Saturday, 23 April 2011

A Woman, A MuRam, and A Tiger

சிலநாட்களுக்கு முன்னர் பயம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருந்தேன்.  அப்போது புலியைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் கிலியைப் பற்றியும் Panic Seizure, Panic Paralysis என்பனவற்றைப் பற்றியும் எழுதியிருந்தேன். 'புலி அடித்ததோ, கிலி அடித்ததோ' என்னும் முதுமொழியைப் பற்றியும் சொல்லியிருந்தேன்.   பல சமயங்களில் அந்த பயத்தையும் ஒழித்துவிட்டு தைரியத்துடன் செயல் பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். 

ரொம்ப நாட்களுக்கு முன்னர் 'சொர்க்கவாசல்' என்னும் படம் வந்தது. அந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியவர் பேரறிஞர் அண்ணா. அதன் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. நன்றாகப் பாடுவார். பல எழுச்சி மிக்க, தமிழ் உணர்வையும் பற்றையும் தூண்டக்கூடிய பாடல்களைப் பாடியிருக்கிரார்.  அந்தப் படத்தில் ஒரு மெல்லிசைப் பாடல் வரும்.  'கன்னித் தமிழ்ச்சாலையோரம் போகையிலே கவிதைக் கனிகளுண்டு......(ஏதோ வரும். ஞாபகம் இல்லை) அந்தப் பாட்டிலே ஓரிடத்தில்.....

"சீறி வந்த புலியதனை முறத்தினாலே - அடித்து 
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!"

என்ற அடிகள் வரும். 

சில பெண்கள் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், முறத்தை வைத்துக்கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்தாள்.  அப்போது ஒரு புலி அவர்களைப் பிடிப்பதற்காக சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது.  மற்றவர்கள் பயந்திருப்பார்கள். அவர்களில் அந்த முறத்துக்காரப் பெண் மட்டும் சற்றும் பயமே இல்லாமல் கையில் இருந்த முறத்தைக் கொண்டு அந்தப் புலியைத் தாக்கினாள். சங்க காலத்துத் தமிழச்சிகளில் இப்படிப்பட்ட தைரியசாலிகள் இருந்தனர் என்று முன்பெல்லாம் மேடைப்பேச்சாளர்கள் கூறுவது உண்டு.  இப்போதும் இருக்கின்றனர்.  எப்போதும் இருந்தனர்.  எங்கும் இருந்தனர்/இருக்கின்றனர். 

வங்காள தேசத்தில் ஓரிடத்தில் வேங்கைப் புலிகள் அதிகம்.  அங்கு நஸ்மா அக்டெர் என்னும் பெண்ணும் அவளுடைய கணவனும் ஒரு கால்வாயில் இரால் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது ஒரு வேங்கைப் புலி, கணவனின்மீது பாய்ந்து, முழங்காலைக் கௌவி, அவனைக் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்றது.  இதைக் கண்ட அக்டெர், அருகில் உள்ள படகில் கிடந்த துடுப்பை எடுத்து அந்த வேங்கையை அடித்தாள். தொடர்ச்சியாக அடித்துக்கொண்டேயிருந்தாள்.  இவ்வாறு பத்து நிமிடங்கள் அடி கொடுத்து, அந்தப் புலியைத் தடுத்து நிறுத்திவிட்டாள். வேங்கை அதன் பிடியை விட்டுவிட்டது.  கடுமையாக அடி வாங்கிய வேங்கைப் புலி தப்பித்து, காட்டுக்குள் ஓடிவிட்டது.  கணவனுக்குச் சிறிய காயங்களே ஏற்பட்டன.  அக்டெருக்கு வயது பதினெட்டேதான். 

வங்கத்தில் ஒரு கேஅர் ஆர் இருந்திருந்தால் பாடியிருப்பார்...

"சீறிவந்த புலியதனைத் துடுப்பினாலே அடித்து 
சிங்கார வங்க வனிதைத் துரத்தினாளே....."

No comments:

Post a Comment