகமாக ஓடிவந்தான். 

அவன் அந்த சன்னியாசியைக் குலுக்கி எழுப்பி, "எங்கே அந்தக் கல்? அந்த அரிய கல் எங்கே? அதை கொடு" என்றான்.  "என்ன கல்?" என்று சன்னியாசி கேட்டார்.  நேற்று இரவு நிதிக் கடவுள் என் கனவில் வந்தார். அவர் " இந்த ஊருக்கு வெளியில் தங்கி யிருக்கும் சன்னியாசியிடம் ஒரு கல் இருக்கும். அது உன்னை மிகப் பெரிய செல்வந்தனாக ஆக்கும்", என்று என்னிடம் சொன்னார்.       சன்னியாசி தம்முடைய மூட்டைக்குள் குடைந்து அந்தக் கல்லை எடுத்தார். 

"நான் இந்தக் கல்லைத்தான் காட்டில் கண்டெடுத்தேன். விசித்திரமான கல். ஆகவே கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தா. உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்," என்று சொல்லி விட்டு அந்தக் கல்லை அவனிடம் கொடுத்துவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் மூட்டையைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து, மறுபுறம் திரும்பிக்கொண்டு முழங்கால்களை மடக்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கலானார். 

அந்த மனிதன் தன் கையிலிருந்த கல்லை மிகவும் வியப்புடன் பார்த்தான்.  அவனுடைய உள்ளங்கையை நிரப்பிக்கொண்டு அந்தக் கல் இருந்தது.   
உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல்!

வீட்டுக்குத் திரும்பினான். 
தூக்கமே வரவில்லை. 
இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டேயிருந்தான். ஒரே குழப்பம். சிந்தனை.     
விடிந்தவுடன் வேகமாக அந்த மரத்தடிக்குச் சென்றான். சன்னியாசி இன்னும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். 

அவரைக் குலுக்கி எழுப்பிச் சொன்னான், 

"இந்த மகத்தான விலை மதிப்பில்லாத உயர்ந்த வைரத்தை, கூழாங்கல்லை எறிவது போல சர்வசாதாரணமாக எறியச் செய்த மிகப்பெரும் அரிய செல்வம் எதையோ நீ வைத்திருக்கிறாய். 
அதை எனக்குத் தா!"

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

சரி. யோசித்துப்பாருங்கள்.

Wednesday, 25 May 2011

ஜேக்பாட்!!!

முதியவர் ஒருவர், பல ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டிருந்தார். 
பரிசே விழுந்ததில்லை. "சரி, இது போதும். இதற்குமேல் வாங்கும் வழக்கத்தை நிறுத்திவிடுவோம்", என்று உறுதிசெய்துகொண்டு, ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டார்.  வீடு திரும்பும்போது நெஞ்சு வலி. ஹார்ட் அட்டாக்!

மருத்துவமனையில் சீசீயூவில் வைத்து தீவிர வைத்தியம் செய்தார்கள். பிழைத்துகொண்டார்.  அடுத்தநாள் அவருக்கு ஜேக்பாட் விழுந்தது. பரிசுப்பணத்தை வாங்க வேண்டும்.  ஆனால் இதை எப்படிச்சொல்வது? அதிர்ச்சியில் இருதயம் நின்றுவிட்டால்?  ஆகவே உறவினர்கள் அவருடைய டாக்டரிடம் சென்றார்கள். அவரையே விட்டு பக்குவமாகச் சொல்லச்சொன்னார்கள்.

பேஷண்ட்டிடம் டாக்டர் சென்றார்.

"ஹலோ! எப்பிடி இருக்கீங்க மிஸ்டர் சோணாசலம்?"

"ஒங்க புண்ணியத்துலயும் கடவுள் கிருபையாலும் பொழச்சுக்கிட்டேன், டாக்டர்".

கொஞ்சம் பரிசோதனை; குசலங்கள்; மருத்துவ ஆலோசனை.

"அதுசரி. மிஸ்டர் சோணாசலம்? நல்லா பொழச்சுட்டீங்க. இனிமேல ரொம்ப நாளு நீங்க ருப்பீங்க. சந்தோஷமா இருக்கோணும். அதுக்கு ஏத்தாப்புல ஒங்களுக்கு ஜேக்பாட் விழுந்தா என்ன செய்வீங்களாம்?

"டாக்குட்டரய்யா, இப்ப நான் உசிரோட இருக்கேன்னாக்க அது ஒங்கனாலதான், டாக்டர். வாநாள் பூரா லாட்டிரி லாட்டிரின்னுட்டு பணத்தத் தொரத்திக்கிட்டே கழிச்சுப்புட்டேன். யிப்ப உசிரு பொழச்சு வந்ததுக்கப்புறந்தான் வாழ்க்கையில பணத்த விட முக்கியமா இருக்குறது எவ்வுளவோ இருக்குன்னு தெரிந்சுது. கையி காலு சொகத்தோட, கெடச்சத தின்னுக்கிட்டு, மூச்சு விட்டுக்கிட்டு திருப்தியா இருந்தாவே பெரிசு; வெந்ததத் திண்ணு, திண்ணயில தூங்கி விதி வந்தாச் சாவம்னுட்டு எங்க அப்பத்தாக் கெழவி சிங்கம்பிடாரியா அடிக்கடி சொல்லுவான்னுட்டு சொல்லுவாஹ. எனக்குத்தான் அதெல்லாம் இது நால வரெய்க்கும் தெரியாம போச்சு. இப்பத்தான் எது உம்மையில நெறவு, எது கொறவு எதுன்னு தெரிஞ்சுச்சு. டாக்குட்டரய்யா அதுபோதும். எனக்கெதுக்கு லாட்டிரியும் கீட்டிரியும். அப்புடி ஜாக்குப்பாட்டு கீக்குபாட்டுன்னு உசிரோட இருக்கும்போதே கடோசி கடோசியா விளுந்துச்சுன்னாக்க, அத அப்பிடியே வாங்கி என்னோட உசிரக்காத்த ஒங்களுக்கே குடுத்துருவேன், டாக்குட்டரய்யா".

டாக்டர் கீழே சரிந்தார்.
டாக்டருக்கு ஹார்ட் அட்டாக்!

Tuesday, 24 May 2011

காப்பியும் பாலும்

பெரிய மனிதர்களைப் பார்த்து அவர்களை Ape செய்வது சர்வசாதாரணமாகக் காணப்படுவது. அவர்களுடன் சேர்வது, அவர்களுடன் தொடர்பு இருப்பதுபோல காட்டிக்கொள்வது முதலியவை, வலியக்கப்போய் ஒட்டிக்கொள்வது, பேசுவது போன்ற பழக்கங்கள் பலருக்கு இருக்கும்.  இதை சுஜாதா 'Association with the Famous' என்று சொல்வார். அவருடன் வலிந்து பேசவோ, பழகவோ பலர் முயல்வதைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்.  பாவம். அவருடைய உண்மையான Fanகள்கூட சகட்டுமேனிக்கு இப்படி அவமானப்பட வேண்டியிருக்கிறது. எல்லாருக்குமே அந்த அவச்சொல்தானே.

கூலிட்ஜ் என்பவர் யூஎஸ்ஸின் ஜனாதிபதியாக இருந்தவர்.  அவருடைய ஊர் ஆட்களை ஒருமுறை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தார். விருந்து கொடுத்தார்.


பெரிய மனுஷாளுஹளுடன் சாப்பிடும்போது Table Manners என்பனவற்றைக் கடை  பிடிக்கவேண்டியிருக்கும்.  எப்படி உட்காரவேண்டும்; நேப்கின்னை எப்படிக் கழுத்தில் கட்டிக்கொள்ளவேண்டும், எந்த நேப்கின்னை மடியில் போட்டுக்கொள்ளவேண்டும். எதை முதலில் எப்படி சாப்பிடவேண்டும் என்று ஆயிரத்தெட்டு ஆசாரங்கள் இருக்கும்.   கூலிட்ஜின் ஊர்க்காரர்கள் 'எதற்கு வம்பு' என்று எண்ணிக்கொண்டு சாப்பிடும்போது கூலிட்ஜ் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் அப்படி அப்படியே செய்யத் தீர்மானித்தனர்.  அப்படியே சாப்பாடு நடந்துகொண்டிருந்தது.  காப்பி சாப்பிடும்வரை எல்லாம் ஓக்கே.

கூலிட்ஜ் பால் கூஜாவை எடுத்தார். எல்லாரும் பால்கூஜாவை எடுத்தனர்.

கப்பில் பாலை ஊற்றினார். அனைவரும் கப்பில் பாலை ஊற்றினர்.

கப்பை எடுத்தார். அனைவரும் கப்பை எடுத்தனர்.

ஸாஸரில் கப்பிலிருந்து பாலை ஊற்றினார். அனைவரும் ஸாஸரில் பாலை ஊற்றினர்.

ஸாஸரைக் கையில் எடுத்தார். அனவரும் எடுத்தனர்.
So far so good.

கீழே குனிந்தார். தரையில் ஸாஸரை வைத்தார்.

அவருடைய செல்லப்பூனை அங்கிருந்தது. 
அது ஸாஸரிலிருந்த பாலைக் குடிக்கலாயிற்று.....

Aping Technic எப்போதும் வேலை செய்யாது. 


அதுசரி!
உங்களில் யாருக்காவது 'காப்பி அடிக்கும் குரங்கு' கதை தெரியுமா?

Monday, 23 May 2011

கோமயத்தை காசாக்கும் வித்தை

மலேசியாவில் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அபிஷேகம், விசேஷப்பூஜை என்று பெருமளவிலும் சிறிய அளவிலும் ஏராளமாகச் செய்கிறார்கள்.  ஒரு காலத்தில் இப்படியெல்லாம் இந்த அளவுக்கு இல்லை.  பூஜைகளும் எளிமையானவையாக இருக்கும்.  இப்போது மிக அதிகமான சரக்குகள், பொருட்களுடன் சிறு சிறு பூஜைகள்கூட செய்யப்படுகின்றன. 

முன்பு ஒருமுறை கோமயம் என்னும் மாட்டு மூத்திரத்தை விற்பதைப் பற்றி எழுதி யிருந்தேன்.   மலேசியாவில் அதையெல்லாம் ஒரு காலத்தில் பூஜைகளில் சேர்த்துக்கொண்டதுகூட கிடையாது. யார் போய் மாடுகள் இருக்கும் இடத்துக்குச் சென்று மாட்டு மூத்திரம் கலெக்ட் பண்ணுவது?  


ஆனால் சில ஆண்டுகளாக மாட்டு மூத்திரம் பிலாஸ்ட்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.  அதற்கும் மார்க்கெட் நிலவரங்கள் இருக்கும்போல.  முன்பு ஒரு சிறிய பாட்டில் 2 ரீங்கிட் 70 காசுக்கு விற்கப்பட்டது.  அதன்பின் பார்த்தபோது நூறு மில்லி பாட்டில் மாட்டு மூத்திரம் 1 ரீங்கிட் 20 காசு விலையாக இருந்தது.  மார்க்கெட் எனப்படும் சந்தைத்தனம் இதற்கும் ஏற்பட்டுவிட்டது.

Supply And Demand, Glut, Mass Production, Distribution, Advertising, Sales, Display, Promotion, இத்யாதிகளுக்கு இதுவும் ஆட்பட்டுவிட்டது.  நான் பார்த்த ஷெல்·பில் இரண்டு பிராண்டு மாட்டு மூத்திரம் இருந்தது.  இரண்டிலும் லேபில் இருந்தது.  அதில் ஒன்றில் ****- கோமியம்' என்று போட்டிருந்தது. இன்னொன்றில் பெயர்  கிடையாது.  ஒரு லேபிலில் சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பசுமாடு. அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பசுமாட்டின் படம்.  இன்னொன்றில் கன்றும் பசுவும்.  கன்று பால் குடித்துக்கொண்டிருக்கிறது.  இதுதான் ரொம்பவும் உதைத்தது.  பசுவின் பாலை விற்பதற்கு இந்தப் படத்தைப் பயன்படுத்தலாம்.  பசுவின் மூத்திரத்திற்கு வேறு மாதிரியாகவல்லவா இருக்கவேண்டும்?  சிவப்பு எழுத்துக்களில் 'அருந்தக்கூடாது' என்றும் லேபிலில் போட்டிருந்தார்கள். 

வீட்டையும் பூஜை செய்யும் இடத்தையும் புனிதப் படுத்துவதற்காக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது. அதனால் இந்த நிலை. 

பூஜை செய்யும் இடத்தைப் புனிதப்படுத்துவதற்குச் செய்யவேண்டிய முக்கிய வேலை ஒன்று இருக்கிறது. 
சாணத்தைக் கரைத்து அந்த இடத்தை மெழுகிட வேண்டும்.  யாகம், ஹோமங்களுக்குக் கூட அதை யாரும் செய்வதில்லை. 

அதையும் ஸ்பெஷலிஸ்ட் பூசாரிகள், இந்து சமய இயக்கத் தலைவர்கள் வற்புறுத்தக்கூடும். 

அப்போது மாட்டு சாணத்தையும் ஏதாவது டப்பியில் அடைத்து விதம் விதமாக லேபில் ஒட்டி விற்பார்கள். 

Then they will be selling real Cow Shit.

Now they are already selling Bull Shit.

"நீ பிரதமர் ஆவாய்!"

மலேசியாவின் வரலாறு பல தமிழர்களுக்குத் தெரியாது.  சுருக்கமாகச் சொல்லப்போனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரிக நாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.  ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவிஜயம் என்னும் பேரரசின் முக்கிய பகுதியாக விளங்கியது. அதன் பின்னர் மஜாப்பாஹிட் என்னும் ஜாவானிய இந்துப் பேரரசின் கீழ் இருந்தது.  சுமாத்ராவிலிருந்து ஓடிவந்த பரமேஸ்வரா என்னும் மலாய் இந்து மன்னன் மலாயாவின் தென்பகுதியில் மலாக்கா என்னும் துறைமுகப் பட்டினத்தையும் ஒரு ராஜ்யத்தையும் தோற்றுவித்தான். பின்னர் முஸ்லிமாக மாறிய அந்த மன்னனின் கீழ் மலாக்கா 'சுல்த்தானேட்' என்னும் அந்தஸ்தைப் பெற்று அந்த வட்டாரத்தின் முக்கிய துறைமுக வாணிப மையமாகவும் மாறியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அது போர்த்துகீசியர்கள் வசமாகியது. அவர்களிடமிருந்து டச்சுக்காரர்களிடமும் கடைசியில் பிரிட்டிஷ்காரர்களிடமும் போய்ச் சேர்ந்தது.  1785-ஆம் ஆண்டு பினாங்குத் தீவில் கால் விரலூன்றிய பிரிட்டிஷ்காரர்கள் மலாயா முழுவதையும் போர்னியோத்தீவின் வடக்கு வடமேற்குப் பிரதேசங்களையும் பிடித்து ஆட்சி புரிந்தார்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியர்கள் பிடித்துக்கொண்டனர். 1945-இல் மீண்டும் பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினர்.  அப்போதிருந்து சுதந்திர உணர்வு மலாயர்களுக்கு அதிகரித்தது.  சுதந்திரம் கொடுத்துவிட்டுப்போக நினைத்த பிரிட்டிஷ்காரர்களுக்கு யாரிடம் கொடுத்து விட்டுப்போவது என்பது ஒரு பிரச்னையாகியது. 

அது ஒரு பெரிய கதை. 

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் கொண்ட முக்கூட்டுக் கட்சி அணியிடம் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி நாட்டை ஒப்படைத்தனர்.  சுதந்திர மலாயாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா.  அவர் ரிட்டயர் ஆகிய பின்னர் 'ஸ்டார்' என்னும் பத்திரிக்கையில் The Tunku Tapes என்னும் தொடர் ஒன்றை எழுதுவித்து வந்தார்.  அதில் ஓர் இடத்தில் கூறியிருந்ததாவது:

"என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நடந்துவிட்டன. அவற்றைப் புறக்கணிக்கவோ, மறக்கவோ என்னால் முடியாது.  ஓர் இந்திய ஜோதிடரை நான் மறக்கவே முடியாது.  பகடைக்காய்களை உருட்டிப் பார்ப்பவர்.  1939-ஆம் ஆண்டில் நான் கூலிம் என்னும் ஊரில் மாவட்ட அதிகாரியாக இருந்தேன். 
அப்போது ஜப்பானியர்கள்கூட இன்னும் வரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி.  அப்போதுதான் அந்த ஜோதிடர் வந்தார்.  என்னைப் பார்த்துவிட்டு, "நீங்கள் ஒரு காலத்தில் மலாயாவின் முதல் பிரதம மந்திரியாக ஆவீர்கள்" என்று சொன்னார். அனைவரும் சிரித்தார்கள். நானும் சிரித்தேன். எப்படி ஒரு சாதாரண மாவட்ட அதிகாரி ஒரு நாட்டின் பிரதமராக முடியும்?  ஆனால் அவர் சொன்னார்: "இப்போது நீங்கள் சிரிப்பீர்கள். சிரியுங்கள். ஆனால் அதைத்தான் கிரகங்கள் காண்பிக்கின்றன."

இது 1939-இல் நடந்தது. 
1957-இல் நான் சுதந்திர மலாயா நாட்டின் முதல் பிரதம மந்திரியாகினேன்......."

Friday, 20 May 2011

துன்பம் நேர்கையில்

மோட்டிவேஷனல் புத்தகங்கள் ஏராளமாக வந்துவிட்டன. புதிய புதிய பெயர்கள் இப்போதெல்லாம் நிறைய அடிபடுகின்றன. 

Chicken Soup for the Soul  என்னும் தலைப்பில் இதுவரைக்கும் 108 புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த நூல்களின் ஆசிரியர்கள் இருவரில் Jack Canfield என்பவர் ஒருவர். அவரும் இப்போது மோட்டிவேஷனல் புத்தகங்கள் எழுதுவதோடு பல செமினார்களையும் நடத்துகிறார்.  இருபதாம் நூற்றாண்டில் பேர் போட்டவர்கள் என்றால் அந்த லிஸ்ட் மிகவும் நீளமாக இருக்கும். இருந்தாலும் அந்த லிஸ்ட்டை ஷார்ட்-லிஸ்ட் செய்தால் இருக்கும் பெயர்கள் குறிப்பிட்ட சிலவாக இருக்கும். 
Napoleon Hill, Dale Carnegie, Norman Vincent Peale, Maxwell Maltz, Wayne Dyer, Denis Waitley, Anthony Robbin, Steven Covey, Edward de Bono, Zig Zigler, Og Mandino என்று விளங்கும். 

இந்த லிஸ்ட்டில் ஷ¤ல்லர் என்ற பெயரும் நிச்சயம் ஏறியிருக்கும். Robert Shuller என்ற பெயரில் அப்பா-மகன் ஆகிய இருவரின் பெயர்கள்.  அவர்கள் எழுதிய புத்தகங்கள் அளவில் சற்றுச் சிறியவையாக இருக்கும்.  ஆனால் விஷயத்தில் பெரியவை.  மூத்த ஷ¤ல்லரால் எழுதப்பட்ட நூல்:

'Tough Times Never Last;
But Tough People Do'

அதில் காணப்பட்ட மிக முக்கியமான வாசகம் இதுதான்.

'When the Going Gets Tough,
The Tough People Get Going'

இல்லையா பின்னே? 

ஒரு Tough Situation இருந்தால் ஏன் அந்த சூழ்நிலையில் சும்மா இருக்கவேண்டும்? 

அதிலிருந்து மீளவேண்டும்; வெல்லவேண்டும்.

அதற்கு நம்மிடமே உறுதியும் நம்பிக்கையும் வலுவும் இருக்கவேண்டும். செயல்பாடு வேண்டும். 

அப்படிப்பட்ட Tough People தான் கஷ்டங்களைக் கடந்து வெற்றியையும் மகிழ்ச்சியையும் சாதனைகளையும் நோக்கி முன்னேறிச் செல்லமுடியும்.

சரஸ்வதியின் பன்னிரு நாம துதி



ரொம்பநாளைக்கு முன்னர் ஸ்ரீசரஸ்வதி தேவியின் பன்னிரு திருப்பெயர் மந்திரங்கள் அடங்கிய துதியை அகத்தியர் குழுவில் எழுதியிருந்தேன்.  சிலருக்கு அது தேவைப்படுகிறது.

ஸ்ரீசரஸ்வதிக்கு ஒரு த்வாதச நாம ஸ்தோத்திரம் இருக்கிறது. பன்னிரு நாமங்கள் கொண்டது.

ஸரஸ்வதி திவ்யம் த்ருஷ்டா
வீணாபுஸ்தக தாரிணீ
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா
வித்யா தாநகரீ மம

ப்ரதமம் பாரதீ நாம 
த்விதீயம் ச சரஸ்வதி
த்ருதீயம் சாரதா தேவீ
சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ

பஞ்சமம் ஜகதீக்யாதம்
ஷஷ்டம் வாகீஸ்வரீ தத
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா 
அஷ்டமம் ப்ரஹ்மசாரிணீ

நவமம் புத்திதாத்ரீ ச
தசமம் வரதாயினீ
ஏகாசதசம் க்ஷ¥த்ரகண்டா ச
த்வாதசம் புவனேச்வரீ

ஸர்வஸித்திகரீ தஸ்ய
ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸா மே வஸது ஜிஹ்வாக்ரே
ப்ரஹ்மரூபா ஸரஸ்வதீ:

"வித்யா தானத்தைச்செய்யும் சரஸ்வதி தேவி திவ்யமான பார்வையால் என்னைப் பார்க்க வேண்டும். அவள் வீணை, புஸ்தகம் ஆகியவற்றைத் தாங்கியவள்; அன்னப்பட்சியை வாகனமாகக் கொண்டிருப்பவள்" என்று சங்கல்பித்து அவளைக் கேட்டுக்கொண்டு,

பாரதி, 
ஸரஸ்வதி, 
ஸாரதாதேவி, 
ஹம்ஸவாஹினி,  
ஜகதி, 
வாகீஸ்வரி, 
கௌமாரி, 
ப்ரஹ்மாசாரிணி, 
புத்திதாத்ரி, 
வரதாயினி, 
க்ஷ¤த்ரகண்டா, 
புவனேஸ்வரி 

ஆகிய பன்னிரு நாமங்களால் துதிக்கிறோம்.

"அவள் எல்லாவகையான சித்திகளையும் செய்பவள். மலர்ச்சியுடன் எழுந்தருளியிருப்பவள். அவள் என்னுடைய நாவில் வசிக்கவேண்டும். அவள் பிரம்மரூபியாகிய சரஸ்வதி" என்றும் பிரார்த்திக்கிறோம்.

'க்ஷ¤த்ரகண்டா' என்பது ஒரு விசேஷமான நாம மந்திரம். 'க்ஷ¤த்ர' என்பது துர்தேவதைகள், துர்மந்திரங்கள், தீயசொற்கள், சாபங்கள் முதலியவற்றைக் குறிக்கும். அவற்றை வெட்டி அழிப்பவள். நமக்கு நன்மையைச் செய்பவள்.

Monday, 16 May 2011

பூட்டாத கதவு

இந்து சமயத்தில் ஏராளமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன.  சமயம் என்பதே இதனால் ஒரு சிக்கலான நெருக்கடியான கஷ்டமான விஷயமாக ஆகி விடுகிறது.  இவற்றிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு, இவற்றிலேயே மனத்தை லயிக்கவிட்டுக் கொண்டு, பரபரப்பாகவும் மும்முரமாகவும் செய்வதில் சமயத்தின் மையமான விஷயத்தை மறந்து போவிடுகிறார்கள்.   இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கக்கூடிய தூரமோ இடைவெளியோ ஏதும் இல்லை.

"உனக்கும் உன் கழுத்து நரம்புக்கும் இருப்பதைவிட நான் இன்னும் நெருக்கமாக இருக்கிறேன்", என்று இறைவன் சொல்லியிருப்பதாக இன்னொரு மதம் கூறுகிறது.  அப்பர் பெருமானோ, "உள்குவார் உள்கிற்று எல்லாம் உடனிருந்து அறிதி" என்று இறைவனின் நெருக்கத்தை தாமே நேரடியாக அறிந்து உணர்ந்து சொல்லியிருக்கிறார்.  இத்தனை நெருக்கமான இறைவனைச் சிந்திப்பதற்கோ, அடைவதற்கோ ஏன் இவ்வளவு சிரமம் மிக்க கடினமான பாதைகள்?

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் அகத்தியத்தில் எழுதிய மடல் ஒன்றை இங்கு முன்வைக்கவேண்டியுள்ளது. 

ஹேரி ஹ¥டினீ என்பவர் ஒரு பெரிய Escape Artist. 
அவரைச் சங்கிலிகளால் கட்டி, அவற்றையும் பெரிய பெரிய பூட்டுக்களால் பிணைத்து, பெரிய பெட்டகத்தில் வைத்து அடைத்து விடுவார்கள். 

குறிப்பிட்ட நிமிடங்களில் அவர் வெளியில் வந்துவிடுவார்.

ஒருமுறை யாராலுமே உடைக்கமுடியாத பெட்டகத்தை ஒரு கம்பெனி செய்தது. 

அதற்கு ஒரு சவாலையும் விடுத்து பந்தயமும் கட்டியிருந்தனர்.  அந்தப் பெட்டகத்திலிருந்தும் அவர் வெளியில் வந்துவிட்டார். 

சில தடவைகள் இப்படிச்செய்தனர். அவரைச் சங்கிலிகளால் பிணைத்து, ஒரு பெரிய பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி, அந்தப் பெட்டகத்தையும் சங்கிலிகளால் சுற்றி, பூட்டுக்களால் பிணைத்து, கிரேன் வைத்து ஆற்றுக்குள் இறக்கிவிட்டனர்.  அதற்குள்ளிருந்தும்கூட ஹ¥டினி வெளியே வந்து பந்தயத்தில் ஜெயித்துக் காட்டினார்.

உள்புறமிருந்து எப்படிப்பட்ட பெட்டகத்தையும் திறந்து விடுவார். பூட்டுத் திறப்பதிலும் மன்னன்.

அப்பேற்பட்ட ஆள்.
ஒரே ஒரு முறைதான் அவரால் ஒரு பெட்டகத்தைத் திறந்துகொண்டு வெளியில் வரமுடியவில்லை.

ஏன்?

யாருக்கும் ஏதும் புரியவில்லை.
ஹ¥டினீக்கும் புரியவில்லை.

ஆராய்ச்சி பண்ணினார்கள்.

ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணியபிறகு தற்செயலாகக் கண்டுபிடித்தார்கள். 

அவசரத்தில் பெட்டகத்தைப் பூட்ட மறந்துவிட்டார்கள்.

பூட்டப்பட்ட பெட்டகத்தை மட்டுமே திறந்து பழக்கப்பட்ட ஹ¥டினீக்கு, திறந்திருந்த பெட்டகத்தைத் திறந்துகொண்டு வரமுடியவில்லை. 

அதான்......

திறந்திருக்கும் வழியில் சுலபமாகச் செல்வதற்கு நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.......

ஆன்மீகத்தில்தான்.

காளமேகத்தின் கால் கணக்கு


இன்று காளமேகப் புலவரின் பாடல் ஒன்று.......



பூநக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால் பதினேழாகும் - மானேகேள்
முண்டகத்தின்மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்

பூ + நக்கி = தேனீ, தும்பி
"கொங்குசேர் வாழ்க்கையஞ்சிறைத்தும்பி" என்னும் குறுந்தொகைப் பாடல் ஞாபகத்துக்கு வரும். இல்லையென்றாலும் திருவிளையாடல் நாகேஷ¤ம் சிவாஜி கணேசனும் கொண்டுவந்துவிடுவார்கள். 
தேனீ முதலியவற்றுக்கு ஆறுகால்.
பறவைகளுக்கு 9 x 1/4 = இரண்டே கால்
ஆனைக்குக் கால் பதினேழு = 17 x 1/4 = நாலேகால்

சுருங்கச் சொல்லின், தேனீக்கு ஆறுகால்; பறவைகளுக்கு இரண்டே கால்; யானைக்கு கால் நான்கு மட்டும்.

முண்டகம் = தாமரை 
முழுநீலம் = நீலோத்பல மலர்
தாமரையின்மீது முழுநீலம் = நீலமலர் பூத்தது என்பது தாமரையாகிய முகத்தின்மீது நீலோத்பலம் போன்ற கண்களைக் குறிக்கும்.

யார் அந்த Blue-Eyed Babe?